DCW தொழிற்சாலை - தனது புதிய தொழிற்சாலையான SYNTHETIC IRON OXIDE என்ற பொருளை உற்பத்தி செய்யும் SYNTHETIC IRON OXIDE PIGMENT PLANT (SIOPP) தொழிற்சாலைக்கு, கட்டிடம் உரிமங்களை முறைப்படி பெறவில்லை என காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) சில மாதங்களுக்கு முன்னர் புகார் சமர்ப்பித்தது.
தொடர்ந்து நடந்த தணிக்கை ஆய்வுகளும் அதனை உறுதி செய்துள்ளதாக தெரிகிறது.
தற்போது, இது குறித்து DCW தொழிற்சாலைக்கு நோடீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவரின் முகநூல் பதிவு வருமாறு:
DCW தொழிற்சாலைக்கு எதிராக நம் மக்கள் அனைவரும் போராடி வருவதை நாம் அறிவோம். இந்த நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டத்திற்கு எதிராக மார்ச் 2012 சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் நேரடியாக சென்று, அதற்கு எதிர்ப்பினை பதிவு செய்து வந்தேன். மேலும் - KEPA அமைப்பு சென்னையில் நடத்திய போராட்டத்தில் கலந்துக்கொண்டேன். இது தவிர, சுற்றுச்சூழல் அமைச்சர், சுகாதார அமைச்சர் ஆகியோரிடம் DCW பிரச்சனை குறித்து அவ்வப்போது எடுத்து கூறி வந்துள்ளேன்.
DCW நிறுவனத்தின் விரிவாக்கத்திட்ட கட்டுமானத்திற்கு - நகர்மன்றத்தின் பார்வைக்கு எடுத்து வராமால், அனுமதி வழங்கக்கூடாது என்றும், ஆணையருக்கும் பல மாதங்களுக்கு முன்பே - எழுத்துப்பூர்வமாக கூறியும் இருந்தேன்.
அப்படி இருந்தும், DCW தொழிற்சாலைக்கு சட்டத்திற்கு புறம்பான முறையில் - கட்டிட அனுமதிகள் - அதிகாரிகளால் - கொடுக்கப்பட்டுள்ளது என்று KEPA அமைப்பு மூலம் புகார் - நவம்பர் மாதம் - பெறப்பட்டது. அதனை தொடர்ந்து, அந்த உரிமங்களை ரத்து செய்ய நான் கொண்டு வந்த தீர்மானத்தை உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தொழிற்சாலைக்கு சென்று, ஆய்வுகள் செய்து - இது குறித்து முடிவெடுக்கப்படும் என உறுப்பினர்கள் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.
இதற்கிடையே - உள்ளாட்சி மன்றங்களின் தணிக்கை குழு, டிசம்பர் 2013இல் - DCW நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமங்கள் முறைப்படி வழங்கப்படவில்லை என்றும், பல லட்ச ரூபாய் - காலி மனை வரி வசூல் செய்யப்படவில்லை என்றும் சமீபத்தில் தெரிவித்தது.
இதனை தொடர்ந்து - சட்டத்திற்கு புறம்பாக மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களை ஏன் இடிக்கக்கூடாது என DCW நிறுவனத்திற்கு நோடீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் பதில் திருப்தியாக இல்லை. எனவே - அந்நிறுவனம் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு தனது முகநூல் பக்கத்தில் நகர்மன்றத் தலைவர் பதிவு செய்துள்ளார்.
தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik
|