குடும்ப அட்டையில் ஆதார் எண்களை ஸ்மார்ட் ஃபோன் மூலம் பதிவு செய்ய தமிழக அரசால் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அரசு நியாயவிலைக் கடைகளில் (ரேசன் கடைகளில்) குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்கள் அவரவர் குடும்ப அட்டை எண்ணோடு இணைக்கப்பட்டு வருகிறது.
அதைச் செய்யாதவர்கள், ரேஷன் கடைக்குச் சென்று வரிசையில் நிற்க முடியாதவர்கள் என ஏராளமானோர் உள்ளனர். அவர்கள் ஸ்மார்ட்போனில் Google Play App Store ல் TNEPDS என்ற இலவச செயலியை (APP) பதிவிறக்கம் செய்தால் அது ஸ்மார்ட் ஃபோன் திரையில் வந்துவிடும்.
பின் அதற்குள் செல்ல, ஏற்கனவே நியாயவிலைக் கடையில் பதிவு செய்யப்பட்டுள்ள குடும்பத்தலைவரின் தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்தால் உடனே ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய OTP (One Time Password) கடவுச் சொல் குறுஞ்செய்தியாக (SMS) அவரது தொலைபேசிக்கு வரும். அந்த எண்களை செயலியில் இட்டவுடன் செயலி திறக்கப்படும்.
அதில் ஆதார் எண்ணைப் பதிவு செய்யும் இடத்தை தொட்டவுடன் ஸ்கேன் செய்ய ஏதுவாக கேமரா திறக்கும். பின்னர், ஸ்மார்ட் போன் கேமரா முன்பு ஆதார் அட்டையில் உள்ள QR CODE (கருப்பு புள்ளிகள் நிறைந்த பெட்டி போன்ற படத்தைக்) காட்டினால் QR code ஸ்கேன் செய்யப்பட்டு அந்த ஆதார் எண் திரையில் தோன்றும். "சமர்ப்பி" என்ற பட்டனை அழுத்தினால் அவரது ஆதார் எண் பதிவாகி, பதிவான ஆதார் எண் அதில் தோன்றும்.
முதலில் குடும்ப தலைவர் ஆதார் எண்ணையும், அதன்பின் குடும்ப அட்டையில் உள்ள வரிசைப்படி குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்களையும் வரிசையாகப் பதிவு செய்யவேண்டும். இம்முறையில் ஆதார் எண்களைக் குடும்ப அட்டையில் விரைவாகப் பதிவு செய்ய முடிவதால் இது மிகவும் எளிதான செயல்முறையாகும்.
மேலும் இந்த செயலியின் மூலம், குடும்ப அட்டைக்குரிய பல்வேறு செயல்களை வீட்டிலிருந்தே அனைவரும் கண்காணிக்க இயலும்.
தகவல்:
வசந்த் |