சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள் - மழலையர் பல்சுவைப் போட்டிகள், பரிசளிப்பு, பொழுதுபோக்கு அம்சங்களுடன் நடைபெற்று முடிந்துள்ளன.
இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
குடும்ப சங்கமம்:
இறையருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்ச்சி, 09.04.2016. சனிக்கிழமையன்று மாலையில் துவங்கி, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் நிறைவுற்றது.
உறுப்பினர்கள் வருகை:
சங்கம நிகழ்விடமான Aloha Changi Resort - Fairy Point Bungalow & Chalet 5க்கு, மன்ற அங்கத்தினர் அனைவரும் சனிக்கிழமையன்று 17 மணியளவில் வந்தடைந்தனர்.
மாலை சிற்றுண்டி & அரட்டை:
துவக்கமாக அஸ்ர் தொழுகையை மன்ற ஆலோசகர் பாளையம் முஹம்மத் ஹஸன் வழிநடத்தினார். அனைவருக்கும் இஞ்சி தேனீர், சமோசா, கேரட் ஹல்வா ஆகியன சிற்றுண்டியாகப் பரிமாறப்பட்டன.
நீண்ட இடைவெளிக்குப் பின் சந்தித்துக் கொண்டமையால், உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொண்டதோடு, தாயகம் தொடர்பான அரட்டையில் சில நிமிடங்கள் மூழ்கினர்.
தெருக்கோடி க்ரிக்கெட்:
மாலையின் இதமான வானிலையில், மழலையருக்கான விளையாட்டுப் போட்டிகள் ஒருபுறம் நடைபெற, மறுபுறம் - மன்றத்தின் உறுப்பினர்கள் தெருக்கோடியில் முகாமிட்டு க்ரிக்கெட் விளையாடினர்.
மஃரிப் வேளையை அடைந்ததும், உறுப்பினர்களான ஷாஹுல் ஹமீத் பாதுஷா அதான் ஒலிக்க, அபுல் காஸிம் தொழுகையை வழிநடத்தினார்.
ஒருநாள் ஊதிய நன்கொடை:
நகர்நலனுக்காக மன்றத்தால் திரட்டப்படும் நிதித் திட்டங்களுள் ஒன்றான “ஒருநாள் ஊதிய நன்கொடை” திட்டத்தின் கீழ், மன்ற அங்கத்தினரின் ஆர்வத்துடன் கூடிய பங்களிப்பால், 2 லட்சம் ரூபாய் நன்கொடை திரட்டப்பட்டது.
பொதுக்குழுக் கூட்டம்:
பின்னர் பொதுக்குழுக் கூட்டம், ஷாஹுல் ஹமீத் பாதுஷாவின் கிராஅத்துடன் துவங்கியது. மன்ற ஆலோசகர் பாளையம் முஹம்மத் ஹஸன் வரவேற்புரையாற்றினார்.
மன்ற அங்கத்தினரின் மனப்பூர்வமான ஒத்துழைப்புகள் குறித்து நெகிழ்ந்து பேசிய அவர், அதன் காரணமாக 11 ஆண்டுகளை மன்றம் இனிதாகக் கடந்துள்ளதாகக் கூறினார். பல்வேறு காலகட்டங்களைத் தாண்டி பயணித்துள்ள மன்றம், தற்போது உயர்ந்த இடத்தில் இருப்பதாகப் பெருமிதத்துடன் கூறிய அவர், உறுப்பினர்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் அன்போடும் - கண்ணியத்தோடும் நடந்துகொள்ள வேண்டும் என அறிவுரை கூறினார்.
தொடர்ந்து, மன்றத் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் உரையாற்றினார். 2004ஆம் ஆண்டில் இம்மன்றம் துவக்கப்பட்டபோது, “உறுப்பினர்கள் பல்வேறு கொள்கை கோட்பாடுகளைக் கொண்டவர்களாக இருந்தாலும், மன்றப் பணிகளில் அது வெளிப்படவே கூடாது” என்று தீர்மானிக்கப்பட்டதன் படி, இறையருளால் இன்றளவும் நேர்த்தியாகப் பயணித்து வருவதாகவும், அதன் காரணமாகவே இந்த 11 ஆண்டுகால மன்றத்தின் வெற்றிப் பயணம் சாத்தியமாயிற்று என்றும் அவர் கூறினார்.
தாயகம் காயல்பட்டினத்தில் - பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்கள் நலனுக்காக கல்வி, மருத்துவம், மனிதாபிமானம், வணிகம், முதியோர் நலன் என பல வகைகளில் மன்றம் உதவிப் பணிகளைச் செய்து வருவதாகக் கூறிய அவர், இளமைத் துடிப்புடன் உள்ள மன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களது வயதுக்குத் தீனி போடும் வகையில், ஒன்றுகூடும் தருணங்களிலெல்லாம் விளையாட்டுப் போட்டிகளும், நட்பு அடிப்படையிலான விளையாட்டுகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.
திருமறை குர்ஆனை மனனம் செய்துள்ள ஹாஃபிழ்கள் இம்மன்றத்தில் நிறைவாக இருப்பதால், அவர்களின் மனனம் பாதுகாக்கப்படுவதற்காக, திருக்குர்ஆன் மனன வாராந்திர மீளாய்வு வகுப்பு, திருக்குர்ஆன் வினாடி-வினா, திருக்குர்ஆன் மனனப் போட்டி உள்ளிட்டவை தொடர்ந்து நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டு வருவதாக அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.
ஏற்பாட்டாளர்களுக்குப் பாராட்டு:
நடப்பு குடும்ப சங்கம நிகழ்ச்சியையொட்டி, விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்த எம்.எம்.அப்துல் காதிர் - உமர் ரப்பானீ இணையைப் பாராட்டிய அவர், போட்டிகளில் பங்கேற்ற - வென்ற உறுப்பினர்களையும் பாராட்டினார்.
நடப்பு பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் சிறந்த முறையில் செய்த ஃபஸல் இஸ்மாஈல், ஏ.எம்.உதுமான் ஆகியோரையும் வெகுவாகப் பாராட்டிய அவர், இன்று போல் என்றும் எப்போதும் மன்ற உறுப்பினர்களிடையே பிரிக்க இயலாத - வலிமையான ஒற்றுமை தொடர்ந்து நிலைக்க வேண்டும் என்ற தன் ஆவலை உருக்கமுடன் தெரிவித்து உரையை நிறைவு செய்தார்.
ஆண்டறிக்கை & வரவு - செலவு கணக்கறிக்கை:
மன்றத்தின் 2015ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை மற்றும் வரவு-செலவு கணக்கறிக்கையை மன்றச் செயலாளர் கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய் சமர்ப்பிக்க, கூட்டம் அதற்கு ஒருமனதாக ஒப்புதலளித்தது.
தொடர்ந்து பேசிய அவர், நகர்நலப் பணிகளுக்காக மன்றம் கடந்த ஆண்டில் 13 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வரை செலவிட்டுள்ளதாகக் கூறியதோடு, மன்ற அங்கத்தினரின் மனப்பூர்வமான பங்களிப்பு காரணமாகவே இதைச் சாதிக்க முடிந்ததாகக் கூறினார்.
மழலையர் பல்சுவைப் போட்டிகள்:
தொடர்ந்து, மழலையருக்கான பல்சுவைப் போட்டிகள் துவங்கின. பேச்சு, திருக்குர்ஆன் ஓதல், ஹதீத் - நபிமொழி உரைத்தல் ஆகிய போட்டிகள் - 3 முதல் 8 வயது வரையிலான மழலையருக்காக நடத்தப்பட்டது.
பரிசளிப்பு:
மன்றத்தின் ஹாஃபிழ் உறுப்பினர்களுக்காக ஏற்கனவே நடத்தப்பட்ட திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு)ப் போட்டி, திருக்குர்ஆன் வினா-விடைப் போட்டி ஆகியவற்றில் வெற்றிபெற்றோருக்கு மன்ற ஆலோசகர் பாளையம் முஹம்மத் ஹஸன் பரிசுகளை வழங்கினார்.
பவுலிங் (ஆண்கள் / பெண்கள்), பாட்மிண்டன், கைப்பந்து, கால்பந்து, பெனாலிட்டி கிக், டென்னிஸ், ஆண்களுக்கான வினாடி-வினா போட்டி ஆகியவற்றில் வென்றோருக்கு, மன்றத்தின் முன்னாள் தலைவர் எம்.அஹ்மத் ஃபுஆத், நடப்பு தலைவர் ரஷீத் ஜமான் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
விடைபெறும் துணைக்குழுவினருக்கு பாராட்டும், புதியோருக்கு வாழ்த்தும்:
தமது பொறுப்புக் காலத்தை நிறைவுசெய்யும் - நடப்பு செயற்குழுவின் துணைக்குழு உறுப்பினர்களான எஸ்.எம்.என்.அப்துல் காதிர் ஷாஹுல் ஹமீத் பாதுஷா, முஹ்யித்தீன் ஸாஹிப், செய்யித் முஹ்யித்தீன், எம்.ஆர்.ஏ.ஸூஃபீ, தவ்ஹீத் ஆகியோரின் நிறைவான ஒத்துழைப்புக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டதோடு, புதிய துணைக் குழுவினராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.எச்.உதுமான், செய்யித் லெப்பை, எம்.ஆர்.ஏ.ஸூஃபீ, வி.எஸ்.டீ.தாவூத், எம்.எம்.அப்துல் காதிர், ஜக்கரிய்யா ஆகியோரது பணி சிறக்க வாழ்த்திப் பிரார்த்திக்கப்பட்டது. இதுபோன்று, இதர உறுப்பினர்களும் நகர்நலப் பணிகளுக்காக தாமாக முன்வந்து மன்றத்தில் பொறுப்புகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
துஆ - ஸலவாத்துடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது. தொடர்ந்து, இஷா தொழுகைக்காக பாளையம் முஹம்மத் ஹஸன் அதான் ஒலிக்க, உறுப்பினர் தைக்கா ஸாஹிப் தொழுகையை வழிநடத்தினார்.
இரவுணவு:
சமையல் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்களான ஏ.எம்.உதுமான், எம்.என்.எல்.ரஃபீக் என்ற ஹிஜாஸ் மைந்தன், பாளையம் முஹம்மத் ஹஸன், ஃபஸல் இஸ்மாஈல், முஹ்யித்தீன் ஸாஹிப், செய்யித் அஹ்மத் ஆகியோரது கைவண்ணங்களில் - நெய்ச்சோறு, காயல் களறிக்கறி & கத்திரிக்காய் - மாங்காய் பதார்த்தங்கள் இரவுணவாக அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
‘சூப்பர் ஜோடி’ போட்டி:
22.30 மணியளவில், குடும்பத்துடன் சிங்கையில் வசிக்கும் மன்ற உறுப்பினர்களுக்கான “சூப்பர் ஜோடி” போட்டி நடத்தப்பட்டது. க்ரிக்கெட் ஆர்வலர்கள், தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பான - Mumbai Indians & Rising Pune Supergiants அணிகளுக்கிடையிலான IPL T20 க்ரிக்கெட் போட்டியைக் கண்டுகளித்தனர். அனைவருக்கும் இஞ்சி தேனீர் பரிமாறப்பட்டது.
சூட்டுக் கறி:
மீண்டும் 00:00 மணியளவில், மன்ற அங்கத்தினரது நாவுகளின் சுவை நரம்புகளைச் சோதிப்பதற்காக மட்டன், சிக்கன் BBQ சுட்டுப் பரிமாறப்பட்டது. உறுப்பினர்கள் அதை வெகுவாக ரசித்து அனுபவித்தனர். பின்னர் களைப்பில் அனைவரும் உறங்கச் சென்றனர்.
காலை நிகழ்வுகள்:
மறுநாள் ஃபஜ்ர் தொழுகைக்காக பாளையம் முஹம்மத் ஹஸன் அதான் ஒலிக்க, எம்.எம்.அஹ்மத் தொழுகையை வழிநடத்தினார். அனைவருககும் இஞ்சி தேனீர் - சிற்றுண்டி பரிமாறப்பட்டது. தொடர்ந்து, இளைய உறுப்பினர்கள் மீண்டும் க்ரிக்கெட் விளையாட்டில் மூழ்கினர்.
வருத்தமுடன் களைவு:
காலை உணவாக, காயல் கறிகஞ்சி அனைவருக்கும் பரிமாறப்பட்டது. அனைத்து நிகழ்ச்சிகளிலும் மன்ற உறுப்பினர்கள் தீராத ஆர்வத்தோடும், மிகுந்த உற்சாகத்தோடும் கலந்துகொண்டனர்.
சுவையான கறிகஞ்சியுடன் கடந்த 17 மணி நேரத்தில் நடந்தேறிய அனைத்து நிகழ்ச்சிகளையும் ஆர்வமுடன் அசைபோட்டவர்களாக, பிரியவே மனமின்றியும் - வேறு வழியின்றியும் 10.30 மணியளவில் வசிப்பிடம் திரும்பினர்.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே – அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கை கா.ந.மன்றத்தின் சார்பில் கடந்தாண்டு (2015) நடத்தப்பட்ட வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சிங்கை கா.ந.மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|