ஜித்தா தமிழ்ச் சங்கத்தால் நடத்தப்பட்ட – வேகமாக மொழிபெயர்க்கும் போட்டியில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவி முவஃப்ஃபிகா ஜுலைகா இரண்டாவது பரிசு பெற்றுள்ளார். விரிவான விபரம் வருமாறு:-
சஊதி அரபிய்யா - ஜித்தாவில், தமிழர்களை ஒருங்கிணைத்து இயங்கி வரும் ஜித்தா தமிழ்ச் சங்கம் சார்பில், ஜித்தாவில் வசிக்கும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் புதையுண்டிருக்கும் பல்வேறு திறமைகளை வெளிக்கொணருவதற்காக KIDS EVENT நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டின் KIDS EVENT 2015 நிகழ்ச்சி, இம்மாதம் 06ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று 17.00 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், குழந்தைகளின் அறிவு, உடல் திறன்களை வெளிக்கொணரும் வினாடி-வினா, கனெக்ஷன், எழுத்துத் தேர்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என பலதுறைகளில் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்ற மாணவ-மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஆங்கில மொழியில் அமைந்த வாசகங்களை, வேகமாக தமிழில் மொழியாக்கம் செய்யும் RAPID TRANSLATOR போட்டியில், காயல்பட்டினம் கீழ நெய்னார் தெருவைச் சேர்ந்த பி.ஏ.ரிஸ்வான் - எஸ்.எம்.ஷர்மிளா தம்பதியின் மகள் முவஃப்ஃபிகா ஜுலைகா இரண்டாவது பரிசைப் பெற்றார்.
அவர் உட்பட - போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவியருக்கு ஜித்தா தமிழ்ச் சங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் பரிசுகளை வழங்கினர். சுவையான இரவுணவு விருந்துபசரிப்புடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
மாணவி முவஃப்ஃபிகா, காயல்பட்டினம் முன்னாள் தேர்வு நிலை பேரூராட்சி உறுப்பினர் பஷீர் அஹ்மதின் மகன்வழிப் பேத்தியும், மறைந்த பாடகர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மதின் மகள்வழிப் பேத்தியும் ஆவார். |