காயல்பட்டினம் தீவுத்தெருவில் இயங்கி வந்த ஃபாத்திமா மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி, அரசு அனுமதி பெறாமல் இயங்கி வருவதாகக் கூறி, 26.05.2016. அன்று அரசால் முத்திரை (சீல்) வைக்கப்பட்டுள்ளது. இப்பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க வேண்டாம் என - பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களின் பெற்றோருக்கும், தூத்துக்குடி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கடிதம் அனுப்பியிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, அங்கு பயிலும் மாணவ-மாணவியரின் பெற்றோர் இணைந்து, பள்ளி நிர்வாகிகளுடன் - மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரை தூத்துக்குடியில் சந்தித்து, பள்ளியைத் திறந்து, தம் மக்களின் படிப்பிற்கு வழிவகை செய்யுமாறு வேண்டுகோள் வைத்திருந்தனர்.
ஃபாத்திமா நர்ஸரி மற்றும் மழலையர் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியரின் மொத்த எண்ணிக்கையை நேரில் கணக்கெடுப்பதற்காக, மாவட்ட தொடக்கக் கல்வி முதன்மை அலுவலர் உத்தரவின் பேரில், கல்வித் துறையிலிருந்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் விமலா, தொடக்கக் கல்வி உதவி அலுவலர்களான தாசன் பொன்ராஜ், டக்ளஸ், வருவாய்த் துறையிலிருந்து திருச்செந்தூர் வட்டாட்சியர் செந்தூர் ராஜன், மண்டல துணை வட்டாட்சியர் ரகு, வருவாய் ஆய்வாளர் பாக்கிய லட்சுமி, காயல்பட்டினம் தென்பாகம் கிராம நிர்வாக அலுவலர் ஃப்ரான்சிஸ் பாரதி, காவல் துறையிலிருந்து ஆறுமுகநேரி காவல் ஆய்வாளர் (பொறுப்பு), ஆறுமுகநேரி காவல் உதவி ஆய்வாளர் ஆதிலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் பள்ளி வளாகத்திற்கு இன்று காலை 10.00 மணியளவில் வருகை தந்தனர். பெற்றோரும், தம் மக்களை பள்ளிச் சீருடையுடன் அழைத்து வந்து, தீவுத்தெரு மேல் முனையில் திரண்டிருந்தனர்.
பள்ளியில் இதுவரை பெயர் பதிவு செய்த மாணவ-மாணவியரின் வருகைப் பதிவேட்டைப் பார்த்த அவர்கள், 259 மாணவ-மாணவியர் ஃபாத்திமா நர்ஸரி மற்றும் மழலையர் பள்ளியில் பயில்வதாகவும், இத்தகவலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் தெரிவிக்கப்போவதாகவும் கூறினர்.
அவர்களை முற்றுகையிட்ட பள்ளி மாணவ-மாணவியரின் பெற்றோர், அனைத்துப் பள்ளிக்கூடங்களும் திறந்துவிட்ட நிலையில், இப்பள்ளி மட்டும் இதுவரை திறக்கப்படாததால் பல நாட்களாக தம் பிள்ளைகளின் படிப்பு பாதித்துள்ளதாகக் கவலை தெரிவித்தனர்.
இதைக் கேட்ட அதிகாரிகள்,
>>> வேறு பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க முடிவெடுத்தால், எந்தப் பள்ளியிலும் சேர்க்கை அனுமதி பெற்றுத் தரலாம்...
>>> வேறு பள்ளிகளின் சீருடைகளைத் தைக்க வழியில்லாதோருக்கு, அவர்களின் நடப்பு சீருடையுடனேயே புதிய பள்ளியிலும் ஓராண்டுக்கு படிக்க அனுமதி பெற்றுத் தரலாம்...
என்று அவர்களிடம் கூறினர். இதைக் கேட்ட பெற்றோர் பலர், தாங்கள் ஏற்கனவே இப்பள்ளியில் கல்விக் கட்டணம் செலுத்திவிட்டதாகக் கூறியபோது, அதையும் பெற்றுத் தர ஆவன செய்வதாகக் கூறினர்.
பெற்றோர்களுள் ஒரு சாரார், இப்பள்ளியிலேயே தம் மக்களைத் தொடர்ந்து படிக்க வைக்கப் போவதாகவும், பள்ளியைத் திறக்க ஆவன செய்யுமாறும் கேட்டதற்கு, தற்போதைய இடத்தில் பள்ளி இயங்க அரசு அங்கீகாரம் அளிக்கவில்லை என்றும், வேறு ஏதேனும் வாடகைக் கட்டிடங்களில் இயக்க முடிவெடுத்தால், தற்காலிகமாக அனுமதி பெற்றுத் தருவதாகவும் கூறினர். இக்கருத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
சிறிது நேரம் அவ்விடத்திலிருந்த அதிகாரிகள், பின்னர் தேவையான ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு, திரும்பிச் சென்றனர். இதுகுறித்து காயல்பட்டணம்.காம் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஃபாத்திமா மழலையர் மற்றும் நர்ஸரி பள்ளியில் 259 மாணவ-மாணவியர் பயில்வதாக, கடந்த கல்வியாண்டு வரையிலான அவர்களின் வருகைப் பதிவேட்டைப் பார்த்து அறிந்துகொண்டோம்... இத்தகவலை - மாவட்ட தொடக்கக் கல்வி முதன்மை அலுவலரிடம் தெரிவிக்கப்போகிறோம்...
இங்கு பயிலும் மாணவ-மாணவியரை வேறு பள்ளிகளில் சேர்க்க ஏற்கனவே பெற்றோருக்கு அறிவுரைத்திருந்தோம். அதே அறிவுரையைத் தற்போதும் வலியுறுத்தியிருக்கிறோம்... எனினும் பெற்றோர் சிலர் இதே பள்ளியில்தான் தம் மக்களைப் படிக்க வைப்போம் என்று கூறுகின்றனர்...
தற்போது நாங்கள் வந்ததன் நோக்கம், தொடக்கக் கல்வி முதன்மை அலுவலரின் உத்தரவுப் படி, பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியரின் எண்ணிக்கையை அறிந்துகொள்வதற்காகத்தான்...
எங்களால் இதற்கு மேல் எதுவும் செய்ய இயலாது... பெற்றோர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஏற்கனவே மனு அளித்துள்ளனர். அவரை மீண்டும் சந்தித்து தம் கோரிக்கையை வலியுறுத்தலாம்...
ஃபாத்திமா நர்ஸரி மற்றும் மழலையர் பள்ளியை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோருக்கோ, நிர்வாகத்திற்கோ தற்போது எந்த வாக்குறுதியையும் நாங்கள் அளிக்கவில்லை...
இவ்வாறு அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
ஃபாத்திமா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|