சஊதி அரபிய்யா - ஜித்தா - காயல் நற்பணி மன்றத்தின் 33 வது பொதுக்குழு, 7 ஆவது அமர்விற்கான நிர்வாக தெரிவு மற்றும் 13 ஆம் ஆண்டு துவக்கவிழா வெளியரங்கில் ஜித்தா சர்வதேச விமான நிலையம் அருகில் அமைந்துள்ள "அஸ்ஸஃப்வா" ஓய்வில்லத்தில் கடந்த 13-02-2015 வெள்ளிக்கிழமை காலை 08:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை மிகச்சிறப்பாக நடந்தேறியது.
வாகன புறப்பாடு :
ஏற்கனவே அறிவித்தபடி காலை 07:30 மணியிலிருந்தே உறுப்பினர்கள் ஜித்தா ஷரஃபிய்யா,ஆர்யாஸ் உணவகம் முன்பு குழுமினர். சகோ.எஸ்.முத்துவாப்பா, சகோ.எம்.டபிள்யூ.ஹாமீது ரிஃபாய் ஆகியோர் அவர்களை வரவேற்றனர். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்து உறுப்பினர்களை அமர்த்திகொண்டு 08:00 மணியளவில் புறப்பட்டு நிகழ்வு நடைபெறும் இடம் நோக்கி வந்து சேர்ந்தது.
மக்கா உறுப்பினர்கள் சிற்றுந்துகள் மூலம் சகோ.எம்.ஏ.இப்ராஹீம் தலைமையில் குடும்பத்துடன் வந்து சேர்ந்தனர்.
யான்புவில் இருந்தும் ஏராளமான மன்ற உறுப்பினர்கள் வருகை தந்தனர்.
வாகனம் உள்ள ஜித்தா உறுப்பினர்கள் தத்தமது வாகனங்களில் வந்து சேர்ந்தனர்.
வருகை தந்த அனைவரையும் சகோ.குளம் எம்.எ.அஹ்மத் முஹ்யித்தீன், சகோ.சட்னி எஸ்.எ.கே.செய்யது மீரான், சகோ.சோனா ஏ.டி.ஹுசைன் ஹல்லாஜ், சகோ எம்.எஸ்.எல்.முஹம்மது ஆதம் ஆகியோர் அகங்குளிர வரவேற்றனர். வந்திருந்தோர் யாவரும் தங்களுக்குள் உற்சாகமாக உரையாடி நலம் விசாரித்து கொண்டிருந்தனர்.
காலைச்சிற்றுண்டி :
வந்திருந்தோர் அனைவருக்கும் சுவைமிக்க காலை உணவு பசியாற இட்லி, வடையுடன் சர்க்கரை பொங்கல் பரிமாறப்பட்டு தேநீருடன் உபசரிக்கப்பட்டது.
சகோ.எம்.எம்.எஸ்.செய்கு அப்துல்காதிர், சகோ.பொறியாளர் ஜி.எம்.முஹம்மது சுலைமான் இருவரும் வருகை தந்த உறுப்பினர்களின் பெயர்களை பதிவு செய்தும், சந்தாக்கள், நன்கொடைகளை பெற்றும் அதற்கான ரசீதுகளை உடன் அளித்து கொண்டனர். புதிய சகோதரர்களும் தங்களை மன்றத்தில் இணைத்து உறுப்பினராகினர்.
வெளியரங்க விளையாட்டு போட்டிகள் :
வெளியரங்க விளையாட்டு போட்டிகள் விசாலமான மைதானத்தில் ஆரம்பமானதும் துள்ளிக்குதித்து வந்த சிறுவர், சிறுமியர் மற்றும் பெரியோர் என விளையாட்டில் ஆர்வமுள்ள அனைவரும் உற்சாகமாக கலந்துகொண்டனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை அதற்காக நியமிக்கபட்ட குழுவினர் சகோ.அரபி எம்.அய்.முஹம்மது ஷுஅய்ப், சகோ.ஒய்.எம்.முஹம்மது ஸாலிஹ், சகோ.சீனா.எஸ்.ஹெச்.மொகுதூம்முஹம்மது, சகோ.எம்.என். முஹம்மது ஷமீம், சகோ.கே.வி.எம்.எ.சி.ஷாஹ் மீரான் ஸாஹிப் மற்றும் சகோ.சோல்ஜர் எஸ்.எ.எஸ்.ஷெய்கு அப்துல்லாஹ் ஆகியோர் சகோ.குளம் எம்.எ.அஹ்மது முஹிய்யதீன் தலைமையில் சிறு சிறு குழுக்களாக போட்டியாளர்களை தேர்வு செய்து போட்டிகள் துவங்கின.
பெனால்டி கிக் :
கால்பந்து பெனால்டி கிக் போட்டி 6 குழுக்களாக பிரிக்கப்பட்டு வழமையான உற்சாகத்துடன் நடைபெற்றது. யான்பு, மக்கா, ஜித்தா என குழுக்களுக்கு பெயரிட்டு கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கைப்பந்து போட்டி, 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், மியூசிகல் வாக், ஸ்லோ வாக் போன்ற வெளியரங்க போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.
போட்டியில் கலந்து கொண்ட பெரியோர், இளையோர் காயல் தெருவில் விளையாடும் சிறார்களாக மாறி ஆட்டம் ஆட முற்பட்டது உண்மையான காயல் விளையாட்டை கண்முன் கொண்டுவந்தது. போட்டியில் பங்கு பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் உற்சாகமுடன் பள்ளிப்பருவத்திலே துள்ளி விளையாடியவர்களாக மாறினர்.
மங்கையர்களுக்கான போட்டி :
மறுபுறத்தில் சிறார்கள், மழலைகள் மற்றும் மங்கையர்களுக்கான போட்டிகள் நடைபெற்றன. மங்கையர்களுக்காக உள்ளரங்கில் இசை நாற்காலி, கப்பில் பந்து போடுதல், MOVIN ON UP / CUP ஐ மேலிருந்து கீழ் அடுக்குதல், STRAW AND PEARL / முத்து உறிதல், COLOR SEPERATION ANEXITY / கலர் கற்களை பிரித்தெடுத்தல், ஊசியில் நூல் கோர்த்தல், SKIPPING என பொழுதுபோக்கு போட்டிகள் நடைபெற்றது. அனைத்து போட்டியையும் நான்கு பேர் கொண்ட குழுவினர் சிறப்புற நடத்தினர்.
சிறார் மற்றும் மழலைகளுக்கான போட்டி :
சிறார் மற்றும் மழலைகளுக்காக சாக்கு ஓட்டம்,100, 50 மீட்டர் ஓட்டப்பந்தையம், பலூன் வெடித்தல், இசை நாற்காலி, பன் கவ்வுதல் மற்றும் பலவித போட்டிகள் தனித்தனியாக காலை முதல் இரவு வரை நடைபெற்றது. கொஞ்சம் கூட அலுப்பு தட்டாது மிகுந்த ஆர்வத்துடன் குழந்தைகள் கலந்து கொண்டது பார்ப்பவர்கள் மனதை கொள்ளை கொண்டது. இவர்களுக்கான போட்டிகள் அனைத்தையும் சகோ.எம்.அய்.அரபிமுஹம்மது ஷுஅய்ப் மற்றும் சகோ.எம்.என். முஹம்மது ஷமீம் முன்னின்று அழகுற நடத்தினர்.
ஜும்ஆ தொழுகை இடைவேளை :
ஜும்மா தொழுகைக்காக மதியம் 12.15 மணியளவில் போட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு உள்ளரங்கில் 12:30 மணியளவில் புனித மக்கா நகர் அழைப்பாளர் இலங்கையை சேர்ந்த சகோதரர் அல்ஹாஃபிழ் முஹம்மது ஜியாது ஆலிம் அவர்கள் இஸ்லாமிய பண்புகள், இஸ்லாமில் ஈகை குறித்த தகவல், ஒரு முஸ்லீமின் பண்பு எங்ஙணம் அமையவேண்டும், ஒரு முஸ்லிம் எவ்வாறு ஈகையாளியாக இருக்க வேண்டும், பிறரிடம் நாம் செலுத்தும் அன்பு மற்றும் பிறருக்கு நாம் செய்யும் நல்லுதவி இவைகள் மூலம் ஈருலக வாழ்வில் நாம் பெறும் நன்மைகள் பற்றிய விரிவான மிக அழகான செய்திகளை ஜும்ஆ பேருரையாக தந்து தொழுகையை வழி நடத்தினார்.
33 வது பொதுக்குழு :
ஜும்மா தொழுகை நிறைவுற்றதும், 33 வது பொதுக்குழு கூட்டம் கூடியது. அதனை தொடர்ந்து 7 வது அமர்விற்கான நிர்வாகிகள் தெரிவு செய்தல் நிகழ்வு நடைபெற்றது.
சகோ. பொறியாளர் எஸ்.பஷீர் அஹமது, சகோ. எம்.என்.காஜா ரஹ்மத்துல்லாஹ், சகோ. பொறியாளர் கே.எம்.கமால் ஹாதி மற்றும் சகோ. மருத்துவர் எம்.ஏ.முஹம்மது ஜியாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அந்நிகழ்வுக்கு சகோ.குளம்.M.A.அஹ்மது முஹ்யித்தீன் தலைமையேற்று தலமையுரையற்றினார். சகோ.M.W.ஹாமீது ரிஃபாய் நிகழ்சிகளை நெறிபடுத்தினார். சகோ. பொறியாளர் அல்ஹாபிழ் எம்.ஹெச்.முஹம்மது அலி இறைமறை ஓதி கூட்டத்தை துவக்கி வைத்தார். சகோ எஸ்.ஹெச்.ஹுமாயுன் கபீர் அனைவரையும் அகமகிழ வரவேற்றார்.
கடந்த கூட்டங்களின் அறிக்கை நடைபெற்ற பணிகள் குறித்த முழு விபரங்கள் தீர்மானங்கள், மேலும் கடந்த மாதங்களில் யான்பு மற்றும் மக்கா நகரங்களில் நடைபெற்ற உறுப்பினர்களின் கலந்தாலோசனை சந்திப்பு கூட்டங்களில் அனைவரின் பங்களிப்புகள் அன்பான உபசரிப்புகள் பற்றியும் சகோ. சட்னி S.A.K.செய்யிது மீரான் விளக்கினார்.
மன்ற செயல்பாடுகள், உறுப்பினர்களின் உத்வேக மிக்க களப்பணிகள், நமது ஒற்றுமை, சந்தா என்ற நமது சிறு நிதியை மன்றத்திற்கு வழங்கியதின் நிமித்தம் இம்மன்றம் செய்த பாரிய உதவிகள் அதனால் இறைவன் புறத்திலிருந்து நம்மை அறியாது நாம் பெற்றிடும் அளப்பரிய நன்மைகள் குறித்த செய்திகளை சகோ.M.A.செய்யிது இப்ராஹீம் விரிவாக தந்தார்.
நம் மன்றம் வழங்கிய உதவித்தொகை, நாம் பெற்ற சந்தா மற்றும் நன்கொடை, மன்றத்தின் தற்போதைய இருப்பு மற்றும் தேவைகள் போன்ற நிதிநிலை குறிப்புக்களை சகோ.M.S.L.முஹம்மது ஆதம் வழங்கினார்.
கடந்த 12 ஆண்டுகளாக இது வரை மன்றம் சார்ந்த அனைத்து நிதிநிலை விபரங்களுடைய பட்டியலின் நகலும் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
அடுத்து வாழ்த்துரை வழங்கிய சகோ.முஹம்மது ஆதம் சுல்தான் நாம் கடல் கடந்து சம்பாதிக்க வந்த இடத்தில் நம்மூர் நலனுக்காக நாம் ஒற்றுமையாக இருந்து சேவைகளை செய்வதை நினைத்து உள்ளம் உவகை கொள்கிறது. அனைவரும் உதவிட தானாக முன்வரவேண்டும் என்று உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார்.
புதிய நிர்வாகத்தை தெரிவு செய்தல் :
புதிய நிர்வாகிகளை தெரிவு செய்யும் நிகழ்வின் கண்காணிப்பாளர் சகோ.எம்.எம்.மூஸா சாஹிப் மேற்பார்வையில் கடந்த நிர்வாகக்குழு முழுவதுமாக கலைக்கப்பட்டு 7 வது அமர்வில் வரும் இரு ஆண்டுக்கான (2015-2016) புதிய நிர்வாகிகளை தெரிவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. வந்திருந்த அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த முடிவின் படி தக்பீர் முழக்கத்தோடு புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. புதிய நிர்வாகிகள் முழு விபரம் அடுத்த செய்தி மூலம் தெரியபடுத்தப்படும்.
நன்றியுரை :
இந்த நிகழ்வு இனிதே நடந்தேற உதவிய வல்ல இறைவனுக்கு முதலில் நன்றியை செலுத்திவிட்டு....
எங்களது அழைப்பினை ஏற்று பல சிரமங்களை பொருட்படுத்தாது தூரம் தொலைவுகளில் இருந்து வந்திருந்த அனைவருக்கும் இந்த இனிய நிகழ்வு நடைபெற எல்லா வகைகளிலும் உதவிய, ஒத்துழைத்த மற்றும் அனுசரணைகள் பல வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மன்றத்தின் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டார் சகோ.A.M.செய்யிது அஹ்மது.
சகோ.K.A.முஹம்மது நூஹு பிரார்த்திக்க துஆ கஃப்பாராவுடன் பொதுக்குழு இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.
காயல் களரி சாப்பாடு :
நம் காயல் மண்ணுக்கு சொந்தமான சுவை மிகுந்த களரி சாப்பாடு முதலில் பெண்கள், மழலைகளுக்கும் பின்பு ஆண்களுக்கான பந்தியுமாக சஹனில் பரிமாறப்பட்டது. அனைவருக்கும் சுவைமிகு கோன் ஜோன் ஐஸ்க்ரீம் வழங்கப்பட்டது.
ஆண்களுக்கான உள்ளரங்க விளையாட்டு :
அஸ்ர் தொழுகைக்குப்பின் தாலத்தில் பந்து ஊதுதல், பலூன் காற்றை கொண்டு கப்பை தள்ளுதல் மற்றும் காயல் பிரத்யோக தமிழ் சொல் விளையாட்டு நடைபெற்றது. காயல் தமிழ் விளையாட்டில் 5 பேர்கொண்ட 6 அணிகள் போட்டியிட்டது. இரண்டு படங்கள் திரையில் தோன்றும், அப்படங்களுக்கான பெயர்களில் காயல் தமிழ் ஒளிந்திருக்கும். அதை சரியாக கண்டுபிடித்து 30 வினாடிக்குள் சொல்லவேண்டும்.
பொழுதுபோக்காகவும், கேளிக்கையாகவும் நடந்த இந்த போட்டியில் பலாய், அணையாடை, குத்தறா, அரிகண்டம், கடவா பொட்டி, கஞ்சிதாள், அவன்தரை, கூவகட்டு, படுதூறு, வீதல், இருட்டுகசம், பிச்சாட்டை, புல்லைகுலவி,... போன்ற காயலுக்கே உரிய காயல் தமிழ் வார்த்தைகள் விளையாடின. அதிக மதிப்பெண் எடுத்த குழு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இப்போட்டிகளை சகோதரர்கள் Y.M.முஹம்மது ஸாலிஹ் மற்றும் சீனா எஸ்.ஹெச்.மொகுதூம்முஹம்மது முன்னின்று நடத்தினர்.
பின்னர் மக்ரிப் ஜமாஅத் தொழுகைக்குப்பின் சூடான தேனீரும் சுவைமிகு சாலா வடையும் அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
இக்காயலர் சங்கமத்தின் இடைவிடாத உற்சாக விளையாட்டினால் நேரமின்மையின் காரணத்தினால் முன்னேற்பாடு செய்து வந்த ஒரு சில போட்டிகள் நடத்த முடியாமல் ஆனது.
பரிசளிப்பு விழா :
தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றோர், வெற்றிக்கு முனைந்தோர் என சிறார்களுக்கும், பெரியோர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மங்கையரின் சார்பாக அவர்களின் குழந்தைகள் வந்து பரிசுகளை ஆனந்தத்துடன் வாங்கி சென்றனர்.
மேலும் இந்நிகழ்வை இனிதாக அமைத்து தந்த சகோதர்களுக்கும் உற்சாக மூட்டும் பரிசுகளும் மற்றும் கலந்து கொண்டவர்களை ஆர்வ மூட்டும் வகையில் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டு பரிசுகளும் மற்றும் வருகை புரிந்த கைக்குழந்தைகள் முதல் மழலைகள் வரை அனைவருக்கும் மகிழத்தக்க பரிசுகள் வழங்கப்பட்டன.
பம்பர் பரிசு குலுக்கல் :
இறுதியாக வருகை தந்து இறுதி வரை நிகழ்வில் இருந்த உறுப்பினர்களை உற்சாகமூட்டும் வண்ணம் குலுக்கல் முறையில் இந்நிகழ்வின் முத்தாய்ப்பான பம்பர் பரிசு தேர்ந்தெடுக்கப்பட்டது. இம் மெகா குலுக்கலில் அதிர்ஷ்டசாலியாக புனிதமக்கா சங்கைமிகு ஹரம் ஷரீப் எதிரில் உள்ள புதிய ஹில்டன் டவர் என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு நாள் காலை சிற்றுண்டி உணவுடன் டிலக்ஸ் அறை வசதியுடன் தலா இரண்டு நபருக்கு தங்கிட நல்லதோர் வாய்ப்பினை சவூதிக்கு வந்து ஒரு மாதமே ஆனா புதிய உறுப்பினர் சகோ பொறியாளர் அல்ஹாபிழ் எம்.ஹெச்.முஹம்மது அலி பெற்றுக்கொண்டார்.
இறுதியில் அழைப்பினை ஏற்று வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் உட்பட ஜித்தா, மக்கா மற்றும் யான்பு சகோதரர்கள், நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து மற்றும் இந்நிகழ்ச்சிக்கு நன்கொடை தந்தும், அனுசரணை அளித்தும் எல்லா வகையிலும் உழைத்த உதவிய அனைத்து நல்ல உள்ளங்களை பாராட்டி அவர்களுக்காக பிரார்த்திக்கப்பட்டது.
காயலர்கள் அனைவரும் கவலைகள் மறந்து "ஓடி விளையாடு பாப்பாவாக" மாறிய இந்நாளை மறக்க முடியுமா? என்ற விடை தேடும் வினாவுடன் ஒரே நாளில் விமான பயணச்சீட்டு, கடவு சீட்டு, விசா இன்றி ஊர் சென்று திரும்பிய மன திருப்தியுடன் சந்தோசத்தை நெஞ்சில் சுமந்து கொண்டு இன்ஷா அல்லாஹ் மீண்டும் இது போன்ற இனியதோர் நாள் வர வேண்டும் என்ற நல்ல பிரார்த்தனையுடன் கலைந்து சென்றனர்.
இனிய இந்நிகழ்வான குடும்ப சங்கம ஒருங்கிணைப்பை.
சகோ.குளம் எம்.எ.அஹ்மது முஹிய்யதீன், சகோ.சட்னி,எஸ்.எ.கே.செய்யது மீரான், சகோ.எம்.எ.செய்யது இபுராஹீம், சகோ.அரபி முஹம்மது ஷுஅய்ப், சகோ.எம்.எஸ்.எல்.முஹம்மது ஆதம், சகோ.சட்னி.எஸ்.எ.கே.முஹம்மது உமர் ஒலி ஆகியோர் மிக சிறப்புடன் செய்திருந்தனர்.அல்ஹம்துலில்லாஹ் !!!
தகவல் மற்றும் நிழற்படங்கள்;
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
24-02-2015.
|