எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் சஊதி அரபிய்யா – ஜித்தா, காயல் நற்பணி மன்றத்தின் 35-ஆவது பொதுக்குழு “காயலர் சங்கமம்” துவக்க நிகழ்வுகள் ஜித்தா வான் படை விமான நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள இஸ்திராஹா எனும் மிக விசாலமான ஓய்வு இல்லத்தில் வைத்து சிறப்பாக நடந்தேறிய அந்நிகழ்வு குறித்த அம்மன்றத்தின் அறிக்கை:
கடந்த 01.04.2016 வெள்ளிக்கிழமை காலை 8:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை வெகு விமரிசையாக நடைபெற்ற ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் காயலர் சங்கமம் என்ற இனிய இந்நிகழ்வின் ஆரம்பமாக நிகழ்ச்சிக்கு வந்தவர்களை வரவேற்றனர்.
வரவேற்பு:
ஏற்கனவே அறிவித்தபடி காலை 07:30 மணியில் இருந்தே உறுப்பினர்கள் ஜித்தா, ஷரஃபியா, ஆர்யாஸ் உணவக வளாகம் முன் வருகை தர, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்தில் சகோ. சட்னி எஸ்.ஏ .கே.செய்யது மீரான், எஸ்.முத்து வாப்பா மற்றும் சகோ.எம்.ஐ.அப்துல் பாசித் தலைமையில் நிகழ்விடத்திற்கு அழைத்து வரப்பட்டனர், சொந்த வாகன வசதி உள்ளவர்கள் தத்தமது வாகனங்களில் முற்கூட்டியே வந்து சேர்ந்தனர். புனித மக்காவிலிருந்தும், மதீனா மற்றும் யான்புவிலிருந்தும் தமது வாகனம் மூலம் உறுப்பினர்களும், குடும்ப உறுப்பினர்களுடன் திரளாக வந்து சேர்ந்தனர்.
வருகை தந்த அனைவர்களையும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் சகோ.குளம் எம்.எ.அஹ்மத் முஹ்யித்தீன், மற்றும் ஒருங்கிணைப்பாளர் சகோ. எம்.எஸ்.எல்.முஹம்மது ஆதம் தலைமையில் வரவேற்புக் குழுவினர்கள் சகோ எம்.எம்.மூசா சாஹிப், சகோ. ஏ.எம்.செய்யது அஹமது மற்றும் சகோ.எம்.டபிள்யூ.ஹாமீது ரிபாய் ஆகியோர் அகமகிழ வரவேற்றனர்.
காலை உணவு:
வந்திருந்தோர் அனைவருக்கும் சுவை மிக்க காலை உணவு பசியாற இட்லி,உளுந்துவடை மற்றும் ரவை உப்புமா வகைகள் பஃபே முறையில் பரிமாறப்பட்டும் காயலின் சுவைமிகு இஞ்சி ஏலம் தேயிலையுடன் உபசரிக்கப்பட்டது. வந்திருந்தோர் முகமலர்ச்சியுடன் ஒருவருக்கொருவர் உற்சாகமாக உரையாடி, நலம் விசாரித்துகொண்டிருந்தனர்.
மறுபுறம் அமைக்கப்பட்டிருந்த வருகை பதிவேட்டில் புதிதாய் வந்தவர்கள் உட்பட உறுப்பினர்கள் யாவரும் தம் வருகையை பதிவு செய்து சந்தா மற்றும் நன்கொடைகள் செலுத்தி கொண்டனர். புதிதாக வந்துள்ளவர்கள் உறுப்பினர் படிவத்தினை நிரப்பியும் தங்களை இம்மன்றத்தில் உறுப்பினராகவும் இணைத்து கொண்டார்கள்.
விளையாட்டு போட்டிகள் :
முதலாவதாக காலை 09 -30 மணியளவில் வெளியரங்க விளையாட்டு போட்டிகள் விசாலமான மைதானத்தில் சிறுசுகளின் ஆரவாரத்துடன் ஆரம்பமானது. துள்ளிக்குதித்து வந்த சிறுவர்கள், சிறுமியர்கள், மழலைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் போட்டிகளில் கலந்துகொண்டனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை அதற்காக நியமிக்கபட்ட குழுவினர் சகோ.அரபி எம்.அய்.முஹம்மது ஷுஐப், சகோ.ஒய்.எம்.முஹம்மது ஸாலிஹ், சகோ.சீனா எஸ்.ஹெச்.மொஹுதூம்முஹம்மது, சகோ.எம்.என். முஹம்மது ஷமீம்,சகோ சோல்ஜர் எஸ்.டி.செய்கு அப்துல்லாஹ், சகோ அல்ஹாபிழ்.எம்.ஏ.சி.ஷா மீரான் சாஹிப் மற்றும் சகோ அல்ஹாபிழ், எஸ்.ஐ..ஸல்மான் பாரிஸ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
பெனால்டி கிக் போட்டி:
பெரியவர்களுக்கு வெளி விளையாட்டரங்கில், முதலாவதாக கால்பந்து பெனால்டி கிக் போட்டி 6 குழுக்களாக A, B, C, D,E,F என பிரிக்கப்பட்டு போட்டிகுழுக்கள் வழமையான உற்சாகத்துடன் கலந்து கொள்ள போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் கலந்து கொண்ட பெரியவர்கள் காயல் வீதிகளிலும், வெட்டைகளிலும் விளையாடும் சிறார்களாக மாறி கள்ள விளையாட்டு - நசுவினி ஆட்டம் ஆட முற்பட்டது உண்மையான காயல் விளையாட்டை கண் முன் கொண்டு வந்தது. போட்டியில் பங்கு பெற்றவரகள் அனைவரும் உற்சாகமுடன் பள்ளிப்பருவத்திலே துள்ளி விளையாடும் மழலைகளாக மாறினர். பெனால்டி கிக் வெற்றியை C அணி தட்டிச்சென்றது.
வாலிபால் எனும் கைப்பந்து போட்டி:
அடுத்து வாலிபால் விளையாட்டு நடைபெற்றது. இவ்விளையாட்டும் 6 குழுக்களாக முன்னர் போல் பிரிக்கப்பட்டு முறையே A, B, C என்ற பெயரில் விளையாடின. மிகுந்த ஆரவாரத்துடனும், உற்சாகத்துடனும் நடந்தேறிய வாலிபால் போட்டி விறுவிறுப்பாக இருந்தது. இப்போட்டியின் வெற்றி வாய்ப்பு B அணிக்கு கிட்டியது.
குட்டீஸ் போட்டிகள்:
மறுபுறம், குட்டீஸ்களுக்கான வெளி விளையாட்டரங்கில் மழலைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இசை நாற்காலி, சாக்கு ஓட்டம், பலூன் உடைத்தல், ஓட்டபந்தயம் என அனைத்து போட்டிகளிலும் மழலைகளும், சிறுவர்களும், சிறுமியர்களும் மிகுந்த சந்தோசத்துடனும் சுறுசுறுப்புடனும் கலந்துகொண்டனர். சிறார்களின் விளையாட்டுக்களை தாய்மார்கள் கண்டு ரசித்தனர். குழந்தைகளுக்கான அனைத்து போட்டிகளையும் சகோ. அரபி எம்.ஐ. முஹம்மது ஷுஐப், மற்றும் சகோ.எம்.என்.முஹம்மது ஷமீம் ஆகியோர் முன்னின்று வழமைப்போல் அழகுற நடத்தினர்.
மங்கையர்களுக்கான போட்டி:
விசாலாமான உள்ளரங்கில் மங்கையர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தேறியது. காயல் தமிழ், வினாடி வினா போன்ற ஏராளமான பொழுபோக்கு நிகழ்சிகள் சிறப்பாக நடைபெற்றது. மங்கையர்களுக்குரிய போட்டிகளை சகோதரிகள் அருமையாக நடத்தினர். மங்கையர் மற்றும் மழலைகள் மகிழ்ச்சி பெருக்கால் திளைத்தனர்.
ஜும்ஆ தொழுகை:
ஜும்ஆ தொழுகை நேரமானதால் மதியம் 12:3௦ மணிக்கு போட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது, தொழுகைக்கு இடைவேளை விடப்பட்டு மதியம் 01:00 மணி அளவில் உள்ளரங்கில், காயல் அல்ஜாமியுல் அஜ்ஹர் ஜூம்மா பள்ளியின் முன்னாள் கத்தீப் சகோ.எம்.எம்.முஹம்மது நூஹு அல்தாபி ஆலிம் அவர்களால் குத்பா பேருரை ஆரம்பமானது. உத்தம நபிகளின் உன்னத சஹாபாக்கள் மிக வறுமையில் இருந்து
உழைக்கும் போது அவர்களிடம் ஒரு ஆடை மட்டுமே இருக்கும் அந்த சூழ்நிலையிலும் அவர்கள் ஈட்டும் வருமானத்தில் ஒரு பகுதியை தர்மம் செய்து வந்தார்கள்.
அதற்கு அல்லாஹ் அவர்களுக்கு உஹது மலையை விட பல மடங்கு பலனை தருவதாக வாக்களித்துள்ளான். நாம் நம் சட்டை பையில் 1000 ரியால் வைத்துக்கொண்டு அதில் 500 ரியால் தானம் செய்தாலும் அந்த உன்னத சஹாபாக்கள் செய்த செயலுக்கு நிகராகாது.
ஆயினும் நம்முடைய அந்த 500 ரியால் மதிப்பு இறைவன் புறத்தில் மிகவும் அதிகம் தான். அதை கொண்டு வல்ல ரஹ்மான் நமக்கு இரட்டிப்பாக்கி தருவான். அள்ளி அள்ளி கொடுத்து நாம் செய்யும் தர்மம் நிச்சயம் குறையாது. எனவே நாம் அனைவர்களும் தர்மம் கொடுப்பதில் போட்டி போட வேண்டும் என்றும் நாம் செய்யும் தான தர்மங்கள் பற்றியும் இம்மன்றம் இதுவரை நம் காயல் சொந்தங்களுக்காக செய்துள்ள நலத்திட்டங்களையும், உதவிகளையும் விபரமாக பட்டியலிட்டு மிக அழகுற எடுத்துக்கூறி பின்னர் ஜும்மா தொழுகையை வழிநடத்தினார்கள்.
காயல் களரி சாப்பாடு:
மதியஉணவு ஏற்பாடு செய்யப்பட்டு சுவைமிகுந்த காயல் மண்ணுக்கு சொந்தமான களரி சாப்பாட்டு பரிமாறப்பட்டது. முதலில் பெண்கள், மழலைகள் பந்தி பரிமாறும் வேளையில், உள்ளரங்கில் பெரும்பாலனவர்கள் பங்கு பெற்ற இசைப்பந்து சுற்று நடைபெற்றது. மூன்று பந்துகள் ஒருவர் பின் ஒருவராக மாறி வர, இசை நின்ற பின் மூன்று மூன்று நபராக வெளியேறினர். வந்திருந்த அனைவருக்கும் நம் காயல் மண்ணில் இருந்தது போன்ற எண்ணம் மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சியை அங்கே உணரமுடிந்தது இறுதியாக இதில் செயலாளர் சகோ எம்.ஏ.செய்யது இபுராஹிம் வெற்றி பெற்றார். பின்பு ஆண்களுக்கான பந்தி நடைபெற்றது. கமகமக்க நெய்ச் சோறு, சுவைமிகு களறி கறி, கத்தரிக்கா மாங்கா என காயலை நினைவுபடுத்தி, அதன் அதீத மணத்தால் மீண்டும் காயல் மண்ணுக்கே அனைவரையும் அழைத்துச்சென்றது.
இச்சுவைமிக்க களரி சாப்பாடு சகோ.கத்தீப் எம்.என்.லெப்பைத்தம்பி தலைமையில் சிறப்புற தயார் செய்யப்பட்டிருந்தது. அதன்பின் சிறிது நேரம் கழித்து கோன்ஜோன் ஐஸ் கிரீம் வழங்கப்பட்டது. உணவு ஏற்பாடு, பரிமாறுதல் சகோ எஸ்.எஸ்.ஜாபர் சாதிக் தலைமையில் சகோதரர்கள் யான்பு சாவன்னா காக்கா பிரபு எஸ்.எம். செய்யது முஹிய்யதீன், வி.எஸ்.எச்.முத்து மொஹ்தூம், கேவி .எம்.எஸ். செய்யது முஹிய்யதீன்,
சோனா ஏ.டி.ஹல்லாஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் சிறப்பாக செய்தனர். ஒருபுறம் வெளியரங்க போட்டிகள் சாப்பட்டுக்குப்பின் ஆரம்பமாகி நடந்து கொண்டிருக்க மறுபுறம் உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு என்பதால் சிலர் உறங்கி கொண்டிருந்தனர். அதன் பிறகு அஸர் தொழுகையை உள்ளரங்கில் கூட்டாக நிறைவேற்றிய பின் மாலை 5 மணிக்கு காயல் சொல்விளையாட்டு ஆரம்பமானது.
காயல் மரபு சொல் விளையாட்டு:
பட்டர் குக்கிஸ், வடை, மற்றும் தேனீர் சுவையுடன் உள்ளரங்க போட்டி ஆரம்பமானது. காயல் பிரத்யோக மற்றும் மரபு சொல் விளையாட்டு படம் பார்த்து – காயல் தமிழ் பேசு என்ற ஒரு அழகான தொகுப்பை காணொளி காட்சி மூலம் திறையிட்டு காட்டி, 7 பேர்கொண்ட 8 குழுக்களாக பிரிக்கப்பட்ட குழுவிடம், ஸ்லைட் காட்டி, அங்கே படம் இரண்டோ, மூன்றோ சேர்ந்தார் போல் திரையில் தோன்றும், அதை வைத்து நம் காயல் தமிழ் சொல் கூற வேண்டும். உதாரணமாக முதல் படத்தில் பலா பழம் படம் அடுத்து கடைசில் ஒரு பெட்டி இப்போது கூறும் காயல் தமிழ் சொல் பலாப் பெட்டி, இது போன்று ஏராளம். காயல் சகோதரர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் இதில் கலந்து கொண்டதில் நேரம் சென்றதே தெரியவில்லை. இப்போட்டியினை அருமையாக தயாரித்து சகோ.சீனா எஸ்.ஹெச்.மொகுதூம் முஹம்மது மற்றும் சகோ.ஒய். எம் முஹம்மது ஸாலிஹ் அழகுற நடத்தினார்கள்.
அடுத்து மஃக்ரிப் தொழுகையும் கூட்டாக நடைபெற்றது.
பொதுக்குழு கூட்டம்:
மன்றத்தின் 14-ம் ஆண்டு துவக்கம் மற்றும் 35 வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழுவை மன்றத்தலைவர் சகோ.குளம் எம்.எ.அஹ்மத் முஹ்யித்தீன் தலைமை ஏற்று நடத்த, துணைத்தலைவர் மருத்துவர் எம்.ஏ .முஹம்மது ஜியாது அவர்களின் புதல்வன் இளவல் ஜாவித் கிராஅத் ஓதிட சிறப்பு விருந்தினர்கள் சகோ.கே.வி.அப்துல்காதர், சகோ. நூர் அஹ்மது, பொறியாளர் முஹம்மது முஹியதீன், சகோ ஏ.கே.சம்சுதீன் மற்றும் சகோ. ஆதம் சுல்தான், சகோ. எம்.எம்.மூஸா சாஹிப், மருத்துவர் எம்.எ.முஹம்மது ஜியாது மற்றும் சகோ கலவா முஹம்மது இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வை சகோ. எம்.டபிள்யூ.ஹாமித் ரிஃபாய் தொகுத்து வழங்கினார்.
தலைமையுரை:
இந்த பொதுக்குழு சிறப்பாக நடை பெறுவதற்கு பெருந்திரளாக வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் தன் அகங்கனிந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டு, இம்மன்றம் ஆற்றிய பணிகளை சுருங்க சொல்லி விளங்க வைத்து இந்த ஜித்தா மன்றம் மென்மேலும் பல பணிகளை நம் ஊர் மக்களுக்கு செய்திட தாங்களும், தங்களை சேர்ந்த அலுவல் நண்பர்களிடமும் எடுத்து கூறி நன்கொடையாகவோ அல்லது ஜகாத் நிதியாகவோ பெற ஆவன செய்ய வேண்டுமென்று வேண்டி விரும்பி கேட்டு தனதுரையை நிறைவு செய்தார். சகோ. குளம் எம்.எ.அஹ்மது முஹ்யித்தீன். நிகழ்வை தொகுத்து வழங்கிய சகோ. எம்.டபிள்யூ.ஹாமித் ரிஃபாய், இம்மன்றம் இதுவரை செய்த பல நலப்பணிகளை, கல்வி ,மருத்துவம் மற்றும் சிறுதொழில் உதவி வேண்டி பயன் பெற்றோர் K.M.T மருத்துவமனைக்கு அல் ஹரமைன் BLOCK கட்டி கொடுத்தது மற்றும் கடந்த மூன்றாண்டுகளாக ரமலானில் நம் ஊர் பள்ளி இமாம், முஅத்தின்களுக்கு மற்ற உலக காயல் நல மன்றங்களுடன் இணைந்து இதுவரை வழங்கிய தொகை, நமதூரில் துணை மின் நிலையம் அமைக்க முஸ்லீம் ஐக்கிய பேரவை மூலம் வழங்கிய தொகை, ஆரம்ப காலத்தில் கடற்கரை பள்ளி இமாமுக்கு மாத மாதம் நாம் வழங்கியதின் மொத்த தொகை,
மற்றும் கொடிய புற்றுநோய் விழிப்புணர்வுக்காக பெண்கள் மூலம் வீடு வீடாக சென்று சர்வே எடுத்தது, போன்ற வரவு செலவு விபரங்களை நிதிநிலை அறிக்கையை உங்கள் பார்வைக்கு பட்டியலாக உங்கள் கரங்களிலே தந்துள்ளோம் என்றதோடு இன்று சந்தா மற்றும் நன்கொடை மூலமாக வசூலான தொகை எவ்வளவு என்பதையும் மிக தெளிவுடன் எடுத்துரைத்தார்.
செயலாளர் உரை:
இந்த அருமையான ஒன்று கூடல் தினம் என்று வரும் என நாம் எல்லோரும் மிகுந்த ஆவலுடன் எதிர் நோக்கியதும் இனிய இந்நன்நாளில் நாம் இன்று அனைவரும் ஒன்று கூடியுள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்! நம் ஊரில் இருப்பது போன்ற உள்ளுணர்வு நமக்கு இருக்கிறது. இதில் ஏதோ கூடினோம், கலைந்தோம் என்பதல்ல நோக்கம், மிக அருமையான நல்ல பணிகளை நம் ஊர் மக்களுக்காக செய்வது என்ற எண்ணத்திலே ஆரம்பிக்கப்பட்டு இன்று 13 வருடம் கழிந்து 14 ஆம் ஆண்டிலே அடியெடுத்து வைத்துள்ளோம். நம் பக்கத்துக்கு வீட்டிலே, நம் தெருவிலே எத்தனையோ பேர் கஷ்டப்பட்டு கொண்டிருப்பார்கள் அவர்களுக்கு உதவ முன் வரவேண்டும், நாம் தனிப்பட்ட முறையில் பெரிய தொகை கொடுத்து உதவ முடியாது. ஆகவேதான் நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து இம்மன்றம் மூலம் அவர்களுக்கு உதவ தோதுவாக இருக்கிறது. நாம் கொடுக்கும் ஒவ்வொரு ரியாலுக்கும் வல்ல அல்லாஹுவிடம் பெரிய பலன் உண்டு. எனவே தாங்கள் சந்தா மற்றும் நன்கொடைகளை தருவதில் முந்திகொள்ளுங்கள். அதனால் நாம் இன்னும் தேவை உடையோருக்கு அதிகமாக செய்ய உங்களுடைய ஒத்துழைப்பும், ஆலோசனையும் தேவை என்று கூறிக்கொண்டு தனதுரையை நிறைவு செய்தார்.
செயலாளர் சகோ.எம்.ஏ. செய்யது இபுராஹிம்.
மன்ற செயல்பாடுகள்:
கடந்த 5 செயற்குழு கூட்டங்களில் நிறைவேற்றிய தீர்மானங்களையும், வழங்கப்பட்ட உதவி தொகைகளையும் மேலும் நிறைவேறிய மன்றப்பணிகள் சமீபத்தில் சென்னை மற்றும் கடலூரில் நடந்த வெள்ள நிவாரண நிதிக்கு இம்மன்றம் அள்ளி கொடுத்ததையும் மற்றும் நமதூர் கே எம் டி மருத்துவமனையில் சமீபத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள
இரவு நேர இல்லம் தேடிவரும் அவசரகால மருத்துவ சேவைக்கு நம்முடைய பங்களிப்பாக 6 மாதத்திற்கு மற்ற சகோதர மன்றங்களோடு சேர்ந்து உதவியுள்ளதும் மற்றும் அதனை சார்ந்த நிகழ்வுகளையும், மிக தெளிவுடன் எடுத்துக்கூறியும் இந்த 13 ஆண்டுகளில் இதுவரை 93 செயற்குழு, இத்தோடு 35 - பொதுக்குழு மற்றும் சில நேரங்களில் சிறப்பு கூட்டங்களும் நடந்துள்ளன. இந்த எல்லாவித நிகழ்விற்கும் இடம், உணவு உபசரிப்புகளுக்கு என உறுப்பினர்கள் தரும் சந்தாவிலிருந்து ஒரு ஹலாலா கூட எந்தவித செலவினங்களையும் செய்யவில்லை இவைகளுக்கு செயற்குழு மற்றும் உறுப்பினர்களின் முழுமையான பங்களிப்பில் தான் நடந்துள்ளன, என்றும் குறிப்பிட்டு இவைகளை புதிதாய் வந்துள்ளவர்கள் உள்வாங்கி கொள்ள வேண்டும். எனவும் தனக்கேயுரிய நகைச்சுவை உணர்வோடு உரையை நிறைவு செய்தார் மற்றொரு செயலாளர் சகோ.சட்னி எஸ்.எ.கே. செய்யது மீரான்.
சிறப்புரை:
இந்த மாமன்றத்தின் நல்ல நோக்கம், குறிக்கோள், கோட்பாடுகள் ஆற்றிவரும் பணிகள், சொல்லி மாளாது அப்படி சேவைகள் ஆற்றி வருகின்றார்கள் என்பதை இங்கு வந்து காணும்போதெல்லாம் நன்றாக உணரமுடிகிறது. கடந்த செயற்குழுவில் நான் கலந்து கொண்ட போது, ஷிபா மூலமாக மருத்துவ உதவி வேண்டி வரும் விண்ணப்பத்திற்கு மன்றம் மூலமாக செய்யும் உதவி போக, நோயாளியின் தேவை அதிகம் இருப்பின் செயற்க்குழு உறுப்பினர்களே ஆளாளுக்கு உதவ முன் வருவார்கள். அந்த விண்ணப்பதாரர் யாரேன்றே தெரியாது, அவர்களுக்கும் இவர்களுக்கும் சம்பந்தமே இருக்காது இருப்பினும் அந்த ஈகை குணம், அது தான் அங்கே முன் நிற்கிறது. இது போன்று நாம் எல்லோரும் உதவ முன்வரவேண்டும். எனவே நம் மக்களுக்காக ஆற்றி வரும் இம்மன்றத்தின் பல சேவைகளுக்கு வல்ல அல்லாஹ் மிக சிறந்த நற்கூலியை தருவான் அதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த மன்றத்தின் சேவை தொடர வேண்டும் பல பணிகளை தொய்வின்றி நடத்த வேண்டும் என்று வாழ்த்தி துஆ செய்து தனதுதுரையை நிறைவு செய்தார் மன்ற ஆலோசகர் சகோ.எம்.ஏ.ஆதம் சுல்தான்.
புதிய உறுப்பினர்கள் அறிமுகம்:
அதனை அடுத்து புதியதாக சவுதி வந்து வேலையில் சேர்ந்த நமதூர் சகோதரர்கள் இம்மன்றத்தில் தங்களை இணைத்துக்கொண்டு இப்பொதுக்குழுவில் கலந்து கொண்ட உறுப்பினர்களாக ஒவ்வொருவராக வந்து தன்னை சுய அறிமுகம் செய்து கொண்டனர். இதில் மக்காவிலிருந்து முதன்முதலாக வருகை தந்திருந்த சகோ பாளையம் நிஜார் காலையிலிருந்து இதோ இந்த இரவு நேரம் வரை நடைபெற்ற எல்லாவித நிகழ்வுகளையும் உள்வாங்கி பார்த்து ரசித்தும் தானும் உளப்பூர்வமாக மகிழ்ந்ததும் இவ்வளவு நாளாக தனது வேலைகளின் ஓய்வில்லா சூழ்நிலைகளினால் இதில் கலந்து கொள்ள முடியாமல் போனது கைசேதம் என உணர்வதும் மேலும் இம்மன்றம் இதுவரை இவ்வளவு பெருந்தொகையை நம் நகர மக்களுக்காக வாரி வழங்கியுள்ளதும் பார்க்கையில் மிக பாராட்டுக்குரியது என்றும் மிகவும் நகைச்சுவையோடு நயம்பட எடுத்துரைத்தார். இவரது உளப்பூர்வமான உரை அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்தியது.
பரிசளிப்பு விழா:
தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற சிறார்களுக்கும், ஆண்களுக்கும் கண்கவர் பரிசுகள் வழங்கப்பட்டது. மங்கையரின் சார்பாக அவர்களின் குழந்தைகள் வந்து பரிசுகளை மிக குதூகலத்துடன் வாங்கி சென்றனர். இறுதியாக குலுக்கல் முறையில் பம்பர் பரிசுகள் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதில் ஒரு கிராம் தங்க நாணயம் மூவருக்கும், மெகா குலுக்கலில் அதிர்ஷ்டசாலியாக மக்கா மூவன் பிக் என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு நாள் தங்கும் அரியதோர் வாய்ப்பை சகோ. அப்துல்ரஹ்மான் கனி பெற்றுக்கொண்டார். முன்னிலை வகித்த நகரின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் மன்ற நிர்வாகிகள் பரிசுகளை வழங்கினர்.
நன்றியுரை:
குடும்ப சங்கம விழாவாக நடைபெற்ற இனிய இந்நிகழ்விற்கு அயராது பாடுபட்டு உழைத்த அன்பு சகோதரர்கள் அனைவர்களுக்கும், உணவு வகைகளுக்கு, குடிநீர், ஐஸ் க்ரீம் மற்றும் தின்பண்டம், பரிசுப்பொருட்கள், இஸ்திராஹா இவைகளுக்கு தாரளமாக அனுசரணை வழங்கிய நண்பர்களுக்கும், வாகன உதவி செய்தவர்களுக்கும், மக்கா, மதீனா யான்பு மற்றும் ஜித்தாவிலிருந்து வந்து பெருந்திரளாக கலந்து கொண்ட அனைவர்களுக்கும் சகோ.எஸ்.எஸ்.ஜாபர் சாதிக் தனது நன்றி கலந்த பாராட்டுக்களை கூறி நிறைவு செய்தார்.
பிரார்த்தனை:
சகோ.அல்ஹாபிழ் எம்.எஸ்.முஹம்மது இப்ராஹீம் ஆலிம் புஹாரி பிரார்த்திக்க 'துஆ' கஃப்பாராவுடன் இனிய இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
செயற்குழுக் கூட்டம்:
மன்றத்தின் 94-ஆவது செயற்குழு கூட்டம் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 07-00 மணிக்கு வழமைப்போல் இம்பாலா கார்டனில் நடைபெறும் இன்ஷா அல்லாஹ். மற்ற விபரங்கள் அடுத்து தெரிய தரப்படும்.
காயலர்கள் சங்கமம் ஒருங்கிணைப்பை சகோ. குளம் எம்.எ.அஹ்மது முஹிய்யதீன், சகோ..சட்னி எஸ்.ஏ.கே,செய்யது மீரான், சகோ. எம்.எஸ்.எல். முஹம்மது ஆதம் , சகோ.சட்னி எஸ்.ஏ.கே.முஹம்மது உமர் ஒலி, சகோ பொறியாளர் ஜி.எம்.முஹம்மது சுலைமான், சகோ பொறியாளர் தோல்ஷாப் எம்.ஏ.சி. முஹம்மது லெப்பை மற்றும்
சகோ பொறியாளர் அல்ஹாபிழ்,எம்.ஹச்.முஹம்மது அலி ஆகியோர் சிறப்புடன் செய்திருந்தனர்.
செய்தியாக்கம்:
எஸ்.ஐச்.அப்துல் காதர்.
எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.
புகைப்படம்:
சொளுக்கு எஸ்.எம்.முஹம்மது உமர்
சொளுக்கு எஸ்.எம்.அஹமது லெப்பை மற்றும்
வாட்ஸ் அப் குழுமத்தில் இணைந்திருந்த உறுப்பினர்கள்.
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
25.04.2016.
|