காயல்பட்டினம் நகராட்சிக்கு ரூபாய் 1 கோடியே 30 லட்சம் செலவு மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் துவக்க விழா 26.02.2015 வியாழக்கிழமையன்று 10.30 மணியளவில், நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.
திருச்செந்தூர் கோட்டாட்சியர் தியாகராஜன் தலைமை வகித்தார். காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ் திட்ட விளக்கவுரையாற்றினார். நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் வரவேற்புரையாற்றியதோடு, நகராட்சி அலுவலக புதிய கட்டிட மாதிரி வரைபடத்தைப் பொதுமக்களுக்குக் காண்பித்து அறிமுகப்படுத்தினார்.
தமிழக அரசின் சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பீ.சண்முகநாதன் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, புதிய கட்டிடத்திற்கான கட்டிடப் பணிகளைத் துவக்கும் வகையில் முதல் எடுத்துக் கொடுத்தார்.
அவரைத் தொடர்ந்து, நகர்மன்றத் தலைவர் மற்றும் அதிகாரிகள் அடுத்தடுத்த கற்களை எடுத்துக் கொடுக்க, அவை பூமிக்குள் பதிக்கப்பட்டு, கட்டிடப் பணிகள் முறைப்படி துவக்கப்பட்டது.
பின்னர், சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பீ.சண்முகநாதன் சிறப்புரையாற்றினார். அவரது உரைச் சுருக்கம் வருமாறு:-
தமிழக முதல்வராக ஜெயலலிதா 3ஆவது முறையாகப் பொறுப்பேற்ற பின்னர், தனியார் வாடகைக் கட்டிடங்களில் இயங்கி வந்த அனைத்து அரசு அலுவலகங்களையும் அரசுக்குச் சொந்தமான கட்டிடங்களில் இயங்கிட நடவடிக்கை மேற்கொண்டார். அதன் பயனாக, 4 ஆண்டுகளில் புதிதாகப் பல அரசு கட்டிடங்கள் கட்டுவதற்கு நிதியொதுக்கீடு செய்து, பணிகள் முடிக்கப்பட்டுள்ளதையடுத்து, தனியார் கட்டிடங்களில் இயங்கி வந்த அரசு அலுவலகங்கள் அரசு கட்டிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் மிகப் பெரிய நகரங்களில் 2ஆவது இடத்தை காயல்பட்டினம் வகிக்கிறது. இங்கு சிறுப்பான்மை மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். அதிமுக ஆட்சியில்தான் காயல்பட்டினத்திற்கு அதிக நன்மைகள் நடந்துள்ளது.
அதிமுக ஆட்சியில் முதலாவது பைப் லைன் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த போது ரூபாய் 30 கோடியில் 2ஆவது பைப் லைன் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது. ஸ்ரீவைகுண்டம் ஆற்றலிருந்து குழாய் பதித்து காயல்பட்டினத்திற்கு குடிநீர் கொண்டு வரப்படவுள்ளது. இத்திட்டத்தில் ஆங்காங்கே சில பிரச்சனைகள் வந்தபோதிலும், உடனுக்குடன் அவை சுமுகமாகப் பேசி முடிக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது.
தற்போது 75 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள 25 சதவீத பணிகளும் விரைவில் நிறைவேற்ப்படும். இதன்மூலம் 70 லட்சம் லிட்டர் குடிநீர் காயல்பட்டினத்திற்கு கிடைக்கும். இத்திட்டம் நிறைவேறும்போது, 50 ஆண்டுகளுக்கு காயல்பட்டினத்தில் குடிநீர் பிரச்சனை இருக்காது.
அதே போல் நகராட்சி தலைவரின் கோரிக்கையை ஏற்று 1.50 கோடி ரூபாய் புதிய நகராட்சி அலுவலகம் கட்டுவதற்க அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 7 ஆயிரம் சதுர அடியில் 2 மாடி கட்டிடமாக கட்டப்பட உள்ளது. இதனால் இங்குள்ள கவுன்சிலர்களுக்குத்தான் பெருமை.
மேலும் காயல்பட்டினம் நகராட்சியில் இந்த ஆண்டு சாலை உள்ளிட்ட அடிப்படைப் பணிகளுக்கு ரூபாய் 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே இங்குள்ள கவுன்சிலர்களும், நகர மக்களும் அதிமுக ஆட்சிக்கு நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
விழாவில், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மணத்தி ரவிக்குமார், திருச்செந்தூர் யூனியன் சேர்மன் ஹேமலதா, திருச்செந்தூர் வட்டாட்சியர் வெங்கடாச்சலம், ஆத்தூர் பேரூராட்சி தலைவர் முருகானந்தம், காயல்பட்டினம் நகராட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் நன்றி கூறினார்.
காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[சிறு திருத்தம் செய்யப்பட்டு, கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 23:32 / 01.03.2015] |