காயல்பட்டினம் நகர்மன்றத்தின் சாதாரண கூட்டம் 27.02.2015 வெள்ளிக்கிழமையன்று 14.30 மணியளவில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கூட்டப் பொருட்கள்:
இக்கூட்டத்தில் பின்வருமாறு 33 பொருட்கள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படவிருந்தன:-
பங்கேற்றோர்:
நகராட்சி கூட்டரங்கு பழுதுபட்டுள்ளதால், வழமை போல அலுவலக வளாகத்தில் கிழக்குப்பகுதி மைதானத்தில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு, கூட்டம் நடத்தப்படவிருந்தது. வெளியூரிலிருக்கும் - 11ஆவது வார்டு உறுப்பினரும், நகர்மன்றத் துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன் தவிர அனைத்து உறுப்பினர்களும் இக்கூட்டத்திற்கு வருகை தந்திருந்தனர்.
ஆணையர் வருகை தாமதம்:
நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ் இக்கூட்டத்தில் அவசியம் பங்கேற்குமாறு நகர்மன்றத் தலைவர் கூறியிருந்தது ஒருபுறமிருக்க, சுகவீனம் காரணமாக அவர் பங்கேற்க மாட்டார் என கூட்ட அரங்கில் சில உறுப்பினர்கள் கூறினர்.
சிறிது நேரத்திற்குப் பின் ஆணையர், காவல்துறையினர் கூட்ட நிகழ்விடம் வந்ததையடுத்து, நகர்மன்றத் தலைவரும் அங்கு வருகை தந்தார்.
உறுப்பினர்கள் குறுக்கீடு:
கூட்டப் பொருட்களை நகராட்சி பொருத்துநர் நிஸார் வாசிக்கத் துவங்கினார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு, 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி ஆகியோர், டிசம்பர் மாதம் நடைபெற்ற கூட்டத்தின் நிலை குறித்து நகர்மன்றத் தலைவரிடம் விளக்கம் கேட்டனர்.
அக்கூட்டம் ஏற்கனவே நிறைவுற்று, மக்கள் நலன் கருதி அனைத்து கூட்டப் பொருட்களும் ஏற்கப்பட்டு, தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக நகர்மன்றத் தலைவர் கூறினார்.
தலைவர் தனக்குத் தேவையான கூட்டப் பொருட்களை மட்டுமே நிரலில் ஏற்றியிருப்பதாகவும், தனக்கு விருப்பமில்லாதவற்றைத் தவிர்த்துள்ளதாகவும் உறுப்பினர்கள் குற்றஞ்சாட்ட, தகுந்த ஆதாரத்தைத் தருமாறு தலைவர் கேட்டார்.
01ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.ஐ.அஷ்ரஃப் தந்த கோரிக்கைகளைக் கூட்டப் பொருளில் ஏற்றவில்லை என உறுப்பினர்கள் கூற, அவ்வாறு கோரிக்கைக் கடிதம் எதையும் முறைப்படி தான் பெறவில்லை என்றும், அவ்வாறு பெறப்பட்டால் அவற்றைக் கூட்டப் பொருளில் இடம்பெறச் செய்வதில் தனக்கு எந்தத் தயக்கமும் இல்லையென்றும் தலைவர் கூறினார்.
கூட்டம் ஒத்திவைப்பு:
இன்னும் சில கூட்டப் பொருட்களையும் இடம்பெறச் செய்யவில்லை என உறுப்பினர்கள் குற்றஞ்சாட்ட, தேவையான விளக்கம் தரப்பட்டுள்ளதாகவும், மேலதிக விளக்கம் தேவைப்பட்டால் எழுத்து மூலம் கேட்குமாறும், அதற்கு தான் எழுத்திலேயே விளக்கமளிக்க ஆயத்தமாக உள்ளதாகவும், தற்போது இந்தக் கூட்டத்தைத் துவக்கி நடத்திட ஒத்துழைக்குமாறும் தலைவர் கூறினார்.
07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி, 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் தவிர இதர உறுப்பினர்கள் அனைவரும் - முந்தைய கூட்டத்திற்கு முடிவு தெரியாத வரை நடப்பு கூட்டத்தை நடத்த அனுமதிக்க இயலாது என ஒரே குரலில் கூறினர்.
இதனையடுத்து, நடப்பு கூட்டத்தை ஒத்திவைப்பதாகக் கூறி, நகர்மன்றத் தலைவர் கூட்டரங்கை விட்டும் வெளியேறிச் சென்றார்.
தொடர்ந்து கூட்டத்தை நடத்த உறுப்பினர்கள் முயற்சி:
பெரும்பான்மை உறுப்பினர்கள் இணைந்து தமக்குள் ஒருவரைத் தலைவராக நியமித்து தொடர்ந்து கூட்டத்தை நடத்தப்போவதாக 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு ஆணையரிடம் கூற, கூட்ட வருகைப் பதிவேட்டில் கைச்சான்றும் இட்டு, கூட்டத்தை ஒத்தி வைப்பதாக நகர்மன்றத் தலைவர் கூறிச் சென்றுள்ளதாகவும், வருகைப் பதிவேட்டில் 2 உறுப்பினர்களைத் தவிர இதர உறுப்பினர்கள் யாரும் கைச்சான்றே இடாத நிலையில், அவர்கள் இக்கூட்டத்தைத் தொடர்ந்து நடத்திட சட்டத்தில் இடமில்லை என்றும் ஆணையர் ம.காந்திராஜ் உறுப்பினர்களிடம் கூறிவிட்டார்.
பின்னர், 02ஆவது வார்டு உறுப்பினர் வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, 03ஆவது வார்டு உறுப்பினர் பீ.எம்.எஸ்.சாரா உம்மாள், 04ஆவது வார்டு உறுப்பினர் ஏ.டீ.முத்து ஹாஜரா, 08ஆவது வார்டு உறுப்பினர் எம்.எம்.டீ.பீவி ஃபாத்திமா, 09ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யா ஆகியோர் நகராட்சி சட்டப் புத்தகத்தை நுணுக்கமாகப் படித்த பின், தலைவர் இல்லாவிட்டாலும் கூட்டத்தைத் தொடர்ந்து நடத்திட உறுப்பினர்களுக்கு சட்டத்தில் இடமுள்ளதாகக் கூற, அச்சட்டம் - கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டு, அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் தலைவர் கூட்டத்திற்கு வருகை தராவிட்டால் மட்டுமே பொருந்தும் என்றும், தற்போதைய சூழலுக்கு அது பொருந்தாது என்றும் ஆணையர் கூறிவிட்டார்.
உள்ளிருப்புப் போராட்டம்:
நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் (ஆர்.டி.எம்.ஏ.) நிகழ்விடம் வந்து சரியான முடிவு தரும் வரை நிகழ்விடத்தை விட்டும் அகலப் போவதில்லை என்றும், உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவதாகவும், நகராட்சி வளாகத்திற்குள்ளேயே சமையல் செய்யப் போவதாகவும் உறுப்பினர்கள் கூறினர். நகராட்சி அலுவலர்கள் மினிட் புத்தகத்தை அலுவலகத்திற்குள் எடுத்துச் செல்ல முனைந்தபோது, உறுப்பினர்கள் அதைத் தடுத்துவிட்டனர்.
03ஆவது வார்டு உறுப்பினர் பீ.எம்.எஸ்.சாரா உம்மாள் மினிட் புத்தகத்தைத் தன்னுடன் இறுகப் பிடித்துக் கொண்டிருந்தார். கூட்டப் பந்தலில் பெண் உறுப்பினர்கள் மினிட் புத்தகத்தின் அருகிலேயே இருக்க, ஆண் உறுப்பினர்கள் நகராட்சி அலுவலக நுழைவாயில் முன்பு நாற்காலி போட்டு அமர்ந்தனர்.
வட்டாட்சியர் அமைதிப் பேச்சுவார்த்தை:
இவ்வாறிருக்க, இரவு வேளையும் நெருங்கியது. அனைத்து உறுப்பினர்களும் இங்கேயே இருந்து இரவுணவு உண்பர் என உறுப்பினர்கள் கூறியதையடுத்து, சமையல் அடுப்பு, பாத்திரங்கள், உணவுப் பொருட்கள் போன்றவற்றை நகராட்சி வளாகத்திற்குள் சிலர் கொண்டு வர முயற்சித்தனர்.
அந்த வேளையில் அங்கு வந்த திருச்செந்தூர் வட்டாட்சியர் வெங்கடாச்சலம், நகராட்சி வளாகத்திற்குள் சமையல் செய்யக்கூடாது என்று தடுத்துவிட்டதையடுத்து, நகராட்சி அலுவலக கோட்டைச் சுவரையொட்டி வெளியே சாலையோரத்தில் உணவு ஏற்பாடுகள் நடைபெற்றன.
தொடர்ந்து உறுப்பினர்களிடம் பேசிய வட்டாட்சியர், வரும் திங்கட்கிழமையன்று (மார்ச் 02ஆம் நாள்) நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் வந்து விசாரிப்பதாகக் கூறியிருப்பதாகவும், உறுப்பினர்கள் தற்போது கலைந்து செல்லுமாறும் கேட்டுக்கொண்டார்.
இதற்கு உடன்படப் போவதில்லை என சில உறுப்பினர்கள் சொன்னபோது, அவர்களை அமைதிப்படுத்திப் பேசிய 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு, உயரதிகாரிகள் மூலம் அரசின் கவனத்தை ஈர்க்கவே தாம் இந்த உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தியதாகவும், தற்போது அவர்கள் இவ்விஷயத்தைக் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளதால் உரிய தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தாங்கள் கலைந்து செல்வதாகவும் கூற, 19.30 மணியளவில் அனைவரும் கூட்ட நிகழ்விடத்தை விட்டும் கலைந்து சென்றனர்.
பின்னர், 04ஆவது வார்டு உறுப்பினர் ஏ.டீ.முத்து ஹாஜரா, 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி ஆகியோர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர்.
இதுவரை நடைபெற்ற கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள் செயல்வடிவம் பெறவில்லை என்றும், நகர்மன்றக் கூட்டத்தை நடத்தல், கூட்டப் பொருள் தயாரித்தல் உள்ளிட்ட அம்சங்களில் தலைவரின் தன்னிச்சையான போக்கைக் கண்டித்தும் தாங்கள் உள்ளிருப்புப் போராட்டம் செய்ததாக அவர்கள் கூறினர்.
இந்நிகழ்வுகளின் முழு அசைபடப்பதிவைக் காண இந்நிகழ்வின் அசைபடப்பதிவைக் காண கீழ்க்காணும் படத்தின் மீது சொடுக்குக!
காயல்பட்டினம் நகர்மன்றத்தின் முந்தைய கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காயல்பட்டினம் நகர்மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[சிறு திருத்தம் செய்யப்பட்டது @ 21:53 / 01.03.2015] |