“காயலர் தினம் 2016” எனும் தலைப்பில், ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றம் நடத்திய பொதுக்குழுக் கூட்டம் குடும்ப சங்கம நிகழ்ச்சியில், அங்கு வசிக்கும் காயலர்கள் திரளாகப் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் டீ.எஸ்.ஏ.யஹ்யா முஹ்யித்தீன் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
காயலர் தினம் 2016:
துபை - காயல் நல மன்றம் நடத்திய 'காயலர் தினம்-2016' மிகவும் விமர்சையாகவும், சிறப்பாகவும் சத்வாவில் அமைந்துள்ள அல் ஸஃபா பூங்காவில் நடைபெற்றது.
முன்னேற்பாடுகள்:
முன்னதாக, தன்னார்வத் தொண்டர்கள் காலை 7 மணியிலிருந்தே தங்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்புகளை செய்யத் தொடங்கினர். தெய்ரா அஸ்கான் சமூகக் கூடத்திலிருந்து ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்துகளிலும், சொந்த வாகனங்களிலும் உறுப்பினர்கள் பூங்காவிற்கு வரத்தொடங்கினர். சுமார் 200 உறுப்பினர்களும், 50 தாய்மார்களும், 80 சிறுவர் சிறுமியர்களும் அடங்கிய இச்சங்கமம் வெகு சிறப்பாக இருந்தது.
இதமான வானிலை:
அமீரகத்தின் சீதோஷ்ன நிலை மிகவும் ரம்மியமாக இருந்ததால் மக்களின் மனங்கள் இன்புற்று இருந்தன.
தேனீர் & சிற்றுண்டி:
ஜும்ஆ தொழுகைக்கு முன்னர் வந்த அனைவருக்கும், சிற்றுண்டியும், தேநீரும் பரிமாறப்பட்டன. உறுப்பினர்களின் வருகையை பதிவு செய்வதற்காகவும், டோக்கன்கள் வழங்குவதற்காகவும் நியமிக்கப்பட்ட தன்னார்வ தொண்டர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மிகவும் சுறுசுறுப்பாக அவரவர்களின் வேலைகளை செய்துகொண்டிருந்தனர்.
கிராஅத் போட்டி:
முதல் அமர்வாக, இளஞ்சிறார்களின் கிராஅத் போட்டி, ஹாஜி TAS மீரா சாஹிப் தலைமையில் நடைபெற்றது. 13 போட்டியாளர்கள் இதில் பங்கு பெற்றனர். இதற்கு நடுவர்களாக ஹாஜி MS நூஹு சாஹிப், ஹாபிழ் F செய்கு சலாஹுதீன் ஆகியோர் இருந்தனர். முதல் பரிசு இருவருக்கும், இரண்டாம் பரிசு ஒருவருக்கும், மூன்றாம் பரிசு இருவருக்கும் வழங்கப்பட்டன.
மகளிருக்கான சமையல் போட்டி:
இவ்வருடம் முதல் அறிமுகப்படுத்தப்பட்ட மகளிருக்கான சமையல் போட்டி நடைபெற்றது. இல்லத்தரசிகள் அவரவர் இல்லங்களிலிருந்து தயார் செய்து கொண்டுவந்த உணவு, பலகார வகைகள் பார்வைக்கு வைக்கப்பட்டன. இப்போட்டிக்கு நடுவர்களாக, ஜனாப் SL காஜா, ஜனாப் சாளை சலீம் (Game Uncle), ஜனாப் அனீஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.
மதியம் 12:15 முதல் 01:15 மணிவரை ஜும்ஆ தொழுகைக்காக இடைவேளை விடப்பட்டது.
பொதுக்குழுக் கூட்டம்:
இரண்டாம் அமர்வு பகல் 01:40 மணிக்கு துவங்கியது. இக்கூட்டத்திற்கு JSA புஹாரி தலைமை தாங்கினார். ஹாபிழ் ஹஸ்புல்லா மக்கி கிராஅத் ஓதினார். செயலாளர் யஹ்யா முஹியத்தீன் வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து, தலைவர் உரையாற்றினார்.
இம்மன்றத்தின் செயல்பாடுகள் குறித்தும், நமது ஊருக்கு செய்யவேண்டிய சேவைகள் குறித்தும், மன்ற உறுப்பினர்களின் ஒவ்வொருவரின் பங்களிப்பின் அவசியம் குறித்தும் அவர் பேசினார்.
சிறப்பு விருந்தினர்களுக்கு கண்ணியம்:
இக்கூட்டத்தில் பங்குபெறுவதற்காகவே தாயகத்திலிருந்து வருகைத்தந்த நான்கு சிறப்பு விருந்தினர்கள் கவுரவிக்கப்பட்டனர். அவர்கள் ஒரு சில நிமிடங்கள் பேசி தத்தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அவர்களின் பெயர்கள் வருமாறு:
ஜனாப் ME ஷெய்க் (மன்றத்தின் முன்னாள் பொதுச் செயலாளர்)
ஜனாப் LKS செய்யத் அஹ்மத்
ஜனாப் நோனா மஹ்மூத்
ஜனாப் அஹ்மத் முஹியத்தீன்
ஆகியோர்.
இதில் ஜனாப் LKS செய்யத் அஹ்மத் பேசுகையில், இக்கூட்டத்தில், தான் மூன்றாவது முறை கலந்துகொண்டதாகவும், இந்நிகழ்ச்சி மிகவும் மகிழ்ச்சியை தருவதாகவும் கூறினார்.
மேலும், இம்மன்றத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான, துணி உமர் காக்கா, தாயகத்திலிருந்து அனுப்பிய வாழ்த்துச் செய்தி கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.
சகோதர காயல் நல மன்றங்களான
தமாம் காயல் நலமன்றதிலிருந்து, ஜனாப் செய்யத் முஹம்மது புஹாரி,
ஹாங்காங் காயல் நலமன்றதிலிருந்து, ஜனாப் கபீர் ரிபாய் ,
சிங்கப்பூர் காயல் நலமன்றதிலிருந்து, ஜனாப் ஸூஃபி,
கத்தார் காயல் நலமன்றதிலிருந்து, ஜனாப் கவிமகன் காதர் ஆகியோர் வருகை தந்து ஒரு சில மணித்துளிகள் தத்தமது கருத்துகளையும் பதிவு செய்து இந்நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பூட்டினர்.
அபூதபீ காயலர்கள்...
அபூதபீ காயல் நல மன்றத்தினர்களும், அவர்தம் குடும்பத்தினரும், ஐக்கிய அரபு அமீரகங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நமதூர் மக்கள் திரளாக வந்திருந்தனர்.
மதிய உணவு:
மதிய உணவு, முதலில் பெண்களுக்கும் சிறுவர் சிறுமியற்கும் பரிமாறப்பட்ட பின், ஆண்களுக்கு பரிமாறப்பட்டது. சிறு இடைவேளைக்குப்பின் மீண்டும் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.
புதிய உறுப்பினர்கள் அறிமுகம்:
புதிய உறுப்பினர்களின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. சுமார் 13 பேர் தங்களை அறிமுகப் படுத்திக்கொண்டனர். அமீரகத்திற்கு வேலை தேடி வருவர்களுக்கு இவ்வறிமுக நிகழ்ச்சி பெரிதும் உதவுகிறது. இங்குள்ள உறுப்பினர்கள் தங்களுக்கு தெரிந்த இடங்களில் உள்ள வேலைவாய்ப்பு பற்றியும் தெரிவித்தனர்.
விளையாட்டுப் போட்டிகள்:
தொடர்ந்து பெரியவர்களுக்கும், சிறுவர் சிறுமியற்கும் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகின. பொது அறிவுப் போட்டி , சாக்கு ஓட்டப்பந்தயம், உறி அடித்தல், வளிக்கூண்டு உடைக்கும் போட்டி (BALOON FIGHTING), கயிறு இழுக்கும் போட்டி ஆகியவை நடைபெற்றன. இப்போட்டிகளை, இந்த பூங்காவை நிர்வகிக்கும் அரசு அதிகாரிகள் உட்பட அனைவரும் கண்டு ரசித்தனர். பெரியவர்கள் இப்போட்டிகளில் பங்குபெற்று சற்று வித்தியாசமாகவே உணர்ந்தனர்.
அனுசரணையாளர்கள்:
இந்நிகழ்ச்சிக்கான அனுசரணைகளை கீழ்கண்ட மன்ற உறுப்பினர்கள் செய்திருந்தனர்:
தோஷிபா எளிவேட்டர்ஸ் (ஜனாப் VSM அபூபக்கர்) திர்ஹம் 1000
அரிஸ்டோ ஸ்டார் (ஜனாப் JSA புஹாரி) ஒரு தங்க நாணயம்
சகோதரி AT ஹனீதா (க /பெ) புஹாரி - ஒரு தங்க நாணயம் (பெண்களுக்கான குலுக்கல்)
முத்து தங்க மாளிகை (ஜனாப் VSA ஷேக் தாவூத்) ஒரு தங்க நாணயம்
அல் ரசஃபா பில்டிங் மெடீரியல்ஸ் (ஜனாப் பால் முஹம்மது) திர்ஹம் 500/=
ஜமீல் ஜுவல்லர்ஸ் (ஜனாப் AJ முஹம்மது அய்யூப்) ஒரு தங்க நாணயம்
ஹலி மேனேஜ்மென்ட் கன்சல்டன்ட்ஸ் (ஜனாப் சாளை சலீம்) ஒரு தங்க நாணயம்
ஜனாப் முஹம்மது ரியாஸ் - திர்ஹம் 150/=
ஜனாப் SL காஜா - 5 ஸ்கூல் பைகள்
ஜனாப் MU முஹம்மது அலி - லுமினார்க் கண்ணாடிக் குவளைகள்
இந்நிகழ்ச்சியின் அனைத்து செலவினங்களையும் மன்றத்தின் பொது நிதியிலிருந்து ஈடுசெய்யாமல், 91 உறுப்பினர்களின் பங்களிப்பைக் கொண்டே நடைபெற்றது. மட்டுமின்றி, உறுப்பினர்களின் மாத சந்தாவும் இக்கூட்டத்திலேயே கணிசமாக பெறப்பட்டது.
பரிசளிப்பு:
அசர் தொழுகைக்காக இடைவேளை விடப்பட்டு போட்டிகள் மீண்டும் துவங்கின. இறுதியாக, இக்காயலர் தின நிகழ்ச்சிக்கு முன்னரே வந்தவர்களுக்கான குழுக்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு தங்க நாணயங்களும், போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகளும், சிறப்பு விருந்தினர்களை கவுரவிக்கும் பொருட்டு நினைவுப் பரிசுகளும், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து சிறுவர் சிறுமியற்கும் (சுமார் 80 பேர்) கண்கவர் பரிசுகளும் வழங்கப்பட்டன.
மாலை தேநீர், சமுசா ஆகியவற்றிற்குப் பிறகு, தலைவர் அவர்களின் நன்றியுரையுடனும், துஆவுடனும் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
ஒத்துழைத்தோருக்கு நன்றி:
அனைத்து நிகழ்ச்சிகளும், சிறப்பாக நடைபெற அயர்வில்லாமல் உழைத்த அனைத்து செயற்குழு உறுப்பினர்களுக்கும், தன்னார்வத் தொண்டர்களுக்கும், ஊழியர்கள் மற்றும், தளவாட சாமான்கள் தந்து உதவிய ரஹ்மானி நிறுவனத்தாருக்கும், இந்நிகழ்ச்சியை மக்களுக்கு கொண்டு சென்ற காயல் வளை தள நிர்வாகிகளுக்கும், எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
நிழற்படங்களைக் காண கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்:-
https://picasaweb.google.com/106080912367452201392/KAAYALARTHINAMMARCH252015ClickedBySubhan
https://picasaweb.google.com/106080912367452201392/March2520162ClickedBySubhan
https://picasaweb.google.com/106080912367452201392/KaayalerThinamDubaiClickedByFAYAZ
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்:
சுப்ஹான் N.M.பீர் முஹம்மத் &
ஃபயாஸ்
துபை கா.ந.மன்றம் சார்பில் இதற்கு முன் நடத்தப்பட்ட “காயலர் தினம்” குடும்ப சங்கம நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
துபை கா.ந.மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|