காயல்பட்டினத்தில் சிறந்த மாடித்தோட்டத்தை அமைப்போருக்கு “உணவே மருந்து” நிகழ்ச்சியில், கத்தர் கா.ந.மன்றம் & ஹாங்காங் பேரவை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, கத்தர் காயல் நல மன்றப் பிரதிநிதி எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
மாடித்தோட்ட பயிற்சி முகாம்
கத்தர் காயல் நல மன்றம் (KWAQ), கடந்த 07.02.2016 அன்று, மாடித்தோட்ட பயிற்சி முகாமை காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் வளாகத்தில் நடத்தியது. 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இம்முகாமை, மாடித்தோட்ட ஆய்வாளரும் - பயிற்றுநருமான ‘சிவகாசி’ ஏ.பாலாஜி அவர்கள் பங்கேற்று, சிறப்பு பயிற்சிகளை வழங்கினார்.
நகரில் புதியதோர் முயற்சியாக கருதப்பட்ட இந்த மாடித்தோட்ட பயிற்சி முகாம், ஆர்வத்தை தூண்டுவதாக இருந்தது என பங்கேற்றோரில் பலரும் பின்னூட்டங்கள் கூறினர்.
பரிசு அறிவிப்பு
முகாமில் பயன்பெற்றோர் பலர், தமது கட்டிடங்களின் மொட்டை மாடிகளிலும், காலியாக இருக்கும் சிறு இடங்களிலும் ஆர்வமுடன் தோட்டம் அமைத்து, விதைகளை விதைத்துப் பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சென்ற பிப்ரவரி மாதம் நடந்த அந்த பயிற்சி முகாமின்போது, அடுத்த ஆறு மாதங்களுக்குள் மாடித்தோட்டத்தை அமைத்துப் பராமரிப்போருள், சிறந்த தோட்ட அமைப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு மதிப்புமிக்க ஊக்கப் பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
விண்ணப்பங்கள் வரவேற்பு
அதன் அடிப்படையில், தகுதியுடையோர் தமது மாடித்தோட்டத்தை புகைப்படம் எடுத்து, 04.08.2016 வியாழக்கிழமைக்குள் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவிற்கு Watsapp செயலி மூலம் அனுப்புமாறும், தேர்ந்தெடுக்கப்படும் தோட்ட அமைப்பாளர்களுக்கான பரிசுகளை 07.08.2016 அன்று ‘உணவே மருந்து’ நிகழ்ச்சியின்போது வழங்கப்படும் என்றும் பிரசுரங்கள் மூலமாகவும், இணையதள செய்தியாகவும் தெரிவிக்கப்பட்டது.
தேர்வுக்குழு நேரில் ஆய்வு
இக்ராஃ கல்விச் சங்க ஆலோசகர் கே.எம்.டீ.சுலைமான், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங் (KUFHK) முன்னால் துணைத்தலைவர் பி.எஸ்.ஷாஹுல் ஹமீத் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழு உறுப்பினர் அ.ர.ஹபீப் இப்றாஹீம் ஆகியோர் அங்கம் வகித்த தேர்வுக்குழு, 06.08.2016 சனிக்கிழமையன்று, மாடித்தோட்டங்களை நேரில் சென்று ஆய்வு செய்தது.
பரப்பளவு, உழைப்பு மற்றும் பராமரிப்பு ஆகிய வரையறைகளின் அடிப்படையில் மாடித்தோட்டங்கள் மதிப்பீடு செய்யப்பட்டது.
”உணவே மருந்து” நிகழ்ச்சின்போது பரிசளிப்பு
மறுநாள் (07.08.2016), காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் வளாகத்தில் நடந்த ’உணவே மருந்து’ சிறப்புரை மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், நகரில் சிறந்த மாடித்தோட்டத்தை அமைத்துப் பராமரிப்போரின் பெயர்களை இக்ராஃ கல்வி சங்கத்தின் செயற்குழு உறுப்பினரான எம்.எம்.முஜாஹித் அலீ அறிவித்தார்.
இந்நிகழ்ச்சியை KWAQ, KUFHK மற்றும் காயல்பட்டினம் ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தின.
இதில், பிரபல இயற்கை உணவியல் வைத்தியர் ’சிவகாசி’ மாறன் G அவர்கள் சிறப்பு பேச்சாளராக பங்கேற்றார்.
முதல் பரிசு
சிறந்த மாடித்தோட்டம் அமைத்து பராமரிப்பவர்களில், முதலாம் இடத்தை மரைக்கார் பள்ளி தெருவைச் சார்ந்த எம்.ஏ.முஹம்மத் அலீ பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ருபாய் 1000 மதிப்புள்ள காசோலையை ’சிவகாசி’ மாறன் G அவர்கள் வழங்கினார்.
இரண்டாம் பரிசு
இரண்டாம் இடத்தை நெய்னார் தெருவைச் சார்ந்த எஸ்.ஏ.உம்மு உமைஸா பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ருபாய் 750 மதிப்புள்ள காசோலையை ’சிவகாசி’ ஆப்றஹாம் சவுந்தர் அவர்கள் வழங்கினார்.
மூன்றாம் பரிசு
மூன்றாம் இடத்தை மருத்துவர் தெருவைச் சார்ந்த அஹ்மத் முஹ்யித்தீன் பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ருபாய் 500 மதிப்புள்ள காசோலை வழங்கப்பட்டது.
ஆறுதல் பரிசு
நெய்னார் தெருவை சார்ந்த எச்.ஆர்.ஆயிஷா ஹுஸ்னாவுக்கு ஒருவருக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது. அவருக்கு ருபாய் 100 மதிப்புள்ள காசோலையை டாக்டர் பீ.ஏ.எம்.ஜாஃபர் ஸாதிக் அவர்கள் வழங்கினார்.
தேர்வுக்குழுவினரின் பாராட்டுக்கள்
மாடித்தோட்டங்கள் அனைத்தும் ஆர்வத்தை தூண்டும் வண்ணம் இருந்தது என அவைகளை நேரில் சென்று ஆய்வு செய்த தேர்வுக்குழுவினர் தெரிவித்தனர். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த மாடித்தோட்ட முகாம் நிச்சயம் ஒரு மற்றாத்திற்கான வழியை ஏற்படுத்தியுள்ளது எனவும், அம்முகாமின் பிரதிபலிப்பாகவே இத்தோட்டங்களை பார்ப்பதாகவும் அவர்கள் கூறினர்.
முதல் பரிசு பெற்ற எம்.ஏ.முஹம்மத் அலீ அவர்களின் மாடித்தோட்டத்தில், பலவகை காய்கறி மற்றும் மூலிகை செடிகளும் வளர்க்கப்படுகின்றன. அழகிய செடி முருங்கையும், கொத்துக் கொத்தாய் காய்த்து தொங்கும் கத்திரிக்காயும், பரப்பளவில் மிகப் பெரிதாக இருக்கும் இந்த தோட்டத்தின் கதாநாயகர்கள் ஆகும்.
சற்று சிறிதாகவே இருந்தாலும், இரண்டாம் பரிசு பெற்ற எஸ்.ஏ.உம்மு உமைஸா அவர்களின் மாடித்தோட்டம் ஓர் முன்மாதிரி மாடித்தோட்டமாக விளங்குகிறது. மாடித்தோட்ட ஆய்வாளரும் - பயிற்றுநருமான ‘சிவகாசி’ ஏ.பாலாஜி அவர்களின் அறிவுறுத்தலின் படி, முறையாக தோட்டம் அமைத்து, அமிர்த கரைசல் எனும் இயற்கை உரத்தை வீட்டிலேயே தயார் செய்து, செவ்வெனே பயன்படுத்துகிறார் இத்தோட்ட்த்திற்கு சொந்தக்காரர். தாம் மட்டும் பயன்பெற்றால் போதும் என்று நின்று விடாமல், நகர மக்களின் தேவைக்காக விதைகள், நாத்துகள், மண்புழு உரம் (vermi compost), தென்னை நார் கழிவு (coco peat) மற்றும் அமிர்த கரைசல் ஆகியவைகளை விற்பனையும் செய்கிறார்.
’உணவே மருந்து’ நிகழ்ச்சியின்போது, ‘UU மாடித்தோட்டம்’ எனும் பெயரில் இப்பொருட்களை சந்தைப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் பரிசு பெற்ற அஹ்மத் முஹ்யித்தீன் அவர்களின் மாடித்தோட்டத்தின் முத்தாய்ப்பே, தொட்டியில் வளரும் தர்பூசனி தான்! சமையலரைக் கழிவுகளையே உரமாக பயன்படுத்தி செடிகள் வளர்க்கப்படுவது இத்தோட்டத்தின் சிறப்பம்சமாகும்.
KWAQ தலைவரின் நன்றியுரை
நிகழ்ச்சியின்போது நன்றியுரை ஆற்றிய KWAQ தலைவர் எம்.என்.முஹம்மது யூனுஸ், தேர்வுக்குழுவில் இடம்பெற்ற கே.எம்.டீ.சுலைமான், பி.எஸ்.ஷாஹுல் ஹமீத் மற்றும் அ.ர.ஹபீப் இப்றாஹீம் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.
மாறன் G பெருமிதம்
”மாடித்தோட்ட முகாம் ஒன்றை நடத்தியதோடு நின்று விடாமல், அதற்குப் பின்னர், சிறப்பான முறையில் மாடித்தோட்டம் அமைத்தவர்களுக்கு பரிசளிப்பது என்பது யாரும் செய்யாத ஒன்று”, என்று ’சிவகாசி’ மாறன் G பெருமிதம் கொண்டார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
களத்தொகுப்பு, செய்தியாக்கம் & படங்கள்:
அ.ர.ஹபீப் இப்றாஹீம் |