கத்தர் கா.ந.மன்றம் & ஹாங்காங் பேரவை இணைவில், “உணவே மருந்து” நிகழ்ச்சி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. திரளானோர் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து, கத்தர் காயல் நல மன்றப் பிரதிநிதி எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
கத்தர் காயல் நல மன்றம் (KWAQ), காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங் (KUFHK) & காயல்பட்டினம் ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் ட்ரஸ்ட் ஆகியன இணைந்து, “உணவே மருந்து” எனும் தலைப்பில் சிறப்புரை & கலந்துரையாடல் நிகழ்ச்சியை, 07.08.2016 ஞாயிற்றுக் கிழமையன்று, காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் வளாகத்தில் நடத்தின.
நிகழ்ச்சி அறிவிப்பு
முன்னதாக, நிகழ்ச்சி குறித்த தகவல் பிரசுரமாகவும், இணையதள செய்தியாகவும், நகரின் முக்கிய இடங்களில் தற்காலிகமாக நிறுவப்பட்ட விளம்பரப் பதாகைகளின் (flex banner) மூலமாகவும், நகர மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அனுமதி சீட்டு ஒன்றுக்கு 20 ரூபாய் முன்பதிவுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது.
அனுமதிச் சீட்டுகளை இக்ராஃ கல்விச் சங்கத்தின் அலுவலகம், ஷிஃபா அமைப்பின் அலுவலகம், முர்ஷித் டிஜிட்டல் ஜெராக்ஸ், மன்னர் ஜுவல்லர்ஸ் மற்றும் N.S.E. இயற்கை உணவுப் பொருளகம் ஆகிய இடங்களில் பெற்றிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்முறை
ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனி இடவசதி செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், திரளானோர் கலந்து கொண்டனர். நுழைவாயிலில், அனைவரும் பெயர் பதிவு செய்யப்பட்டனர்.
இக்ராஃ கல்வி சங்கத்தின் செயலாளரும், இயற்கை வழி விவசாயம் மூலம் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை நகரில் துவக்கமாக அறிமுகப்படுத்தியவருமான என்.எஸ்.இ.மஹ்மூது நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.
KWAQ தலைவர் எம்.என்.முஹம்மத் யூனுஸ், KUFHK தலைவர் ஏ.எல்.இர்ஷாத் அலீ, ஷிஃபா அமைப்பின் தலைவர் டாக்டர் முஹம்மது இத்ரீஸ், அதன் மருத்துவக் குழு ஆலோசகர் டாக்டர் பீ.ஏ.எம்.ஜாஃபர் ஸாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
KUFHK முன்னாள் துணைத்தலைவர் பி.எஸ்.ஷாஹுல் ஹமீத் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
இக்ராஃ கல்வி சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் எம்.எம்.முஜாஹித் அலீ, நிகழ்ச்சியை அறிமுகவுரையாற்றியதோடு, இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மன்றங்கள் இதற்கு முன் இணைந்தும், தனியாகவும் நடத்திய - மருத்துவம் மற்றும் இயற்கை வாழ்வியல் சார்ந்த நிகழ்ச்சிகளையும், செயல்பாடுகளையும் விரிவாக விளக்கிப் பேசினார்.
நிகழ்ச்சியை நடத்தும் அமைப்புகள் குறித்து, ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அறக்கட்டளையின் நிர்வாக அலுவலர் ‘கண்டி’ ஸிராஜ் உரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ’சிவகாசி’ மாறன் G குறித்து, நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் அ.ர.ஹபீப் இப்றாஹீம் அறிமுகவுரையாற்றினார்.
அதன் தொடர்ச்சியாக, ’சிவகாசி’ மாறன் G அவர்களின் சிறப்புரையும், பின்னர் பார்வையாளர்களுடன் கலந்துரையாடலும் நடைபெற்றன.
இயற்கை உணவியல் வைத்தியர் ‘சிவகாசி’ மாறன் G
ஆய்வாளர், நூலாசிரியர், பரப்புரையாளர் மற்றும் பயிற்றுநர் என பல பரிமானங்களில் சிறந்து விளங்கும் மாறன் G, இயற்கை விஞ்ஞானி அய்யா நம்மாழ்வாரின் வழியைப் பின்பற்றி, இயற்கை உணவியல் வைத்தியராக பல ஆண்டுகளாக மக்களுக்குச் சேவையாற்றி வருகிறார்.
[மாறன் G அவர்களின் ”நோய்களைத் துரத்தும் பாரம்பரிய உணவுகள்” நூலின் பின் அட்டையில் இருந்து...]
இவரது சொற்பொழிவுகள் ஜீ தமிழ், விஜய் டீவி, ஜெயா டீவி போன்ற பல தமிழ் தொலைக்காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டுள்ளன.
சிவகாசியில் உள்ள இவரது ‘தாய்வழி இயற்கை உணவகத்திற்கு’ அன்றாடம் சுமார் 300 வாடிக்கையாளர்கள் வந்து, இயற்கை உணவு, குடி வகைகளை உட்கொண்டு செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்புரை / கலந்துரையாடலின் சாராம்சம்
தனது சிறப்புரையில், உடல்/மன நலம் மேம்பட பல அறிவுரைகளையும், குறிப்புகளையும் வழங்கிய மாறன் G, அதனையொட்டி நடைபெற்ற கலந்துரையாடலின்போது, பார்வையாளர்களின் உடல் / மன நலம் சார்ந்த கேள்விகளுக்கும் பதிலளித்தார். விவாதங்களும், விளக்கங்களும் நமதூர் மக்களின் வாழ்க்கை முறைக்கு ஒத்ததாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவரது சிறப்புரை / கலந்துரையாடலின் மையக் கருத்துக்களில் சில வருமாறு:-
>>> வேதிப்பொருட்கள் கலந்த பற்பசைகளைப் பயன்படுத்துவதை விடுத்து, மூலிகை பற்பொடிகளையோ அல்லது மிஸ்வாக் போன்ற குச்சிகளையோ பயன்படுத்த வேண்டும்.
>>> வேதிப்பொருட்கள் நிறைந்த மினரல் வாட்டர் (mineral water) பயன்படுத்துவரை இயன்ற வரை குறைத்து, இயற்கையான சத்து மிகுந்த ஆற்று அல்லது ஊற்று நீரைப் பயன்படுத்த வேண்டும்.
>>> அமிலத்தன்மை (acidity) மிக்க ஃப்ரைடு ரைஸ் (fried rice), பஃப்ஸ் (puffs), சிப்ஸ் (chips), க்ரில்டு சிக்கன் (grilled chicken) போன்ற வேதிப்பொருட்களைக் கொண்ட திண்பண்டங்களைத் தவிர்த்து, அதற்கு மாற்றாக அவல் கலவை (flakes salad), பழ கலவை (fruit salad) போன்ற சத்தான உணவுகளையோ; அல்லது வரகு, சாமை, கம்பு, குதிரை வாலி போன்ற சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மூலிகை வடை, புட்டு, முறுக்கு, அதிரசம் போன்ற பழமையான திண்பண்டங்களையோ உண்ணலாம்.
>>> வழக்கமான தேனீர், காபிக்கு பதிலாக மூலிகைத் தேனீரையோ செம்பருத்தி தேனீரையோ அருந்தலாம்.
>>> இறைவன் நமக்களித்த உணவிற்காக - அவனுக்கு நன்றிகளைக் கூறி பிரார்த்தித்த பின், உண்ணத் துவங்க வேண்டும். இடையில், உரையாடுவதோ அல்லது தொலைக்காட்சி பார்ப்பதோ கூடாது.
>>> மாலை 6 மணிக்கு மேல், நமது வீடுகளின் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்படும் நாடக தொடர்கள் ஷைத்தானைப் போன்றது.
>>> வெளிநாட்டு சாக்லேட் (chocolates), பிறந்த நாளுக்காக வெட்டபப்டும் கேக் (birthday cakes) ஆகியன வேதிப்பொருட்கள் அதிகம் நிறைந்தவை.
அவற்றைத் தவிர்த்துவிட்டு - கருவேப்பிலை கீர், கொள்ளு குழம்பு, முடக்கத்தான் தோசை, அத்திப்பழ அல்வா, முருங்கை பூ அல்வா, முள்ளங்கி சூப், காரட் கேசரி, செம்பருத்தி ஜாமுன், தூதுவளை துவையல், பிரண்டை ஊறுகாய் போன்ற பாரம்பரியமிக்க உணவுப் பண்டங்களுக்கு மாற வேண்டும்.
>>> தடுப்பூசிகளில் இருக்கும் வேதிப்பொருட்கள் உடலுக்கு ஏற்றதல்ல.
>>> சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வகைகள் (refined oil) உடல் நலனுக்கு உகந்ததல்ல. பலவகை நோய்களுக்கு இவையே காரணமாக இருக்கின்றன. இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட எண்ணெய் வகைகளையே நாம் பயன்படுத்த வேண்டும்.
>>> பழங்களை உணவிற்கு முன்பாக சாப்பிட்டால் அதன் முழுப் பலனையும் பெறலாம்.
>>> வெள்ளை நிறமாக உள்ள சக்கரை, மைதா போன்ற உணவுப் பொருட்கள் உடல்நலனுக்கு உகந்தவையல்ல.
>>> ஊறுகாய் உடலுக்கு ஊறு விளைவிக்கும் காய் ஆகும்.
>>> குளிர்சாதனப் பெட்டி (refrigerator) ஒரு ”எச்சிப் பெட்டி” ஆகும். அதில் வைத்த உணவுகளை உண்பது ஆரோக்கியத்திற்குக் கேடு ஆகும்.
>>> முளைகட்டிய பயிறு வகைகளில் புரதச் சத்து அதிகம் உள்ளது. அதனை தயார் செய்வதோ மிகவும் எளிது.
>>> இயற்கையான உணவுப் பொருட்களையே (organic food) உண்ணுங்கள்! பூச்சிக்கொல்லி இராசயன விஷங்களைப் பயன்படுத்தி பயிரிடப்பட்ட அனைத்து உணவுப் பொருட்களையும் கண்டிப்பாகத் தவிர்த்திடுங்கள்!
>>> எளிதில் ஜீரணமாக்கூடிய பாரம்பரியமிக்க எளிய இயற்கை உணவுகள், அவற்றுக்கு ஒத்த உடல் உழைப்பு / உடற்பயிற்சி ஆகியவையே ஆரோக்கியமான வாழ்விற்கு மூலம் ஆகும்.
உடலைக் காக்கும் உடற்பயிற்சி
ஜென் யோகா மற்றும் நடன யோகா கலைகளில் வல்லவரான மாஸ்டர் ஆப்றஹாம் சவுந்தர், எளிய உடற்பயிற்சிகளை பங்கேற்பாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். சிறுவர்களின் உதவியுடன் இவ்வுடற்பயிற்சிகளின் செயல்முறைகளை விளக்கி, பார்வையாளர்கள் அனைவரையும் அவர் பங்கெடுக்க செய்தது இந்நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்தது.
தனது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துள்ள இந்த ‘60 வயது நிரம்பிய இளைஞர்’, மாறன் Gயுடன் இணைந்து, கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு, தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
சால்வை அணிவிப்பு
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய என்.எஸ்.இ.மஹ்மூது அவர்களுக்கு KWAQ தலைவர் எம்.என்.முஹம்மது யூனுஸ் அவர்களும், சிறப்பு விருந்தினர் மாறன் G அவர்களுக்கு KUFHK தலைவர் ஏ.எல்.இர்ஷாத் அலீ அவர்களும், சிறப்பு உடற்பயிற்ச்சிகளை அறிமுகம் செய்த மாஸ்டர் ஆப்றஹாம் சவுந்தர் அவர்களுக்கு ஷிஃபா அமைப்பின் தலைவரான டாக்டர் முஹம்மது இத்ரீஸ் அவர்களும் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினர்.
சிறந்த மாடித்தோட்ட பராமரிப்பாளர்களுக்கு பரிசு
கடந்த 07.02.2016 அன்று கத்தர் காயல் நல மன்றம் சார்பில் நடத்தப்பட்ட மாடித்தோட்டம் பயிற்சி முகாமின்போது அறிவிக்கப்பட்ட படி, நகரில் சிறந்த மாடித்தோட்டத்தை அமைத்துப் பராமரிப்போர் தேர்வு செய்யப்பட்டு, இந்நிகழ்வின்போது பரிசளிக்கப்பட்டனர்.
இதுகுறித்த விரிவான விபரங்கள் தனிச்செய்தியாக வெளியிடப்படும்.
சிறுதானிய சிற்றுண்டி
பார்வையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட 20 ரூபாய் நுழைவுக் கட்டணத்திற்குப் பகரமாக, சிறுதானிய லட்டு, மூலிகை தேனீர், முளைகட்டிய பயிறு வகைகள் சிறுகடி/குடி அனைவருக்கும் வழங்கப்பட்டன. வழமையாக வழங்கப்படும் பால் தேனீர், செயற்கைக் குளிர்பானங்கள் தவிர்க்கப்பட்டு, புதுமையாக வழங்கப்பட்ட இந்த சத்தான சிற்றுண்டி பதார்த்தங்கள் - பெரியோர், சிறியோர், ஆடவர், பெண்டிர் என அனைவரையும் கவர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
புத்துயிரூட்டிய புத்தக கண்காட்சி
பல்வேறு தலைப்புகளில் இயற்கை உணவியல் மற்றும் வாழ்வியல் குறித்த சிறப்பு நூல்களும், குறுந்தகடுகளும் விற்பனைக்காக நிகழ்வரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
அவற்றுள், மாறன் G அவர்களின் ”நோய்களைத் துரத்தும் பாரம்பரிய உணவுகள்” மற்றும் “சத்துமிகு சிறுதானிய உணவுகள்”, கே.ஆர்.வேலாயுத ராஜா அவர்களின் ”மருந்தில்லா மருத்துவம்”, இரத்தின சக்திவேல் அவர்களின் ”புற்றுநோய்க்கு இயற்கை மற்றும் மூலிகை மருத்துவம்” போன்ற பல புகழ்பெற்ற புத்தகங்களும் அடங்கும்.
புத்தக ஆர்வலர்களைப் பெரிதும் கவர்ந்த இந்நிகழ்வு, ஒரு ’மினி’ புத்தக கண்காட்சி போலவே அமைந்தது.
இயற்கை உணவுப் பொருட்காட்சி!
இந்நிகழ்வில் ஓர் அங்கமாக, காயல்பட்டினம் ஆராம்பள்ளித் தெருவில் இருக்கும் ‘N.S.E. ஆர்கானிக்’ இயற்கை உணவுப் பொருளகம், சிவகாசி ’இயற்கை வாழ்வியல் இயக்கம்’ ஆகியன - இரசாயண விஷக் கலப்பின்றி, இயற்கை முறையில் பயிரிட்டு, பொதியிடப்பட்ட தத்தம் விற்பனைப் பொருட்களை சந்தைப்படுத்தின.
தினை, வரகு, சாமை மற்றும் குதிரைவாலி போன்ற சிறுதானியங்களும், அவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட (தினை சேமியா மற்றும் குதிரைவாலி சேமியா போன்ற) உணவுப் பண்டங்களும் அவற்றுள் இடம்பெற்றன.
நாட்டுச் சக்கரை, தேன், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்ற இதர உணவுப் பொருட்களுடன்; மூலிகை பல்பொடி, மூலிகை குளியல்பொடி, மூலிகை கபசுரக் குடிநீர் போன்றவையும் விற்பனை செய்யப்பட்டன.
விதைகள், மண்புழு உரம் (vermi compost), தென்னை நார் கழிவு (coco peat), அமிர்த கரைசல் போன்ற - வீடுகளில் மாடித்தோட்டம் அமைப்பதற்குத் தேவையான பல பொருட்களை காயல்பட்டினம் நெய்னார் தெருவை சார்ந்த ’UU மாடித்தோட்டம்’ நிறுவனம் சந்தைப்படுத்தியது.
நினைவுப் பரிசு
சிறப்புரையாற்றிய மாறன் G அவர்களுக்கு, இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் என்.எஸ்.இ.மஹ்மூது அவர்களும், சிறப்பு உடற்பயிற்ச்சிகளை அறிமுகம் செய்த மாஸ்டர் ஆப்றஹாம் சவுந்தர் அவர்களுக்கு கத்தர் காயல் நல மன்றத் தலைவர் எம்.என்.முஹம்மத் யூனுஸ் அவர்களும் நினைவுப் பரிசு வழங்கி கண்ணியப்படுத்தினர்.
செய்நன்றி மறவேல்
நன்றியுரை ஆற்றிய KWAQ தலைவர் எம்.என்.முஹம்மத் யூனுஸ், இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தேறியதற்காக மேலோன் அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்தவராய், நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவில் அங்கம் வகித்த அனைவருக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.
குறிப்பாக, KWAQ பிரதிநிதி எஸ்.கே.ஸாலிஹ், KUFHK பிரதிநிதி ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத், KWAQ ஒருங்கினைப்பாளர் முஹ்யித்தீன் தம்பி (எ) மச்சான்ஜீ, ஷிஃபா அமைப்பின் நிர்வாகி ‘கண்டி’ ஸிராஜுத்தீன், இக்ராஃ கல்விச் சங்க பொருளாளர் கே.எம்.டீ.சுலைமான், அதன் அலுவலகப் பொறுப்பாளர் எம்.புகாரீ, நிகழ்ச்சி ஏற்பாட்டு குழு உறுப்பினர் அ.ர.ஹபீப் இப்றாஹீம் ஆகியோரின் சீரிய பணிகளை நன்றிப் பெருக்குடன் நினைவுகூர்ந்தார்.
அனுமதி சீட்டுகளை ஆர்வமுள்ளவர்கள் எளிதாக பெறுவதற்கு தகுந்த ஏற்பாடுகளை செய்திருந்த இக்ராஃ கல்விச் சங்கம், ஷிஃபா அமைப்பு, முர்ஷித் டிஜிட்டல் ஜெராக்ஸ், மன்னர் ஜுவல்லர்ஸ் மற்றும் N.S.E. இயற்கை உணவுப் பொருளகம், ஃபஸீஹா ஏஜென்ஸி ஆகிய அமைப்புகளுக்கும் / நிறுவனங்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
பங்கேற்பாளர்களைப் பெயர் பதிவு செய்தல், சிற்றுண்டி வினியோகம் மற்றும் விற்பனை அரங்குகளின் மேலாண்மை உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளையும், இக்ராஃ கல்விச் சங்கத்தின் பெண் தன்னார்வலர்களும், நகர பள்ளிக்கூடங்களில் பயிலும் தன்னார்வச் சிறுவர்கள் சிலரும் ஆர்வமுடன் செய்தமைக்காக அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் முழுப் பலனையும் நமதூர் மக்கள் பெற்று, அதன் மூலம் நோயில்லா வாழ்வைப் பெற்றிட அருளுமாறு இறைவனை வேண்டியவராய், அவர் தனது நன்றியுரையை முடித்துக்கொண்டார்.
இறுதியாக, KUFHK தலைவர் ஏ.எல்.இர்ஷாத் அலீ துஆ ஓத, ஸலவாத் - கஃப்பாராவுடன் நிகழ்ச்சிகள் இறையருளால் இனிதே நிறைவுற்றன.
ஊக்கம் தரும் பின்னூட்டங்கள்
“நாம் மறந்துபோன ஒரு மகத்தான மருத்துவ முறையை நினைவு படுத்திய நிகழ்ச்சி இது,” என பங்கேற்றோர் பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.
உணவு என்று நினைத்து, உணவு போன்ற பொருட்களை உட்கொண்டு, பலவகை வியாதிகளை ஏற்றுக் கொண்டுள்ள நம் சமுதாயத்திற்கு, இது ஒரு வரவேற்கத்தக்க நிகழ்ச்சி என்றும், இது போன்று இன்னும் பல பயனுள்ள நிகழ்ச்சிகளை இம்மன்றங்கள் இணைந்து நடத்திட வேண்டுமென்றும் பங்கேற்ற பலர் தம் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
சிறப்புரை ஆற்றிய சிவகாசி மாறன் G அவர்களோ, “மதியம் சுமார் 2 மணி வரை, அதிகமான பெண்கள் பொறுமையுடனும், ஆர்வமாகவும் நிகழ்ச்சியில் பங்குபெற்றது பாராட்டுதலுக்குரியது,” என்றும்; “அதிகளவு புத்தகங்களை அவர்கள் வாங்கியிருப்பதைப் பார்க்கும்போது, இது ஓர் மாற்றத்தை விரும்பும் சமூகம் என்றே எண்ணத் தோன்றுகிறது,” எனவும் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழு உறுப்பினர்களிடம் பெருமிதத்துடன் தெரிவித்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
களத்தொகுப்பு, செய்தியாக்கம் & படங்கள்:
அ.ர.ஹபீப் இப்றாஹீம் |