எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு அமைப்பின் சார்பில், சூழலுக்குகந்த வீடுகள் கருத்தரங்கம் மற்றும் ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி நடைபெற்று முடிந்துள்ளது. இதில், காயல்பட்டினம் நகரின் கட்டிடக் கலையினர் பங்கேற்றுள்ளனர்.
இதுகுறித்து, அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாளை பஷீர் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
எழுத்து மேடை மையம் தமிழ் நாடு சார்பில் நமது நகரில் தொடர்ந்து பல தலைப்புகளில் ஆவணப்பட திரையிடல்களும் அதை ஒட்டிய கருத்து பரிமாற்றங்களும் நடைபெற்று வருகின்றது.
கடந்த 16/04/2016 சனிக்கிழமை காலை 10:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை எழுத்து மேடை மையம் தமிழ் நாடு சார்பில் 7 வது நிகழ்வாக நமதூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஹனியா சிற்றரங்கத்தில் ” சூழலுக்குகந்த, செலவு குறைந்த, அழகிய வீடுகள் “ என்ற தலைப்பில் ஆவணப்பட திரையிடல்களும் ஒளிப்பட காட்சிகளும் அதை தொடர்ந்து கருத்து பரிமாற்றமும் நடைபெற்றது.
“ The Life & Architecture of Laurie Baker “[காண்க : https://www.youtube.com/watch?v=r6ni3aFraXE]என்ற தலைப்பில் முதலில் திரையிடப்பட்ட ஆவணப்படம் பற்றிய விளக்கத்தை சாளை பஷீர் வழங்கினார்.
அதைத்தொடர்ந்து திரையிடப்பட்ட “ IITM GFRG demo building 2013” {காண்க: https://www.youtube.com/watch?v=UUQEUcB7cMM} என்ற ஆவணப்படத்திற்கான விளக்கத்தை சமூக ஆர்வலர் மூ.நெ. அஹ்மத் ஸாஹிப் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பார்வையாளர்களிடமிருந்து எழுந்த அய்யங்களுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற நகரின் கட்டுமான நிறுவனத்தினரும் ஒப்பந்ததாரர்களும் தங்கள் கருத்துக்களை பரிமாறியதோடு கூடுதல் தகவல்களையும் அளித்தனர்.
நிகழ்ச்சியில் நகரின் முக்கிய பிரமுகர்களும் கட்டுமானத் துறையினரும் பங்கெடுத்தனர். நன்றியுரை துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
சூழலுக்குகந்த, செலவு குறைந்த, அழகிய வீடுகள்: நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட கருத்துக்களின் சுருக்கம்:-
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எழுத்து மேடை மையம் நடத்திய “என் பெயர் பாலாறு” என்ற ஆவணப்பட திரையிடல் நிகழ்வின்போது பங்கேற்ற பார்வையாளர்கள் , “ சூழலுக்கு உகந்த, இயற்கையை சுரண்டாத எளிய அழகிய கட்டிடக்கலை முறை தொடர்பாக நமதூரின் கட்டிடத்தொழில் முனைவோருக்கு ஒரு பயிலரங்கு எற்பாடு செய்ய வேண்டும் “ என கருத்து தெரிவித்திருந்தனர்.
அதனை நடைமுறைப்படுத்தும் விதமாகவே இந்த தலைப்பில் இந்த திரையிடல் நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இங்கு நாம் காணப்போகும் இரண்டு ஆவணப்படங்கள் எடுத்துரைக்கும் கட்டுமான மாதிரிகளை அப்படியே நமதூரில் பின்பற்ற வேண்டும் என நாம் வலியுறுத்த விரும்பவில்லை.
மாற்று கட்டுமான முயற்சிகளில் நடக்கும் புதிய முன்னெடுப்புகளை உள்வாங்குவதின் வழியாக நமதூருக்கான தனிப்பட்ட தேவைகளை உள்ளடக்கிய சூழலுக்குகந்த, செலவு குறைந்த, அழகிய வீடுகள் எழுப்ப்ப்பட வேண்டும் என்பதே இந்த நிகழ்வின் நோக்கம்.
லாரி பேக்கர் கட்டிடக்கலை
லாரி பேக்கர் என்றழைக்கப்படும் லாரன்ஸ் வில்ஃப்ரட் பேக்கர் (1917—2007) பிரிட்டனைச்சார்ந்த கட்டிடக்கலைஞரும் சமூகப்பணியாளருமாவார். நமதூரில் கட்டுமான தொழில் மிக வேகமாக வளர்ந்து வருகின்றது . ஒரு சமூகப்பணிக்களத்திற்காக சீனம் செல்லும் வழியில் இந்தியாவில் அவர் சிலகாலம் தங்கியிருந்தார். அப்போது காந்தியடிகளை சந்திக்கின்றார்.
“நீ அறிவையும் தகுதியையும் கொண்டு வருகின்றாய். இங்கு எங்களது தேவைகளை நீ அறிந்து கொள். சராசரி மக்களுக்கான உயர்வான விஷயம் கிராமங்களில்தான் இருக்கின்றதே தவிர பம்பாய் போன்ற பெரு நகரங்களில் இல்லை.“
இந்த மூன்று வரி அறிவுரைதான் லாரி பேக்கர் என்ற அந்த பிரிட்டானிய கட்டிட கலைஞனுக்கு காந்தி கை மாற்றிய சொற்கள். 1945 ஆம் ஆண்டில் இந்த சந்திப்பு நடந்தது.
அன்றிலிருந்து 2007 ஆம் ஆண்டு லாரி பேக்கர் தான் இறக்கும் வரை சமூகத்தின் அனைத்து மனிதர்களுக்குமான தனது எளிய அழகிய கட்டிடப்பாணியை கடைப்பிடித்து ஏராளமான வீடுகளையும் அலுவலகங்களையும் தனியாட்களுக்கும் , பொது நல நிறுவனங்களுக்கும் , அரசுத்துறையினருக்கும் மிக மலிவான செலவில்; கட்டிக்கொடுத்திருக்கின்றார். அன்றிருந்த கேரள அரசும் பொது மக்களும் அவரது முயற்சிகளுக்கு முழுமையாக துணை நின்றது. அவரை எதிர்த்தவர்கள் கொள்ளை ஆதாயம் பார்க்கும் கட்டுமானத் துறை ஒப்பந்த்தாரர்கள்தான்.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த லாரி பேக்கர் பாணி கட்டிடங்களை இரண்டு வருடங்களுக்கு முன்னர் நமதூரிலிருந்து சென்ற குழுவினர் பார்வையிட்டனர்.
சிமிண்ட் பூச்சும் , வண்ணமடிப்பும் (பெயிண்டிங்) தேவைப்படாத அழகிய சிவந்த செங்கற்களைக் கொண்ட கட்டிடங்கள் நாற்பத்தைந்து வருடங்களை கடந்த பிறகும் அதே அழகுடனும் நிமிர்வுடனும் நிற்கின்றன.
அவற்றில் இரும்பு, மரத்திற்கான தேவை மிகக் குறைவு. மறு சுழற்சி முறையில் கண்ணாடி, இரும்பு பொருட்களைக் கொண்டு கட்டப்பட்ட அந்த கட்டிடங்கள் வெற்றிலை போட்டு சிவந்த உதடுகளைப் போல அழகாக காட்சியளிக்கின்றன. ஆனால் ஏராளாமான பணம் செலவழித்து கட்டப்படும் நமதூரின் வீடுகல் 20 , 25 வருடங்களைக்கூட தாண்டுவதில்லை.
லாரி பேக்கரின் கட்டிட இலக்கணங்கள் மிக எளிமையானவை:
## பணத்திற்கும் அழகிற்கும் தொடர்பு இல்லை.
## சிறியதே அழகானது
## கோடிக்கணக்கான மக்கள் உண்ண உணவின்றி வாடும் வாழ்க்கை காட்சிகள் என்னை அனைத்து விதமான ஆடம்பரங்களையும் கைவிட வைத்தன.
## தேவையின்றி எதையும் செய்யாதீர்கள்.
`````````````````````````````````````````````````````````````````````````````````````````````
ஆயத்த பாணி ஜிப்சம் கட்டுமானங்கள்
விவசாய உரம் , காயங்களுக்கான மாவுக்கட்டு , சிற்பம் சமைத்தல் போன்றவற்றில் பயன்படும் ஜிப்சம் என்ற வேதியியல் மூலப்பொருளோடு கண்ணாடி இழை சேர்த்து வலுவூட்டப்பட்ட Glass Fiber Reinforced Gypsum (GFRG ) ஐப்பயன்படுத்தி செய்யப்பட்ட 12 X 3 மீற்றர் அளவும் 124மி.மீ கனமும் உடைய பலகங்கள் {PANEL} ஐ கொண்டு இந்திய தொழில்நுட்ப பயிலகம் , சென்னை ( IIT , MADRAS ) தனது வளாகத்தினுள் இரண்டு மாடி கட்டிடம் ஒன்றை கட்டி முடித்துள்ளது. சில மாதங்களுக்கு முன் அதை நமதூரிலிருந்து சென்ற குழு நேரில் பார்வையிட்டு வந்தது.
இந்த GFRG பலகங்கள் கொச்சி, கோயம்புத்தூர் சந்தைகளில் விற்பனைக்கு கிடைக்கின்றது. இவற்றை மள மளவென்று பொருத்தி விடலாம். கட்டுமான காலமும் ஆள் கூலியும் குறைவு. அத்துடன் நடைமுறையில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு ஆகும் செலவில் மூன்றில் ஒரு பங்கு செலவுதான் இதற்கு ஆகும்.
இதில் உள்ள சில நடைமுறை சிக்கல்கள் என்னவென்றால் இந்த பலகங்களை தூக்கி பொருத்த பெரும் பளு தூக்கி இயந்திரங்கள் தேவைப்படும். அத்துடன் இந்த ஜிப்சம் சுவர்களில் ஆணி அடிக்க இயலாது. கீழ்த்தளத்தை எப்படி அமைக்கிறோமோ அதே வடிவில் மட்டுமே மேல் தளங்களையும் அமைக்க இயலும்.
```````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````
நமதூரின் நிலை
நமதூரின் வீடு கட்டுமானங்களில் ஆற்று மணலுக்கு மாற்றாக M SAND என்றழைக்கப்படும் சலித்த அல்லது தூள் செம்மண் , கருங்கற் ஜல்லி தூள் (QUARRY DUST) போன்றவற்றை பயன்படுத்தலாம். அரசினர் தனது கட்டிடங்கள் அனைத்திலும் இந்த வகை மணலைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். இவற்றின் உறுதித்தன்மையும் நீடித்த தன்மையும் சோதித்து அறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நமதூரில் இந்த மாற்று மணல்களை பயன்படுத்துவதில் உள்ள ஒரே சிக்கல் மக்களின் மனதில் உள்ள தடைதான். மலிவாக கிடைப்பதை தரங்குறைந்தது என்றும் விலை கூடுதலாக இருந்தால்தான் அது தரம் வாய்ந்தது என்ற தவறான சித்திரம் மக்களின் பொதுபுத்தியில் படிந்துள்ளது. இது மாற வேண்டும்.
```````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````
தொடர்பு விவரங்கள்
எளிய சூழலுக்குகந்த அழகிய நீடித்த கட்டுமானக்கலை தொடர்பான கூடுதல் விபரங்களுக்கும் பயிற்சிகளுக்கும்:-
1. http://www.costford.com/
2. http://www.habitattechnologygroup.org/
3. IIT MADRAS – PROF.SHINDE PAUL – Mobile: 9884714114
4. http://inspire-india.com/index.html
5. http://www.earth-auroville.com/index.php
```````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து மேடை மையத்தின் முந்தைய திரையிடல் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
எழுத்து மேடை மையம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |