கத்தர் காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டத்தில் நலத்திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செய்தி தொடர்பாளர் ‘கவிமகன்’ காதர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இறையருளால் எமது கத்தர் காயல் நல மன்றத்தின் 71ஆவது செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 06ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று, பர்வா சிட்டி பார்க்கில் நடைபெற்றது.
மன்றத்தின் மூத்த உறுப்பினர் சொளுக்கு செய்யித் முஹம்மத் ஸாஹிப் முன்னிலை வகிக்க, காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) செயலாளர் பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
ஹாஃபிழ் நூஹ் ஸாஹிப் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். மன்றத்தின் செய்தி தொடர்பாளர் ‘கவிமகன்’ காதர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மன்றத் தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் - மன்றத்தின் இதுநாள் வரையிலான செயல்பாடுகள், வருங்கால செயல்திட்டங்கள் குறித்த விபரங்களை உள்ளடக்கி தலைமையுரையாற்றினார்.
புதிய உறுப்பினர் அறிமுகம்:
மன்றத்தின் மூத்த உறுப்பினரான சொளுக்கு செய்யித் முஹம்மத் ஸாஹிபின் மகன் செய்யித் இப்றாஹீம் கத்தரில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதையடுத்து, மன்றத்தின் புதிய உறுப்பினரானார். நடப்பு கூட்டத்தில் அவர் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.
அதுபோல, வேலைவாய்ப்பு தேடி காயல்பட்டினத்திலிருந்து வருகை தந்துள்ள இன்னும் இருவரும் கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டனர். அவர்களுக்கான தகுந்த வேலைவாய்ப்பு கிடைத்திட மன்ற அங்கத்தினர் முழு ஒத்துழைப்பளிக்குமாறு கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பங்கேற்பாளர்களின் - நகர்நலன் குறித்த கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானங்கள்:
தீர்மானம் 1 - இரங்கல்:
தனது தொழில் நிறுவனங்கள் வாயிலாக தமிழகத்தின் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கச் செய்தி சிறந்த தொழிலதிபரும், பல்வேறு கல்வி நிறுவனங்களின் நிறுவனருமான அல்ஹாஜ் பி.எஸ்.அப்துர்ரஹ்மான் அவர்களின் மறைவிற்கு, இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் மஃக்ஃபிரத் - பாவப் பிழை பொறுப்பிற்காக உளமார துஆ செய்கிறது.
தீர்மானம் 2 – ஹீலர் பாஸ்கரின் உடல் நல விழிப்புணர்வு நிகழ்ச்சி:
ஹீலர் பாஸ்கரின் செவிவழி தொடு சிகிச்சை (அனாட்டமிக் தெரபி) என்ற பெயரிலான உடல் நலன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை காயல்பட்டினத்தில் நடத்துவது குறித்து, கூடுதல் தகவல்களை - மன்றத்தின் பிரதிநிதி எஸ்.கே.ஸாலிஹ், சமூக ஆர்வலர் சாளை பஷீர் ஆகியோரிடமிருந்து பெற்று, அதனடிப்படையில் நிகழ்ச்சியை வடிவமைக்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இவ்விபரங்களைப் பெறுவதற்கு, செயற்குழு உறுப்பினர் எம்.என்.சுலைமானிடம் பொறுப்பளிக்கப்பட்டது.
தீர்மானம் 3 - கழிப்பறை கட்ட நிதியொதுக்கீடு:
நகரில் ஏழை ஒருவரின் வீட்டிற்குக் கழிப்பறைகள் கட்டுவதற்காக, காயல்பட்டினம் பைத்துல் மால் அறக்கட்டளையின் மூலம் பெறப்பட்ட விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, ஒரு கழிப்பறை கட்டுவதற்காக ரூபாய் 15 ஆயிரம் நிதியொதுக்கீடு செய்யப்பட்டது.
தீர்மானம் 4 - தைக்கா பள்ளிக்கூட பராமரிப்பிற்கு நிதியுதவி:
காயல்பட்டினம் சிவன்கோயில் தெருவிலுள்ள - ‘தைக்கா பள்ளிக்கூடம்’ என்றழைக்கப்படும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் கட்டிட பழுது நீக்கும் பணிக்காக ரூபாய் 6 ஆயிரம் நிதியொதுக்கீடு செய்யப்பட்டது.
தீர்மானம் 5 - இக்ராஃ மூலம் கல்வி நிகழ்ச்சிகள்:
காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் அடுத்த தலைவராக - கத்தர் காயல் நல மன்றத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதையடுத்து, இப்பொறுப்பு காலகட்டத்தில் பயனுள்ள பல்வேறு கல்வி நிகழ்ச்சிகளை நடத்தல், இக்ராஃவுக்கு கூடுதல் உறுப்பினர்களைச் சேர்த்தல் உள்ளிட்ட செயல்திட்டங்களை முற்கூட்டியே வடிவமைத்து, முறைப்படி செயல்படுத்திட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மன்ற துணைத்தலைவர் எம்.என்.முஹம்மத் யூனுஸ் நன்றி கூற, மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.முஹம்மத் லெப்பை ஜுமானீ பாக்கவீ துஆவைத் தொடர்ந்து, ஸலவாத் - க, ப்பாராவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது. பின்னர் அனைவருக்கும் சிற்றுண்டியுபசரிப்பு செய்யப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
(பிரதிநிதி - கத்தர் கா.ந.மன்றம்)
படங்கள் & தகவல் மூலம்:
M.N.சுலைமான்
கத்தர் காயல் நல மன்றத்தின் முந்தைய (70ஆவது) செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கத்தர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |