இந்திய முஸ்லிம்கள் பாதுகாப்புடன் வாழ ஒரே குடையின் கீழான இளைஞர்களின் அரசியல் பங்களிப்பு அவசியமாகும் என காயல்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மேற்கு வங்க மாநில இளைஞரணி தலைவர் முஸ்லிம் லீக் இளைஞரணி அமைப்பாளர் ஷாபிர் கஃப்பார் பேசியுள்ளார்.
இந்நிகழ்ச்சி குறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இளைஞரணியான யூத் லீகின் மேற்கு வங்க மாநில அமைப்பாளர் ஷாபிர் கஃப்பார், இம்மாதம் 27ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று 17.00 மணியளவில் காயல்பட்டினம் வருகை தந்தார்.
பிரதான வீதி - பெரிய தெரு சந்திப்பில், வள்ளல் சீதக்காதி திடலருகில் அவருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினர் சார்பில் பேண்டு வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
திமுக காயல்பட்டினம் நகர கிளை செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை துணைத்தலைவர் எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, அதன் நிர்வாகி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் ஆகியோரும் அவரை வரவேற்றனர். பின்னர், ஷாபிர் கஃப்பார் கட்சியின் பிறைக்கொடியை ஏற்றி, ஏற்புரையாற்றினார்.
தொடர்ந்து, கட்சியின் நகர அலுவலகம் வரை நகர்வலமாக அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அலுவலகம் முன்புள்ள கொடிக்கம்பத்திலும் அவர் பிறைக்கொடியை ஏற்றினார்.
தொடர்ந்து அலுவலகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் காயல்பட்டினம் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். நகர துணைச் செயலாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பை வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய - கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையுரையாற்றினார். தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், சிறப்பு விருந்தினர் குறித்து அறிமுகவுரையாற்றினார்.
அதன் தொடர்ச்சியாக, ஷாபிர் கஃப்பார் உரையாற்றினார். அவரது உரைச் சுருக்கம் வருமாறு:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வரலாறு இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்தே துவங்குகிறது. திட்டமிடப்பட்ட சதியின் படி அன்று முஸ்லிம் சமுதாயம் அனாதையாக்கப்படவிருந்தது. அந்த நேரத்தில் - கிட்டத்தட்ட தான் அரசியல் அநாதையாக இருந்த நிலையிலும் காயிதே மில்லத் முஹம்மத் இஸ்மாயில் ஸாஹிப் அவர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீகைத் துவக்கி, தாங்க முடியாத போராட்டங்களுக்கிடையிலும் தனி மனிதராக இந்த தாய்ச்சபையைக் கட்டிக்காத்துத் தந்துள்ளார். அதன் காரணமாகத்தான் இன்று நாம் கண்ணியத்துடனும், நமது உரிமைகளை ஓரளவுக்கேனும் பெற்றும் இந்த நாட்டில் வாழ்ந்து வருகிறோம்.
இந்த உண்மை நம் நாட்டின் அரசியல் வரலாறுகளை அறிந்த அனைவருக்கும் தெளிவாகத் தெரியும். அப்படியிருந்தும் இன்று நம் சமுதாயத்திற்குள்ளேயே பல்வேறு அமைப்புகளைத் துவக்கி, இயங்கி வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. இதனால் தாய்ச்சபைக்கு எந்த இழப்பும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. மாறாக, தாய்ச்சபை இதுநாள் வரை கட்டிக்காத்து வரும் சமுதாய ஒற்றுமை, அதன் பாதுகாப்பு, அதன் உரிமைகளை வலிமையுடன் கேட்டுப் பெறல் உள்ளிட்ட அம்சங்களுக்கு பலவீனம் ஏற்பட்டு விட வாய்ப்புள்ளது. இந்த ஆதங்கத்தை, தொடர்புடையவர்கள் மனந்திறந்து சிந்தனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்தியாவின் வருங்காலம் இளைஞர்கள் கைகளில்தான் உள்ளது. இந்திய முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்தான் அடித்தளமாக விளங்கி வருகிறது. அதை உணர்ந்தவர்களாக, இன்று நாடெங்கும் இளைஞர்கள் நம் தாய்ச்சபையில் தன்னார்வத்துடன் வந்து இணைந்தவண்ணம் உள்ளனர்.
இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் - குறிப்பாக இளைஞர்கள் அனைவருமே இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இணைந்து செயலாற்ற முன்வர வேண்டும். அப்போதுதான், காயிதே மில்லத் அவர்கள் கட்டிக்காத்த இந்திய முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு எந்தப் பங்கமும் வராமல் காக்க இயலும்.
இவ்வாறு அவர் பேசினார். கட்சியின் காயல்பட்டினம் நகர பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் நன்றி கூற, மூத்த நிர்வாகி ஹாஃபிழ் எஸ்.எல்.ஷெய்கு அப்துல் காதிர் துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
நகர இளைஞரணி செயலாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், நகர துணைச் செயலாளர் எம்.எச்.அப்துல் வாஹித், நிர்வாகிகளான எஸ்.டீ.கமால், ஜிஃப்ரீ, எலக்ட்ரீஷியன் பஷீர், அமானுல்லாஹ், கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை, ஜெ.உமர், எம்.இசட்.சித்தீக், கே.அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட - கட்சியின் அங்கத்தினரும், நகர பொதுமக்களும் இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்களுள் உதவி:
A.R.ஷேக் முஹம்மத்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |