சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், நகர்நலனுக்காக 2 லட்சத்து 8 ஆயிரத்து 255 ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
ரியாத் காயல் நல மன்றத்தின் 46ஆவது செயற்குழுக் கூட்டம், 13-02-2015 வெள்ளிக்கிழமை பிற்பகலில், மன்றத் தலைவர் ஹாஃபிழ் எம்.ஏ.ஷெய்க் தாவூத் இத்ரீஸ் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிகளை ஒய்.ஏ.எஸ்.ஹபீப் முஹம்மத் முஹ்ஸின் நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் எஸ்.ஏ.சி.அஹ்மத் ஸாலிஹ் இறைமறை வசனங்களையோதி கூட்ட நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். பீ.எம்.எஸ்.முஹம்மத் லெப்பை வரவேற்புரையாற்றினார். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய - மன்றத்தின் முன்னாள் தலைவர் எம்.இ.எல்.நுஸ்கீ தலைமையுரையாற்றினார்.
நலத்திட்ட உதவிகளுக்கு நிதியொதுக்கீடு:
நம் நகரின் மருத்துவ கூட்டமைப்பான ஷிஃபா மூலம் பெறப்பட்ட ஏராளமான கடிதங்கள் வாசிக்கப்பட்டு, ஏற்கப்பட்டவற்றுக்கு 2 லட்சத்து 8 ஆயிரத்து 255 ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டது.
நிதி நிலையறிக்கை மற்றும் மன்றச் செயல்பாடுகள்:
மன்றத்தின் 2014ஆம் ஆண்டிற்கான் நிதி நிலை அறிக்கையை, பொருளாளர் எம்.என்.முஹம்மத் ஹஸன் சமர்ப்பித்து, கூட்டத்தின் ஒப்புதலைப் பெற்றார். கடந்த 2014ஆம் ஆண்டில், மன்றம் சார்பில் ஆற்றப்பட்ட நகர்நலப் பணிகள் குறித்து, செயலாளர் ஏ.டீ.ஸூஃபி இப்றாஹீம் விளக்கிப் பேசினார்.
சிறப்புத் தகுதி (கட்-ஆஃப்) மதிப்பெண்:
2014-15ஆம் ஆண்டிற்கான சிறப்புத் தகுதி மதிப்பெண் (கட்-ஆஃப்) கூடுதலாகப் பெறும் மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்குவது குறித்து துணைப் பொருளாளர் .வெள்ளி எஸ்.ஏ.சித்தீக் விளக்கிப் பேசினார். 2014-15 ஆண்டிற்கான புதிய தகுதி மதிப்பெண் (கட்-ஆஃப்) பரிசுப் பட்டியல் வரையறையை அவர் கூட்டத்தில் சமர்ப்பிக்க, அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. (இதுகுறித்த விரிவான அறிவிப்பு இணையதளங்களில் வெளியிடப்படும்.)
இக்ராஃ / ஷிஃபா:
இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்புகள் குறித்த அண்மைத் தகவல்களை, மன்றத் தலைவர் கூட்டத்தில் பரிமாறிக்கொண்டார்.
அடுத்த பொதுக்குழு:
மன்றத்தின் அடுத்த பொதுக்குழுக் கூட்டத்தை, இன்ஷா அல்லாஹ், வரும் மார்ச் மாதம் 06ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று ஷிஃபா அல்ஜஸீரா பாலி க்ளினிக்கின் 3ஆவது தளத்தில் நடத்திட தீர்மானிக்கப்பட்டது. இதுகுறித்து மன்ற நிர்வாகிகளால் கூட்டத்தில் விளக்கமளிக்கப்பட்டது.
மன்றத்தின் சட்டத் திருத்தம் (By-law):
மன்றத்தின் திருத்தப்பட்ட சட்ட வடிவத்தை (By-Law) செயலாளர் ஏ.டீ.ஸூஃபீ இப்றாஹீம் வாசித்தார்.
சிறப்புப் பார்வையாளர்கள்:
மன்றத்தின் செயற்குழுக் கூட்ட நடவடிக்கைகள் குறித்து பார்த்தறிவதற்காக, பொதுக்குழு உறுப்பினர்களுள் இருவர் ஒவ்வொரு கூட்டத்திற்கும் அழைக்கப்படும் வழமை உள்ளது. அதனடிப்படையில், நடப்பு கூட்டத்தில் சட்னி இஸ்மாஈல். ஏ.எஸ்.எல்.சுலைமான் லெப்பை ஆகியோர் சிறப்புப் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டு, தமது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கினர்.
கூட்ட ஒருங்கிணைப்பாளர்கள்:
இச்செயற்குழுக் கூட்டத்தை, மன்றத் தலைவர் ஹாஃபிழ் எம்.ஏ.ஷெய்க் தாவூத் இத்ரீஸ், கே.எஸ்.எம்.அப்துல் காதிர், எஸ்.பி.முஹ்யித்தீன், இப்றாஹீம் ஃபைஸல், உமர் ஃபாரூக் ஃபாஸீ ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர். அவர்களது அனுசரணையில் - கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
கூட்ட நிறைவு:
நன்றியுரையைத் தொடர்ந்து, ஹாஃபிழ் பீ.எஸ்.ஜெ.ஜெய்னுல் ஆப்தீன் துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே – அல்ஹம்துலில்லாஹ்! கலையும் முன் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
[குழுப்படத்தைப் பெரிதாகக் காண அதன் மீது சொடுக்குக!]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியாத் காயல் நல மன்றத்தின் முந்தைய செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ரியாத் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |