திரளான பொதுமக்கள் பங்கேற்புடன் - ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் மார்க்க விழாக்கள், மார்க்கக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் மாணவர் பேரணி, தஃப்ஸ் நிகழ்ச்சிகளுடன் நடந்தேறியுள்ளது. 15 மாணவர்கள் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது (பட்டம்) பெற்றுள்ளனர். விரிவான விபரம் வருமாறு:-
மார்க்க விழாக்கள்:
பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களுக்கு மார்க்க அடிப்படைக் கல்வியைப் பயிற்றுவிக்கவும், இளம் மாணவர்களுக்கு திருமறை குர்ஆனை மனனம் செய்விக்கவும், காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் கட்டிடத்தில் இயங்கி வருகிறது ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம்.
இந்நிறுவனத்தின் சார்பில் ஆண்டுதோறும் மார்க்க விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு விழாக்கள், கடந்த மே மாதம் 28, 29, 30 ஆகிய நாட்களில் (சனி, ஞாயிறு, திங்கள்) நடைபெற்று முடிந்துள்ளன. மே 26ஆம் நாள் வியாழக்கிழமையன்று முன்னோடிப் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டன.
முதற்கட்ட நகர்வலம்:
மார்க்க ஒழுக்கவியல் கல்வியின் அவசியம் - அதன் மகத்துவம் குறித்தும், திருமறை குர்ஆனை மனனம் செய்வதன் மகத்துவம் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டவும், 3 நாட்கள் நடைபெறும் விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைப்பு விடுத்தும் நகரின் முக்கிய வீதிகளில் வெள்ளைச் சீருடையணிந்த மாணவகளின் பேரணி நடத்தப்படுவது வழமை.
அந்த அடிப்படையில், 27.05.2016. வெள்ளிக்கிழமையன்று மாணவர் முதற்கட்ட நகர்வலத்துடன் விழா நிகழ்ச்சிகள் துவங்கின. நஹ்வீ எம்.இ.அஹ்மத் முஹ்யித்தீன் முதற்கட்ட நகர்வலத்தை பச்சைக் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
முத்துவாப்பா தைக்கா தெரு, ஸீ-கஸ்டம்ஸ் சாலை, மேல சித்தன் தெரு, கீழ நெய்னார் தெரு, மேல நெய்னார் தெரு, சதுக்கைத் தெரு, குத்துக்கல் தெரு, புதுக்கடைத் தெரு, காட்டு தைக்கா தெரு, தைக்கா தெரு, மகுதூம் தெரு, முஹ்யித்தீன் தெரு, பிரதான வீதி, கி.மு.கச்சேரி தெரு, அம்பல மரைக்கார் தெரு, ஆஸாத் தெரு, கீழ சித்தன் தெரு, தீவுத்தெரு ஆகிய வழித்தடங்களில் மாணவர் முதற்கட்ட நகர்வலம், 17.30 மணிக்குத் துவங்கி, 21.00 மணி வரை நடைபெற்றது.
நகர்வலம் சென்ற வழியில், நெய்னார் தெருவிலும், தீவுத்தெரு ஜமீல் ஹாஜி திடலிலும் அப்பகுதிகளைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்திற்குத் தேவையான பொருட்களும், நிதியும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
முதற்கட்ட நகர்வலத்தின்போது, மஃரிப் தொழுகையை சிறிய குத்பா பள்ளியிலும், இஷா தொழுகையை காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியிலும் மாணவர்கள் ஜமாஅத்துடன் நிறைவேற்றினர். அவர்களது வருகையையொட்டி, அப்பள்ளிவாசல்களில் மாணவர்கள் வசதிக்காக சிறப்பேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதல் நாள் நிகழ்ச்சிகள்:
28.05.2016. சனிக்கிழமை காலையில் மத்ரஸா உள் வளாகத்திலும், மாலை, இரவு வேளைகளில் வெளி மேடையிலும் சன்மார்க்கப் போட்டிகள் நடைபெற்றன.
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள்:
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள், 29.05.2016. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 06.00 மணியளவில் மாணவர் இரண்டாம் கட்ட நகர்வலத்துடன் துவங்கியது. கானாப்பா எஸ்.ஏ.முஹம்மத் ஸாலிஹ் பச்சைக் கொடியசைத்து பேரணியைத் துவக்கி வைத்தார்.
பெரிய முத்துவாப்பா தைக்கா தெரு, ஸீ-கஸ்டம்ஸ் சாலை, பிரதான வீதி, பெரிய நெசவுத் தெரு, கே.டீ.எம்.தெரு, அலியார் தெரு, பரிமார் தெரு, அப்பாபள்ளித் தெரு, மரைக்கார் பள்ளித் தெரு, கொச்சியார் தெரு, சொளுக்கார் தெரு ஆகிய வழிடத்தடங்கள் வழியே இந்நகர்வலம் சென்று, ஹாமிதிய்யாவை வந்தடைந்தது.
இதன்போது, பெரிய நெசவுத் தெரு, பரிமார் தெரு, அப்பா பள்ளித் தெரு முத்துச்சுடர் ஆலிம் திடல், சொளுக்கார் தெரு நஹ்வி அப்பா திடல் ஆகிய பகுதிகளில் முன்னாள் மாணவர்கள் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டு, நிறுவனத்திற்குத் தேவையான பொருட்களும், நிதியும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
இரண்டு கட்ட நகர்வலங்களின்போதும் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிகளில் வழங்கப்பட்ட இவற்றை, அந்தந்த பகுதி பிரமுகர்கள் வழங்க, மத்ரஸா முதல்வர் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ பெற்றுக்கொண்டார்.
காலை 09.30 மணியளவில் நகர்வலம் நிறைவுற்றது. இரு நாட்களில் நடைபெற்ற நகர்வல நிகழ்ச்சிகளின்போது, சாலைகளிலும், அவரவர் வீட்டின் முன்புறங்களிலும் நன்றாக சுத்தம் செய்து, தண்ணீர் தெளித்து வரவேற்பளிக்கப்பட்டது. ஆங்காங்கே அலங்கரிக்கப்பட்ட மழலைக் குழந்தைகளை நாற்காலிகளில் அமர வைத்தும் வரவேற்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
காலை 11 மணியளவில் மத்ரஸா உள் வளாகத்தில் சன்மார்க்கப் போட்டிகள் நடைபெற்றன.
தஃப்ஸ் நிகழ்ச்சி:
மாலையில் மத்ரஸா மைதானத்தில் பல வண்ண அலங்காரங்களுடன் தஃப்ஸ் நிகழ்ச்சியும், மாணவர் அணிவகுப்பும் நடைபெற்றன. எம்.அஹ்மத் ஃபுஆத் தலைமை தாங்கி, மத்ரஸாவின் கொடியேற்ற, அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், ஆத்தூர் காவல்துறை உதவி ஆய்வாளர் கோபால், நாகர்கோயில் டாக்டர் ஜெயசேகரன் மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் தேவ ப்ரசாத் ஜெயசேகரன், நாகர்கோவில் அக்குபஞ்சர் மருத்துவ நிபுணர் டாக்டர் ஜாஃபர் ஸாதிக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, மாணவர் அணித்தலைவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.
தஃப்ஸ் பிரிவு மாணவர்கள் - அரபி, தமிழ் பாடல்கள் பாடப்பட, பல வண்ணங்களில் ரிப்பன்களையும் - குடைகளையும் கைகளில் பிடித்தவாறு அப்பாடல்களுக்கேற்ப உடற்பயிற்சி செய்ததும், தஃப்ஸ் முழங்கியதும் பார்வையாளர்களின் கண்களுக்கு பெரிதும் விருந்து படைத்தன.
தலைமையுரையைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்கள் மாணவர் அணிவகுப்பை வியந்து பாராட்டிப் பேசினர்.
அன்றிரவு அமர்வு வெளிமேடையில் நடைபெற்றது. அதில், பல்சுவை சன்மார்க்கப் போட்டிகள் இடம்பெற்றன. அதன் தொடர்ச்சியாக, இந்த மத்ரஸாவின் பெயர் காரணரான மஹான் ஹாமித் லெப்பை வலிய்யுல்லாஹ் நினைவு நிகழ்ச்சி நடைபெற்றது. ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம், முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரி ஆகியவற்றின் ஆசிரியர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ - மஹான் அவர்களின் வாழ்க்கைச் சரித உரையாற்றினார். அதன் பின்னரும், மாணவர் சன்மார்க்கப் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றன.
பட்டமளிப்பு விழா:
மூன்றாம் நாளான 30.05.2016. திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில், ஹாமிதிய்யா குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவில் பயின்று, திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்த 15 மாணவர்களுக்கு ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது (பட்டச் சான்றிதழ்) வழங்கும் பட்டமளிப்பு விழா, காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் ஆகியவற்றின் தலைவர் நஹ்வீ இ.எஸ்.புகாரீ ஆலிம் தலைமையில், மத்ரஸா உள் வளாகத்தில் நடைபெற்றது.
நகரப் பிரமுகர்கள் முன்னிலை வகிக்க, ஹாஃபிழ் என்.டீ.ஸதக்கத்துல்லாஹ் ஜுமானீ, ஹாஃபிழ் டபிள்யு.இசட்.முஹம்மத் ஸாலிஹ் ஆகியோர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினர். ஹாஃபிழ் சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ வரவேற்புரையாற்றினார். ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, அதன் திருக்குர்ஆன் மனனப் பிரிவு ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ பாக்கவீ ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
ஹாமிதிய்யா திருக்குர்ஆன் மனனப் பிரிவு முதன்மை ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.அபூபக்கர் ஸித்தீக் மிஸ்பாஹீ - மாணவர்களுக்கு ஸனது - பட்டச் சான்றிதழ்களை வழங்கி, உரையாற்றினார்.
‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டம் பெற்ற மாணவர்கள்:
‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டம் பெற்ற 15 மாணவர்கள் விபரம் வருமாறு:-
[குழுப்படங்களைப் பெரிதாகக் காண அவற்றின் மீது சொடுக்குக!]
மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ ஸனது விளக்கவுரையாற்ற, மத்ரஸா முதல்வர் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ மத்ரஸா பற்றிய விளக்கவுரையாற்றினார்.
பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளியின் இமாம் ஹாஃபிழ் எஸ்.எச்.ஷெய்கு அலீ மவ்லானா - இக்கல்வியாண்டில் திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு)ப் பிரிவில் புதிதாக இணைந்துள்ள மாணவர்களுக்கு, துவக்கப் பாடத்தை ஓதிக்கொடுத்து, அவர்களின் பாட வகுப்பைத் துவக்கி வைத்தார்.
இவ்விழாவில், தூத்துக்குடி மன்பஉஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் ஏ.முஹம்மத் முஸ்தஃபா மஸ்லஹீ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, வாழ்த்துரையாற்றினார்.
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ நன்றி கூற, ‘முத்துச்சுடர்’ மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டீ.செய்யித் முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ துஆவுடன் விழா நிகழ்ச்சிகள், 14.00 மணியளவில் நிறைவுற்றன.
பல்சுவை நிகழ்ச்சிகள்:
அன்று மாலையிலும், இரவிலும் மத்ரஸா வெளிமேடையில் மாணவர் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாடல்கள், அரபி - ஆங்கிலம் - தமிழ் உரையாடல்கள், பல்வேறு தலைப்புகளிலான கலந்துரையாடல்கள் என அனைத்தும் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவன மாணவர்களது பங்கேற்பில் நடைபெற்றன.
பரிசளிப்பு:
பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினர், மத்ரஸா ஹாமிதிய்யாவின் அனைத்து மாணவர்களையும் வாழ்த்தியும், மார்க்கக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தியும் சிறப்புரையாற்றினார்.
வாழ்த்துரையைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில், மத்ரஸா சார்பில் நடத்தப்பட்ட போட்டிகள், தேர்வுகள், ஹிஃப்ழு மத்ரஸா தேர்வுகளில் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பரிசளிப்பு விழா நிறைவுற்றதும், முன்னாள் மாணவர்கள் பங்கேற்ற பைத் போட்டி நள்ளிரவில் நடத்தப்பட்டு, வென்றோருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. முன்னாள் மாணவர்கள் & பைத் போட்டி பங்கேற்பாளர்கள் சார்பில், போட்டி நடுவர்களுக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
மத்ரஸாவில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கப்பரிசுகளும் வழங்கப்பட்டன. பரிசுகள் அனைத்தையும், நகரப் பிரமுகர்கள் தம் கைகளால் வழங்கினர். ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவன ஆசிரியர் கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் நன்றி கூற, துஆவைத் தொடர்ந்து ஸலவாத்துடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
பட்டம் பெற்ற மாணவர்களுக்கு வழியனுப்பு:
மறுநாள் 31.05.2016. செவ்வாய்க்கிழமையன்று மாலையில், ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது பெற்ற மாணவர்களை மத்ரஸா வெளிமேடையிலிருந்து நகர்வலமாக அவர்களது இல்லங்களுக்கு - தஃப்ஸ் முழங்க, பைத் பாடி அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
21.00 மணியவில், பைத் நிகழ்ச்சி நிறைவுற, அதன் தொடர்ச்சியாக, பட்டம் பெற்ற மாணவர்களுக்கு தனியார் நிறுவனங்கள் - தனியார்வலர்களின் அனுசரணையில், பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
சிங்கை காயல் நல மன்றத்தின் ஊக்கப் பரிசு:
நிறைவில், காயல்பட்டினம் மத்ரஸாக்களில் மாணவர் சேர்க்கையை ஊக்கப்படுத்தும் வகையில் சிங்கப்பூர் காயல் நல மன்றத்தால் வடிவமைக்கப்பட்ட ‘ஹாஃபிழ் மாணவர்கள் ஊக்கத்தொகை வழங்கும் திட்ட’த்தின் கீழ், 15 மாணவர்களுக்கும் தலா ரூபாய் 2 ஆயிரத்து 500 தொகை வழங்கப்பட்டது. அம்மன்றத்தின் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான் ஊக்கத்தொகையை மாணவர்களிடம் வழங்கினார்.
[குழுப்படங்களைப் பெரிதாகக் காண அவற்றின் மீது சொடுக்குக!]
அனைத்து நிகழ்ச்சிகளிலும், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். மகளிருக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தையும், எம்.ஐ.தமீமுல் அன்ஸாரீ, கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத், கூபா என்.டீ.ஷெய்கு மொகுதூம், எஸ்.ஏ.ஸிராஜ் நஸ்ருல்லாஹ், எம்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன், நஹ்வீ எம்.எம்.முத்துவாப்பா, எஸ்.எம்.எஸ்.நூஹுத்தம்பி ஜுமானீ, ஏ.எம்.நூர் முஹம்மத் ஜக்கரிய்யா, முஹ்யித்தீன் தம்பி உள்ளிட்டோரின் ஒருங்கிணைப்பில் மத்ரஸா நிர்வாகிகள், ஆசிரியர்கள், முன்னாள் - இந்நாள் மாணவர்கள் செய்திருந்தனர்.
படங்களுள் உதவி:
ஃபாஸில் ஸ்டூடியோ
சிங்கை கா.ந.மன்ற படங்கள்:
K.M.T.சுலைமான்
(பிரதிநிதி - சிங்கை கா.ந.மன்றம்)
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் சார்பில் கடந்தாண்டு (2015) நடத்தப்பட்ட மார்க்க விழாக்கள் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சிங்கை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |