ஹிஜ்ரீ கமிட்டியின் சார்பில், காயல்பட்டினம் கடற்கரையில் இன்று காலையில் ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் தொழுகையும், குத்பா பேருரையும் நடத்தப்பட்டுள்ளது. அதில் திரளானோர் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து, அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம்.என்.அஹ்மத் ஸாஹிப் வெளியிட்டுள்ள அறிக்கை:-
ஹிஜ்ரி கமிட்டி சார்பில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் உட்பட சுமார் 50 இடங்களுக்கும் அதிகமாக இவ்வருடம் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் காயல்பட்டினம் கடற்கரையிலும் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது.
இவ்வருடத்தின் அரஃபா நாள் & ஹஜ் பெருநாள் குறித்த அறிவிப்பை அச்சுப் பிரசுரமாக ஏற்கனவே வெளியிட்டு, பொதுமக்களுக்கு வினியோகித்துள்ளோம்.
அதில் கூறப்பட்டுள்ள விபரங்களின்படி, இன்று (11.09.2016. ஞாயிற்றுக்கிழமை) ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று காலையில், கடற்கரையில் பெருநாள் தொழுகையும், குத்பா பேருரையும் நடைபெற்றது. திருநெல்வேலி அரசன் பள்ளியின் கத்தீப் மவ்லவீ மீரான் தாவூதீ - தொழுகையை வழிநடத்தி, குத்பா உரையாற்றினார்.
இதில், சுமார் 70 ஆண்கள், 50 பெண்கள் என மொத்தம் சுமார் 120க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். நிறைவில் அனைவரும் ஒருவருக்கொருவர் முகமன் கூறி, பெருநாள் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
M.N.அஹ்மத் ஸாஹிப் & S.அப்துல் வாஹித் |