காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 87ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 27.04.2014 ஞாயிற்றுக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கி, இன்றுடன் (மே 31) நிறைவடைகிறது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.
ரஜப் 30ஆம் நாளன்று (மே 30) ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, சென்னை புகாரிய்யா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஏ.எம்.முஹ்யித்தீன் லெப்பை ஷக்காஃபீ, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவன பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ ஆகியோர் வழங்கினர்.
நேற்று 19.30 மணிக்கு, பூஸிரீ இமாம் அவர்களால் தொகுக்கப்பட்ட புர்தா ஷரீஃப் மஜ்லிஸ், காயல்பட்டினம் கடைப்பள்ளியின் இமாம் எம்.ஐ.செய்யித் முஹம்மத் புகாரீ தங்ஙள் தலைமையில் நடைபெற்றது. மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.முத்து பத்ருத்தீன் ஃபாஸீ துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
ஷஃபான் 01ஆம் நாளான இன்று (மே 31) இவ்வாண்டின் நிறைவு நாளாகும்.
இன்று அதிகாலை 05.15 மணிக்கு, இன்றைய நிறைவு நாள் நிகழ்ச்சிகளை, காயல்பட்டினம் ஹாமிதிய்யா திருக்குர்ஆன் மனனப் பிரிவு ஆசிரியர் ஹாஃபிழ் எஸ்.ஜி.நஸீம் காதிர் ஸாஹிப் கிராஅத் ஓத, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப், குருவித்துறைப்பள்ளி ஆகியவற்றின் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ நிறைவுநாள் பாடத்தை ஓதி துவக்கி வைக்கிறார்.
இன்று ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் – பெரிய குத்பா பள்ளியின் இமாமும், முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ வழங்குகிறார்.
தொடர்ந்து, கூட்டு துஆவின் மகிமைகள் எனும் தலைப்பில், மேலப்பாளையம் உதுமானிய்யா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் பி.ஏ.காஜா முஈனுத்தீன் பாக்கவீ தமிழ் மொழியிலும், கேரளா - கருநாகப்பள்ளி - தேவளகர பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் ஒய்.ஏ.தாஹா மஹ்ழரீ மலையாள மொழியிலும் உரையாற்றுகின்றனர்.
ஹாஃபிழ் எம்.ஐ.கே.செய்யித் அபூதாஹிர் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக, சீர்காழி - புத்தூர் மஸ்ஜிதுத் தக்வா பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எல்.ஹாமிதுல்லாஹ் ஃபாஸீ அபூர்வ துஆ பிரார்த்தனை இறைஞ்சி, இவ்வாண்டின் நிகழ்ச்சிகளை நிறைவுபடுத்துகிறார்.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற வலைதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.
இறுதி நாளை முன்னிட்டு, இன்று மாலையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 16.30 மணிக்கு, ஹாஃபிழ் சொளுக்கு எம்.எஸ்.அஹ்மத் ஜமீல் கிராஅத் ஓதி மாலை நிகழ்ச்சிகளைத் துவக்கி வைக்க, நபிகளார் மீதான மவ்லித் மஜ்லிஸ், மவ்லவீ ஹாஃபிழ் என்.எச்.பி.நவாஸ் மிஸ்பாஹீ தலைமையில் நடைபெறுகிறது. ஹாஃபிழ் எம்.எம்.மீரா ஸாஹிப் துஆ ஓதி நிறைவு செய்கிறார்.
17.35 மணிக்கு எம்.இ.எல்.முஹ்யித்தீன் அப்துல் காதிர், ஏ.எல்.நூருல் அமீன் ஆகியோர் ஏலம் விடும் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.
19.00 மணிக்கு, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் பங்கேற்கும் பல்சுவை இஸ்லாமிய நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
20.45 மணிக்கு, மாதிஹுல் கவ்த் மர்ஹூம் அல்லாமா சே.கு.நூகுத்தம்பி ஆலிம் முஃப்தீ அவர்களால் கோர்வை செய்யப்பட்ட ராத்திபத்துல் அஹ்மதிய்யா திக்ர் மஜ்லிஸ், ஏ.முஹம்மத் ஜியாத் தலைமையில் நடைபெறுகிறது.
21.45 மணிக்கு, நிறைவு நாள் சிறப்பு நிகழ்ச்சிகளின் கடைசி கட்ட நிகழ்ச்சிகளை, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் மாணவர் ஹாஃபிழ் என்.ஏ.சாலிஹ் நுஸ்கீ கிராஅத் ஓதி துவக்கி வைக்க, மஜ்லிஸ் வளைவுகளில் பதியப்பட்டிருக்கும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, மவ்லவீ ஹாஃபிழ் ஏ.எல்.ஜாஃபர் ஸாதிக் மன்பஈ வழங்குகிறார்.
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் ஹாஃபிழ் ‘முத்துச்சுடர்’ என்.டி.ஸதக்கத்துல்லாஹ் நன்றி கூற, இலங்கை - கொழும்பு இஹ்ஸானிய்யா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டி.ஏ.முஹம்மத் ஹல்ஜீ ஃபாஸீ துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுறுகின்றன.
நாளை (ஜூன் 01) காலை 06.00 மணி முதல் 08.30 மணி வரை நேர்ச்சை வினியோகம் செய்யப்பட, அத்துடன் அனைத்து நிகழ்ச்சிகளும் நிறைவுறும்.
இன்றைய நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக உள்ளூரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், வெளியூர்களிலிருந்தும் பெருந்திரளாக மக்கள் வந்தவண்ணம் உள்ளனர். அவர்கள் அமர்வதற்காக வழமையான பந்தல் ஏற்பாடுகள் தவிர, குருவித்துறைப்பள்ளி வட கிழக்குப் பகுதி மைதானம், முத்துவாப்பா தைக்கா தெரு, ஈக்கியப்பா தைக்கா வளாகம், பெரிய முத்துவாப்பா தைக்கா வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆறுமுகநேரி காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அனைத்து நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளையும் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் நிர்வாகிகள் மற்றும் வைபவக் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1435ஆம் ஆண்டு நிறைவு நாட்களின் நிகழ்ச்சி நிரலைக் காண இங்கே சொடுக்குக!
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1435ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1434ஆம் ஆண்டு (கடந்தாண்டு) 30ஆம் நாள் அபூர்வ துஆ நிகழ்ச்சிகள் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[செய்தி திருத்தப்பட்டது @ 15:15 / 31.05.2014] |