தூத்துக்குடி மாவட்டத்தின் மூன்றாவது மிகப்பெரிய ஊர் - காயல்பட்டினம். இங்கு 45,000 மக்கள் வாழ்கின்றனர். தொழில், கல்வி, மருத்துவம் உட்பட பல்வேறு தேவைகளுக்காக - இவர்கள், திருச்சி, மதுரை, திருநெல்வேலி உட்பட பல்வேறு நகரங்களுக்குச் செல்ல அரசுப் பேருந்துகளை தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள்.
காயல்பட்டினம் வழியாக இயக்கப்படவேண்டிய பேருந்துகள் பல - கடந்த பல ஆண்டுகளாக காயல்பட்டினத்தைத் திட்டமிட்டே தவிர்த்து – ஆறுமுகநேரி/அடைக்கலபுரம் சாலை வழியாகச் செல்கின்றன. பல நேரங்களில், பெண்கள், குழந்தைகள், முதியோர் ஆகியோருடன் பயணிக்கும் மக்கள், நடுஇரவில் - ஆறுமுகநேரியில் இறக்கி விடப்பட்ட நிகழ்வுகள் பல உள்ளன.
இதுகுறித்து - பல ஆண்டுகளாக, பல்வேறு சமூக ஆர்வலர்கள், பொது நல அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் புகார்கள் கொடுத்தும், இந்த அவல நிலை தொடர்கிறது.
இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணக்கோரி, நான்கு அம்சக் கோரிக்கை - இணையம் மற்றும் உள்ளூரில் பெறப்பட்ட 1000க்கும் மேற்பட்ட கையெழுத்துக்களுடன் - இன்று மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டுள்ளது. நகரில் செயல்புரியும் “நடப்பது என்ன?” என்ற WHATSAPP குழுமம் இதை ஒருங்கிணைத்துள்ளது.
அந்த நான்கு அம்ச கோரிக்கை வருமாறு:
(1) தமிழகத்தில் உள்ள அனைத்து போக்குவரத்து மண்டலங்களுக்கும், இப்பிரச்சனை குறித்து உடனடியாக விளக்கி, காயல்பட்டினம் வழியாகச் செல்ல வேண்டிய பேருந்துகள் - அவ்வழியாகவே செல்ல உறுதி செய்யவும்.
(2) அரசு போக்குவரத்துத் துறை மூலம் - காயல்பட்டினம் வழியாகச் செல்லவேண்டிய பேருந்துகள் விபரம் அடங்கிய - புதுப்பிக்கப்பட்ட கால அட்டவணைப் பலகையை - காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் உடனடியாக நிறுவ உத்தரவிடவும்.
(3) மேற்குறிப்பிடப்பட்டுள்ள கால அட்டவணைப் பலகையை, ஆறுமுகநேரி - அடைக்கலரம் சந்திப்பு பேருந்து நிறுத்தத்திலும் நிறுவ உத்தரவிடவும்.
(4) காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் ஒரு TIME KEEPER நியமிக்க ஏற்பாடு செய்யவும்.
இந்த கோரிக்கைகளின் நகல், போக்குவரத்துறை அரசு முதன்மை செயலர் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் அனைத்து நிர்வாக இயக்குநர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
எமது கோரிக்கை துரிதமாக பரிசீலிக்கப்படாத பட்சத்தில், பொது நல வழக்கு வாயிலாக - நீதிமன்றத்தை நாடவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
மேலும் - இவ்வாறு காயல்பட்டினம் தவிர்க்கப்படுவதால், பெருத்த மன உளைச்சலுக்கும், பொருட் சேதத்திற்கும் உட்படும் பொதுமக்கள், அதற்குக் காரணமான போக்குவரத்து துறை ஓட்டுநர், நடத்துநர், அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க - அவர்களுக்குப் போதிய விழிப்புணர்வு தரவும், முடிவு செய்யப்பட்டுள்ளது.
இனி வருங்காலங்களிலும் இக்குறை தொடருமானால், பொதுமக்களைத் திரட்டி அறவழியில் போராடவும், நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
காயல்பட்டினத்தின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த 256 பேரை உறுப்பினர்களாகக் கொண்ட - “நடப்பது என்ன?” வாட்ஸ் அப் குழுமம் சார்பில், அதன் ஒருங்கிணைப்பாளர் பீ.எம்.ஏ.ஸதக்கத்துல்லாஹ் தலைமையில், அதன் அங்கத்தினரான பா.மு.ஜலாலீ, ஏ.எஸ்.புகாரீ, ‘தமிழன்’ முத்து இஸ்மாஈல், கோனா அஜ்வாத், எம்.எல்.ஹாரூன் ரஷீத், எம்.எம்.முஜாஹித் அலீ, ஹபீப் முஹம்மத் ரியாஸ், காழி அலாவுத்தீன், எஸ்.கே.ஸாலிஹ் உள்ளிட்டோர் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் மனுவை அளித்தனர்.
நடப்பது என்ன வாட்ஸப் குழுமம் சார்பாக,
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ் |