காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில் ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி - மழலையரின் பல்சுவைப் போட்டிகளுடன் நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் பீ.எம்.ஐ.ஸஊத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
ஹாங்காங் நாட்டில், செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி (ஹிஜ்ரி 1437 துல்ஹஜ் பிறை 10 அன்று) திங்கட்கிழமையன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
அதனை முன்னிட்டு, நமதூர் மக்கள் அனைவரையும் ஒன்றாகக் காணச் செய்து, மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்வதற்காக, கடந்தாண்டுகளைப் போல இவ்வாண்டும் நமது காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில், பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பெருநாள் கொண்டாடப்பட்ட 12.9.2016 திங்கட்கிழமையன்று, ஹாங்காங் ஜோர்டனிலுள்ள இந்தியா கிளப்பில் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இரவு 7.30 மணியளவில் துவங்கிய நிகழ்ச்சியை இளவல் ஹசன் அஹ்மது கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். அமைப்பின் பொருளாளர் ஹாபிழ் பி.எஸ்.அஹ்மது ஸாலிஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினர்.
பேரவைத் தலைவர் ஹாபிழ். ஏ.எல். இர்ஷாத் அலி பேரவையின் செயல்பாடுகளை விளக்கி பேசினார். இது வரை உறுப்பினர்களாகதவர்கள் மற்றும் தமது உறுப்பினர் சந்தாக்களை செலுத்தாதவர்கள் செயற்குழு உறுப்பினர்களிடம் செலுத்தி தங்களை உறுப்பினர்களாக்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
அதனை தொடர்ந்து, பேரவையின் ஆலோசனைக்குழு மூத்த உறுப்பினர் ஜனாப் ஏ.எஸ்.ஜமால் என்ற ஜமால் மாமா தனக்கே உரித்தான நகைச்சுவையோடும், நல்லுபதேசமாகவும் பேசினார்.
இந்நிகழ்விற்க்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்ட இலங்கை காயல் நல மன்ற (காவாலங்கா) தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் மற்றும் ஏ.ஜே. செய்யது மரைக்கார் (லண்டன்) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கடந்தவருடம் போல், இவ்வாண்டும் குழந்தைகளுக்காக பல வண்ணங்களில், பல வகைகளில், பல வடிவங்களில் – பலூன்கள் அதற்கான சிறப்பு நிபுணரால் தயாரித்து வழங்கப்பட்டது. குழந்தைகள் விரும்பிய வண்ணங்களிலும், வடிவங்களிலும் பலூன்களை உடனுக்குடன் செய்து கொடுத்தது, அவர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. இந்த மகிழ்ச்சியை மழலையருக்கு அளிப்பதற்காகவென்றே இந்த ஏற்பாடு பேரவையின் சார்பில் கவனத்துடன் செய்யப்பட்டிருந்தது.
குழந்தைகளின் பல்சுவை நிகழ்ச்சிகளை ஹாஃபிழ் பி.எஸ். அஹமத் சாலிஹ் ஒருங்கிணைத்தார்.
இந்நிகழ்ச்சியில், பொதுநல நிதி சேகரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவரும் தாராளமாக நிதி வழங்கினர். நிறைவில், அமைப்பின் பொது நிதிக்காக ரூபாய் 28 ஆயிரம் தொகையும், ஜகாத் நிதிக்காக ரூபாய் 25 ஆயிரம் தொகையும் மற்றும் மகளிரிடமிருந்து வருடந்திர பங்களிப்பாக ரூபாய் 35 ஆயிரம் தொகையும், சேகரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், ஹாங்காங் மற்றும் சீனா வாழ் காயலர்கள் சுமார் 250 பேர் ஆர்வத்துடன் திரளாகக் கலந்துகொண்டனர்.
அனைவருக்கும் சுவையான தேநீர் மற்றும் தின்பண்டங்கள் பரிமாறப்பட்டன.
துணைத் தலைவர் எம்.எஸ். சதக் மீரான் நன்றி கூற, எம்.ஏ.கே. ருக்குனுதீன் சாஹிப் ஆலிம் அவர்களின் இறை வேண்டலுடன் நிகழ்ச்சிகள் யாவும் இனிதே நிறைவுற்றன. மொத்தத்தில், பெருநாளையடுத்த இரவுப் பொழுது அனைவருக்கும் இன்பமாகக் கழிந்தது. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|