‘எழுத்து மேடை மையம், தமிழ்நாடு’ அமைப்பின் சார்பில் “எனக்கு இல்லையா கல்வி?” எனும் தலைப்பில் ஆவணப்படம் திரையிடும் நிகழ்ச்சி, 09.09.2016 வெள்ளிக்கிழமையன்று 16.50 மணியளவில், காயல்பட்டினம் துஃபைல் வணிக வளாகத்திலுள்ள ஹனியா சிற்றங்கில் நடைபெற்றது.
இதுகுறித்து, அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாளை பஷீர் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
‘எழுத்து மேடை மையம், தமிழ் நாடு’ சார்பில் நமதூரில் ஆவணப்பட திரையிடல்களும் நூலாய்வுகளும், அவற்றையொட்டிய கலந்துரையாடல்களும் விவாதங்களும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், கடந்த 09 செப்டம்பர் 2016 வெள்ளியன்று மாலை 4.50 மணியளவில், நமதூரின் பிரதான சாலையில் அமைந்திருக்கும் துஃபைல் வணிக வளாக ஹனியா சிற்றரங்கில், எழுத்து மேடை மையத்தின் பத்தாவது நிகழ்வாக, பாரதி கிருஷ்ண குமார் இயக்கிய “எனக்கு இல்லையா கல்வி?” எனும் ஆவணப்படம் திரையிடப்பட்டு, கல்வி குறித்த கருத்து பரிமாற்ற அமர்வும் நடைபெற்றது.
ஆவணப்பட திரையிடல்
நிகழ்ச்சியின் துவக்கமாக, எழுத்து மேடை மையத்தின் செயல்பாடுகள் மற்றும் முந்தைய நிகழ்ச்சிகளைப் பற்றி அதன் ஒருங்கிணைப்பாளர் சாளை பஷீர் சுருக்கமாக எடுத்துக்கூறி; அன்றைய தினத்தின் நிகழ்வான ‘எனக்கு இல்லையா கல்வி?’ எனும் ஆவணப்படம் குறித்தும், அதன் இயக்குனர் பாரதி கிருஷ்ண குமார் குறித்தும் ஓர் அறிமுகவுரையை நிகழ்த்தினார்.
இச்சிற்றுரையை தொடர்ந்து, ‘எனக்கு இல்லையா கல்வி?’ ஆவணப்படம் திரையிடப்பட்டது.
இயக்குனர் பாரதி கிருஷ்ண குமார்: ஓர் அறிமுகம்
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வரலாறு (முதுகலை) பயின்ற பாரதி கிருஷ்ண குமார், சமூக மாற்றத்திற்க்கான குரலாக ஒலிப்பவர்.
கலையின் மீதுள்ள ஈடுபாட்டினால், தொண்ணூறுகளில் தனது வங்கி வேலையை துறந்து, பாரதி ராஜாவிடம் இணை இயக்குனராக இரு திரைப்படங்களில் பணியாற்றினார்.
மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இவரது ஆவணப்படங்கள், ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்காகவும், அநீதிக்கு எதிராகவும் மற்றும் சம கல்வி உரிமைக்காகவும் குரல் கொடுத்து, சமுதாய பாகுபாடுகளை களைய உதவும் கருவியாகவே அமைகிறது.
1968-ஆம் ஆண்டு, 44 பேரை பலிகொண்ட தஞ்சை மாவட்டம் கீழ்வெண்மணி என்ற ஊரில் நிகழ்ந்த சாதிப்படுகொலையைப் பற்றிய ”ராமையாவின் குடிசை” ஆகட்டும்; 1992-ஆம் ஆண்டு வாச்சாத்தி என்ற கிராமத்தில், அதிரடி சோதனை என்னும் பெயரில் காவல் துறை மற்றும் வனத் துறையினர் அக்கிராமத்தைச் சேர்ந்தவர்களை கைதுசெய்து நடத்திய அத்துமீறல்களையும், அதில் 18 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட குற்றச்சாட்டையும் மையக்கருவாக கொண்டு வெளிவந்த “உண்மையின் போர்க்குரல் – வாச்சாத்தி” ஆகட்டும், இவரது சமூக அக்கறைக்கு சிறந்த உதாரணங்களாகும்.
எழுத்தாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் சிறந்து விளங்கும் இவர், தமிழகத்தின் தலைச் சிறந்த மேடை பேச்சாளர்களுள் ஒருவரும் கூட!
“எனக்கு இல்லையா கல்வி?” ஆவணப்படம்
மனித உரிமைக் கல்வி நிறுவனம் - மதுரை தயாரித்து வழங்கி உள்ள இந்த “எனக்கு இல்லையா கல்வி?” ஆவணப்படத்தில், தமிழகத்தின் கல்வி நிலை மற்றும் அரசு பள்ளிகளின் அவலநிலைக் குறித்து முன்னாள் துணை வேந்தர், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பலரது கருத்துக்களையும் முத்து கோர்த்தது போல அழகாக தந்திருக்கிறார், பாரதி கிருஷ்ண குமார்.
இருபது மாவட்டங்களின் சிற்றூர்களையும் கிராமங்களையும் திரைக்குள் கொண்டுவந்து, பள்ளிகளில் தொடரும் தீண்டாமை கொடுமை மற்றும் மனித உரிமை மீறல்கள், கல்வியாளர்களின் உள்ளக் குமுறல்கள், அரசும் அதிகாரவர்க்கத்தினரும் காட்டும் அலட்சியங்கள் மற்றும் கல்வி முதலாளிகளின் கொள்ளை லாப வர்த்தகம் என பலவற்றை வெளிச்சம் போட்டு காட்டும் இவ்வாக்கம், கல்நெஞ்சையும் கரைத்து விடும்.
”வாத்தியாரில்ல… வகுப்பு நடக்கல்ல…
வயித்துப்பாட்டுக்கு நல்ல சோறில்ல…
எங்க மானம் மறைச்சிக்க ஆடை துணியில்ல…
சாதிப் பூக்கள கோர்க்க நாரில்ல…”
என துவங்கும் இந்த மூன்று நிமிட பாடலில்தான் எத்தனை அழுத்தமான வரிகள்?!
https://www.youtube.com/watch?v=wifkAidPOwk
கல்வியாளர்களும் சமூக செயற்பாட்டாளர்களுமான முனைவர் வசந்தி தேவி ( மேனாள் துணை வேந்தர் , மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ) மக்கள் மருத்துவரும் காந்தியவாதியும் சூழலியல்வாதியுமான பெ.ஜீவானந்தம் , மூத்த கல்வியாளர் ச.சீ. இராஜகோபாலன் , இருளர் பழங்குடி மக்களின் மேம்பாட்டிற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பேரா.கல்யாணி ஆகியோர் இந்த ஆவணப்படத்தின் வாயிலாக முன்வைக்கும் கருத்துக்களும் பார்வைகளும் மிகவும் கூர்மையானவை , ஆழமானவை முழுமையானவை.
கல்வியின் பெயரால் நம் மீது திணிக்கப்பட்டுள்ள அநீதிகளினாலும் அவலங்களினாலும் நம் மனது கனத்து தாழ்ந்து தரை தட்டும் வேளையில் படத்தின் இறுதியில்,
“இருப்பதெல்லாம்
அசைக்க முடியாத
நம்பிக்கைதான்
என்
மக்களின் மீதான
முடிவற்ற காதல்தான்”
என ஒளிரும் பலஸ்தீன கவிஞர் தவ்ஃபீக் ஸைய்யதின் வரிகள் நம் வலிகளையும் காயங்களையுமே திரும்ப நம் கையில் உள்ள ஆயுதமாக ஒப்படைக்கும் கணம் மகத்தானது.
ஆவணப்படத்தின் மதிப்புரைகள்
கல்வியாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்த ஆவணப்படத்தைப் பற்றிய ஒரு சில விமர்சனங்களை கீழே சுருக்கமாக காணலாம்:
1) ”The title runs against the backdrop of a potter at his wheel creating ceramic vessels of different sizes and shapes. This is perhaps a powerful message that society has an indispensable role in shaping the future of children by putting in them the required energy through a sensible and equitable education system.” – ச.துரை ராஜ், Front Line இதழ்
2) ”இந்த ஆவணப்படம், மிகப்பெரிய ஒரு எச்சரிக்கை மணி. இது ஏனோதானோவென்று சில தகவல்களை வைத்துக்கொண்டு உருவான ஆவணம் அல்ல. தமிழகம் முழுதும் ஓடியோடி சேர்த்த அவலங்களின் தொகுப்பு. இது சேர வேண்டியவர்களுக்கு சர்வ நிச்சயமாகச் சேரவேண்டும். அப்படி அவர்கள் உற்றுக் கவனிக்க மறுத்தால், இதையே ஒரு நெருப்பாகக் கொண்டு ஒரு புரட்சி உருவாக வேண்டும்.” - ஈரோடு கதிர் (மாறுதல் வலைப்பக்கம்)
3) ”படம் பார்த்து முடித்தவுடன் மனம் கனத்து விட்டது. அனைவருக்கும் சமமான கல்வி என்பது அடிப்படை உரிமை. அந்த உரிமை காக்கப் பட வேண்டும். கல்வித் துறை முழுவதும் அரசுடமையாக வேண்டும் .தரமான, சமமான கல்வி அனைவருக்கும் வழங்கப் பட வேண்டும் என்று அறிவுறுத்தும் அற்புதமான ஆவணப்படம். இந்தப் படத்தை பிரபல தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப வேண்டும்.” - கவிஞர் இரா .இரவி (நூலகம் வலைப்பக்கம்)
4) ”இங்கிருக்கிற நூறுகோடி மக்களுக்கும் உணவு உடை உறைவிடம் கல்வி கொடுக்கவேண்டியது அரசின் கடமை. அப்படிக்கொடுக்கிற அடிப்படைத்தேவைகள் சரியான அளவிலும் முறையிலும் கொடுக்கப்படுகிறதா என்கிற கவனிப்பும் அரசின் கடமையாகிறது. பத்துக் கிலோமீட்டர்கள் மலைப்பாதைவழியே நடந்துபோய் கல்வி கற்கத்துடிக்கிற சிறார்களின் பின்னாடி தொடர்கிற காமிராவுக்கு ஒரு சலாம் போடவேண்டும்.” – காமராஜ் (அடர் கருப்பு வலைப்பக்கம்)
5) ”தாய்மொழி வழிக் கல்விக்காக இந்த ஆவணப்படம் வாதாடுகிறது. ஒரு கிராமத்தின் இஸ்லாமியர்கள், ”எங்க தாய்மொழி உருது; அதிலே, கல்வி கிடைச்சா, எங்க குழந்தைக நல்லா புரிஞ்சிக்கிட்டு படிப்பாங்க,” என்கிறார்கள். அது, சமச்சீர் கல்வியில் தாய்மொழி வழிக் கல்வி என்பதன் பொருள் மாநிலத்தின் பெருவாரியினர் மொழி மட்டுமல்ல எனற பாடத்தை பதிய வைக்கிறது.” – தீக்கதிர் / வண்ணக்கதிர் பத்திரிக்கையாளர் அ.குமரேசன்
தேசிய கல்விக் கொள்கை 2016
ஆவணப்பட திரையிடலை தொடர்ந்து, நடுவண் அரசின் புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கை குறித்தும் அதனால் கல்விக்கு நிகழவுள்ள ஆபத்துகள் குறித்தும் எழுத்து மேடை மையத்தின் நிர்வாக குழு உறுப்பினர்களுள் ஒருவரான அ.ர.ஹபீப் இப்றாஹீம் சிற்றுரையாற்றினார். பின், அதனையொட்டிய கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.
அபத்தங்கள் நிறைந்த வரைவு அறிக்கை
புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை சமூகநீதியை வஞ்சிக்கும் வகையில் அமைந்துள்ளதென கல்வியாளர்களும் முற்போக்கு சிந்தனையாளர்களும் கருத்துகளையும் எதிர்ப்புகளையும் பதிவு செய்த வண்ணம் உள்ளனர்.
இவ்வறிக்கை குறித்த சமூகத்தில் நிலவும் சில விமர்சனங்களின் சுருக்கங்களை கீழே காணலாம்:
1) ”மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பது, கல்வி முறையினுள் மதத்தை இணைப்பது, குலக்கல்வி முறையினை திரும்பக் கொண்டு வருவது, சிறுபான்மையின கல்வி நிறுவனங்களின் உரிமைகளைப் பறிப்பது, மொழிக் கொள்கைக்கு எதிரானது என்று சொல்லிக்கொள்ள இடமிருக்கிற ஒரு கல்விக் கொள்கை, தனக்குத் தேவையான ஒரு கல்வி முறைமையை விரும்புகிற பெருமுதலாளிகள் இக்கொள்கையை யாத்துள்ளனரோ எனும் அளவுக்கு இக்கொள்கையில் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றன.”
2) ”திறன்களை வளர்க்கிறோம் என்ற பெயரில் எட்டாம் வகுப்பிற்கு மேல் சேவை-சார் தொழிற்கல்விக்கு பரிந்துரைப்பது கிராமப்புற மாணவர்கள் பெரும்பாலானோர் உயர்கல்விக்கு செல்லும் வாய்ப்பைத் தடுத்து அவர்களை கூலித் தொழிலாளர்களாக மாற்றும் அபாயம் உள்ளது.”
3) ”ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கையான ஏக இந்தியா, ஏக மொழி, ஏகக் கலாச்சாரம் என்ற அடிப்படையில் சமஸ்கிருதத்தை இந்தியாவின் ஒற்றை மொழியாகவும், இந்தியப் பண்பாட்டின் ஒருமைப்பாட்டிற் கான மொழியாகவும் முதன்மைப்படுத்துகிறது. இதன் விளைவு, இந்திய மொழிகள் அனைத்தும் அழிவதோடு தமிழர் உள்ளிட்ட பெரும்பகுதி இந்திய மக்களை பண்பாட்டு வரலாறு அற்றவர்களாக மாற்றுகிறது.”
4) ”பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி வரை சர்வதேசத் தரம் என்றும், உலகப் பாடத்திட்டம் என உளறி உள்ளது இவ்வறிக்கை. அந்நியப் பல்கலைக் கழகங்களுக்கு திறந்து விடும் நோக்கம் பளிச்செனத் தெரிகிறது.”
5) ”தேசிய கல்விக் கொள்கை ஒரு தலைமுறையின் கல்வியை தீர்மானிக் கூடியது. பெரும்பான்மை மக்களை ஒதுக்கிய குருகுலக் கல்வியை துதி பாடி துவங்கும் இந்த அறிக்கை, கல்வியை வணிகப் பொருளாக அறிவிக்கும் ஒப்பந்தத்தில் [சென்ற ஆண்டு கென்யாவின் நைரோபியில் கையெழுத்தான ‘உலக வணிக அமைப்பின் வர்த்தக பொது ஒப்பந்தம் (World Trade Organization’s General Agreement on Trade in Services; சுருக்கமாக WTO-GATS] மோடி அரசு கையொப்பமிட்ட பின் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை இது என்பதையும், அடித்தள மக்கள் மீது வெறுப்பைக் கக்கும் ஒரு மதவாத-கார்பொரேட் அரசின் அறிக்கை இது என்பதையும் மனங்கொள்ளாமல் இதைப் புரிந்துகொள்ள இயலாது.”
பார்வையாளர்களுடன் கருத்துப் பரிமாற்றம்
திரையிடப்பட்ட ஆவணப்படத்தைப் பற்றி பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து நெகிழ்ச்சியடைந்தனர். தலித்கள் ,ஆதிவாசிகள் மீது காட்டப்படும் கல்வி புறக்கணிப்பும் அநீதியும் பாகுபாடும் கண்கலங்க வைத்து விட்டதாக தெரிவித்தனர்.
தனியார் கல்விச்சாலைகளையே பெரிதும் பயன்படுத்தும் நமதூர் மக்களுக்கு இப்படம் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும், அரசு பள்ளிகளின் இன்றைய அவல நிலைக்கு அவற்றை அடியோடு புறக்கணிக்கும் பெற்றோர்களும் ஓர் காரணமாக இருப்பதை மறுக்க இயலாது.
தம் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் பயிற்றுவிக்கும் சகோதரர் எஸ்.கே.சாலிஹ், தனது பட்டறிவுகளை பகிர்ந்துகொண்டமை பார்வையாளர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது. கல்விக்காக பல ஆயிரங்கள் செலவிடும் ஓர் நண்பனைப் பற்றியும், அரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலப் புலமையுடன் இருப்பதையும் எடுத்துக்காட்டுகளோடு விளக்கினார்.
கல்வி என்பது அறிவாளிகளை உருவாக்க வேண்டுமே தவிர, உலக சந்தையில் குமாஸ்தாக்களாக பணியாற்ற உதவும் திறனாளிகளை உருவாக்க அல்ல என்பது இந்நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.
இறுதியாக கஃப்ஃபாரா ஓதி நிகழ்ச்சி நிறைவடைந்தது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாக்கம் & படங்கள்:
சாளை பஷீர் & அ.ர.ஹபீப் இப்றாஹீம்
|