ஐக்கிய விளையாட்டு சங்கத்தால் நடத்தப்பட்ட UFL கால்பந்து இறுதிப் போட்டியில் ஹார்டி பாய்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
United Football League - UFL:
காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தால், United Football League (UFL) எனும் தலைப்பில், ஆண்டுதோறும் கால்பந்து சுற்றுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு (4ஆம் ஆண்டு) போட்டிகள், 18.05.2016. அன்று துவங்கி, 29.05.2016. அன்று இறுதிப்போட்டியுடன் நிறைவுற்றது.
10 அணிகள் பங்கேற்ற இச்சுற்றுப்போட்டி, தலா 5 அணிகளைக் கொண்டு 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, களமிறக்கப்பட்டது. லீக் போட்டிகள் மே 17 முதல் 25 வரை நடைபெற்றன. அதன் நிறைவில், காயல் மான்செஸ்டர் அணியும், ஹார்டி பாய்ஸ் அணியும் நேரடியாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.
காலிறுதிப் போட்டி முடிவுகள்:
26.05.2016. அன்று மாலையில் நடைபெற்ற முதலாவது காலிறுதிப் போட்டியில், ஸ்பீட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி, சமனுடைப்பு முறையில் 3-0 என்ற கோல் கணக்கில், உட்லண்ட்ஸ் அணியை வென்றது.
அடுத்து நடைபெற்ற இரண்டாவது காலிறுதிப் போட்டியில், சில்வர் மைனர்ஸ் அணி, கே.பீ.ஹார்ட் ராக்கர்ஸ் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
அரையிறுதிப் போட்டி முடிவுகள்:
இவ்விரு போட்டிகளின் மூலம், சில்வர் மைனர்ஸ், ஸ்பீட் ஸ்ட்ரைக்கர்ஸ் ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.
27.05.2016. அன்று மாலையில் நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில், காயல் மான்செஸ்டர் அணி, 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பீட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியையும்,
28.05.2016. அன்று மாலையில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், ஹார்டி பாய்ஸ் அணி, 1-0 என்ற கோல் கணக்கில் சில்வர் மைனர்ஸ் அணியையும் வென்று, இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றன.
இறுதிப் போட்டி:
29.05.2016. அன்று மாலையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், ஹார்டி பாய்ஸ் அணியும், காயல் மான்செஸ்டர் அணியும் மோதின. இதில், 2-0 என்ற கோல் கணக்கில் ஹார்டி பாய்ஸ் அணி வெற்றிபெற்றது. அவ்வணியின் காழி அலாவுத்தின், ஃபாரூக் ஆகிய வீரர்கள் தலா ஒரு கோல் அடித்தனர்.
சிறப்பு விருந்தினர்:
இப்போட்டியில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் பணி நிறைவு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் ஜெபராஜ் ராஜநாயகம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவருக்கு சால்வை அணிவிதது கண்ணியப்படுத்தப்பட்டதோடு, ஆட்ட இடைவேளையின்போது ஈரணி வீரர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
நடுவர்கள்:
போட்டிகள் அனைத்திலும், எல்.கே.மேனிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்களான ஜமால், இஸ்மாஈல், தூத்துக்குடியைச் சேர்ந்த செல்வ குமார், காயல்பட்டினம் இல்யாஸ் ஆகியோர் நடுவர்களாகப் பணியாற்றினர்.
பரிசளிப்பு விழா:
இறுதிப் போட்டியைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், வெற்றி பெற்ற அணிக்கு 15 ஆயிரம் ரூபாயும், இரண்டாமிடம் பெற்ற அணிக்கு 10 ஆயிரம் ரூபாயும், அரையிறுதி வரை முன்னேறிய இரு அணிகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபாயும் பணப்பரிசு வழங்கப்பட்டது.
சிறப்பு விருதுகள்:
>>> இந்திய அளவில் நடைபெற்ற சந்தோஷ் கோப்பை கால்பந்துப் போட்டியில் தமிழக அணிக்குத் தலைமையேற்று வழிநடத்தியமைக்காக வீரர் காழி அலாவுத்தீனுக்கு விருது...
>>> விளையாட்டு மூலம் அரசுப் பணியைப் பெற்ற காயல்பட்டினத்தின் முதல் வீரர் என்ற தகுதியைப் பெற்றமைக்காக, கரீம் ஷமீம் என்ற வீரருக்கு, ஹார்டி பாய்ஸ் அணியின் சார்பில் நினைவுப் பரிசு...
>>> நேர்த்தியான - சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியமைக்காக, ஜி-கூல் அணி தேர்வு செய்யப்பட்டு, அதன் உரிமையாளர் கஃப்பாருக்கு, UFL போட்டிக் குழுவின் சார்பில் விருது...
>>> காயல் மான்செஸ்டர் அணியின் முஹம்மத் அலீ என்ற வீரருக்கு, சிறந்த விளையாட்டு வீரருக்கான - மர்ஹபாவின் பூட்ஸ் பரிசு...
ஆகியன வழங்கப்பட்டன.
அறிவிக்கப்பட்ட பரிசுகள்:
>>> 18 வயதுக்குட்பட்ட வீரர்களுள் வளரும் வீரருக்கான விருது காலரி பேர்ட்ஸ் அணியின் ஃபஹீமுக்கு... அதே தகுதிக்காக, காயல் மான்செஸ்டர் அணியின் அப்பாஸ் என்ற வீரருக்கு ஸ்பானிஷ் சாக்கர்ஸ் அணியின் அனுசரணையில் விருது...
>>> சிறந்த கோல் கீப்பருக்கான - UFLஇன் விருது, சில்வர் மைனர்ஸ் அணியின் மகுதூம் நெய்னாவுக்கு...
>>> சிறந்த முன்கள வீரருக்கான பாலப்பா அப்துல் காதிரின் விருது, சுலைமான் என்ற வீரருக்கு...
>>> இறுதிப் போட்டியில் முதல் கோல் அடித்த காலி அலாவுத்தீனுக்கு, பிஸ்மி கிஃப்ட் தமீம் அனுசரணையில் ஆயிரம் ரூபாய் பணப்பரிசு...
>>> இறுதிப் போட்டியில் வெல்லப் போகும் அணியை முற்கூட்டியே கணித்துக் கூறுமாறு பார்வையாளர்களிடையே நடத்தப்பட்ட போட்டியில், சரியான விடையளித்த 5 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவருக்கும் - கால்பந்து வீரர் ஃபாஸீ மூலமாக முகலாயர் மசாலா நிறுவனத்தின் சார்பில் 150 ரூபாய் மதிப்புள்ள பரிசுப்பொதி...
ஆகிய பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக, ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் முன்னாள் கால்பந்து வீரர் மோகன், அப்துல் காதிர் நெய்னா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நன்றியறிவிப்பு:
நடப்பாண்டு UFL போட்டியை ஒருங்கிணைத்து நடத்தியமைக்காக, முஹம்மத் ஃபாஸீ, அப்துல் காதிர் ஸலாஹுத்தீன், ஸதக்கத்துல்லாஹ், காதிர், கரீம், பஸ்ஸாம் உள்ளிட்ட பொறுப்பாளர்களுக்கும், சுற்றுப்போட்டிகளில் பங்கேற்ற அணிகளின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள், அனுசரணையாளர்கள், செய்தியை வெளியிட்ட ஊடகங்களுக்கும் இதன்போது நன்றி தெரிவிக்கப்பட்டது.
தகவல் & படங்கள்:
ஹாஃபிழ் ஸல்மான் ஃபாரிஸ் (Salfaz)
UFL கால்பந்துப் போட்டி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஐக்கிய விளையாட்டு சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|