காயல்பட்டினம் பஸ் நிலையத்தில் மனைவி கண் எதிரே கணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அண்ணன் கொலைக்கு தம்பி பழி தீர்த்தார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
பத்திர எழுத்தர்
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கீரனூரைச் சேர்ந்தவர் ராஜன் நாடார். இவருடைய மகன் சிவபெருமாள் (வயது 43). இவருடைய மனைவி கலைச்செல்வி (40). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சிவபெருமாள், கலைச்செல்வி ஆகிய 2 பேரும் காயல்பட்டினம் புதிய பஸ் நிலைய வளாக கட்டிடத்தில் பத்திரம் எழுதும் அலுவலகம் நடத்தி வந்தனர். இவர்கள் அனைவரும் காயல்பட்டினம் வீரசடச்சி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருகின்றனர்.
நேற்று காலை 10.30 மணியளவில் வழக்கம்போல் கணவன், மனைவி 2 பேரும் காயல்பட்டினம் பஸ் நிலைய வளாக கட்டிடத்தில் உள்ள தங்களது கடையில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
வெட்டிக் கொலை
அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் 5 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் சிவபெருமாளின் கடையின் முன்பு மோட்டார் சைக்கிள்களை நிறுத்தினர். அவர்களில் 3 பேர் மட்டும் அரிவாள், கத்தி, உருட்டுக் கட்டை போன்ற ஆயுதங்களுடன் சிவபெருமாளின் கடைக்குள் புகுந்தனர். அவர்களைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த சிவபெருமாள் வெளியே தப்பி ஓடினார். அவர் பஸ் நிலைய வளாக கட்டிடத்தில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தும் கமால் என்பவரது கடைக்குள் ஓடிச் சென்று தஞ்சம் புகுந்தார்.
ஆனாலும் அவரை விரட்டிச் சென்ற மர்ம நபர்கள் 3 பேரும் சிவபெருமாளை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதைப் பார்த்த கலைச்செல்வி அலறி துடித்தார்.
போலீசார் விசாரணை
சிவபெருமாளின் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. மேலும் அவரது வலது கை துண்டாகி தொங்கியது. பின்னர் மர்மநபர்கள் 3 பேரும் அங்கு தயாராக இருந்த மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்பிச் சென்றனர். உடனே அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிய சிவபெருமாளை திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இறந்த சிவபெருமாளின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன், சப்– இன்ஸ்பெக்டர்கள் சியாம் சுந்தர், கணபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன் விவரம் வருமாறு:–
டாஸ்மாக் பார் உரிமையாளர் கொலை
ஆத்தூர் குச்சிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுத நாடார். இவருடைய மகன் வி.வி.அய்யப்பன் (வயது 37). அ.தி.மு.க. பிரமுகரான இவர் தெற்கு ஆத்தூரில் டாஸ்மாக் பார் நடத்தி வந்தார். இவருடைய மனைவி அனுராதா. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
அய்யப்பன், மனைவியின் சொந்த ஊரான ஆத்தூர் அருகே உள்ள கீரனூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அனுராதா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 22–ந்தேதி அனுராதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதற்கிடையே 23–ந்தேதி அய்யப்பன் 2–வது திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததாக தெரிகிறது.
2 பேர் கைது
அனுராதாவின் நினைவு தினத்தில் சோகத்தில் இருந்த உறவினர்கள், இதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அய்யப்பனிடம் சென்று தட்டி கேட்டனர். அப்போது ஆத்திரம் அடைந்த அனுராதாவின் உறவினர்கள் அய்யப்பனை அடித்து உதைத்தனர். பின்னர் அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர்.
இதுதொடர்பாக அனுராதாவின் உறவினர்களான அப்பகுதியைச் சேர்ந்த சுந்தரவேல் மகன் விஷ்ணுகுமார் (28), மனோகர் லால் மகன் முத்துகிருஷ்ணன் (23) ஆகிய 2 பேரை ஆத்தூர் போலீசார் கைது செய்தனர்.
தம்பி பழி தீர்த்தார்
அனுராதாவின் உறவினர்கள் அய்யப்பனை கொலை செய்தபோது, சிவபெருமாள் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சிவபெருமாளை பழி தீர்க்க அய்யப்பனின் தம்பி ராமசுப்பிரமணியன் திட்டம் தீட்டினார். அதன்படி நேற்று காலையில் பட்டப் பகலில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த காயல்பட்டினம் புதிய பஸ் நிலையத்தில் ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து சிவபெருமாளை வெட்டிக் கொலை செய்தனர்.
மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. தலைமறைவான ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
செய்தி வெளியீடு:
தினத்தந்தி
|