ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றத்தின் காயலர் குடும்ப 40ஆவது சங்கம நிகழ்ச்சி – குதூகலம், கொண்டாட்டம், கொடையுடன் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த அவ்வமைப்பின் செய்தியறிக்கை:-
மழலையரின் திருமறை கிராஅத் ஒலிகள் ரீங்கரித்து வந்தன. ஸஃபா பூங்காவின் ரம்மியமான காலைப் பொழுதில் அன்றைய காற்றை நிரப்பியது காயல் இளவல்களின் காந்தக் குரல்கள். அருளாளனாம் அல்லாஹ்வின் அருள்மறை வசனங்களை வாஞ்சையோடு வாண்டுகள் ஓதினர்.
ஒருபுறம் காயலர்கள் குடும்பம் புடைசூழ வருகை தந்து கொண்டிருக்க, மறுபுறம் வரவேற்புக் குழுவினர் மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்தனர். வருவோரின் பெயர்களை ஏற்கனவே பதிவு செய்திருந்த பட்டியலில் சரி பார்த்து, அலைபேசி எண்களையும், மின்னஞ்சல் முகவரிகளையும் புதுப்பித்து, எண்களிட்ட அடையாளச் சீட்டு வழங்கும் பணி அவர்களுடையது.
சூடான சுண்டலை ஒரு கையிலும், சுவையான தேனீரை மறு கையிலும் வைத்துக்கொண்டு அடே மச்சான் சுகமாயீக்கிறியா, நீ எப்ப துபாய் வந்தா, இப்ப எங்க ஈக்கிறா, எந்த கம்பெனில வேல பார்க்குறா, குடும்பத்த கூட்டிட்டு வந்திக்கிறியா என்று 45 வயதுக்கு மேலுள்ள பெரிசுகள் பரஸ்பரம் குசலம் விசாரித்துக்கொண்டிருக்க, உங்களுக்கு எந்தத் தெரு, எங்க வொர்க் பண்றீங்க, எங்க ஸ்டே பண்றீங்க, உங்க கம்பெனி நிலவரம் எப்படி இருக்கு, உங்க ஜாப் பரவாயில்லையா என்று சிறுசுகள் நீண்ட நாள் கழித்து சந்திக்கும் தங்கள் நண்பர்களைக் கண்டு “டீசன்டாக” விசாரித்துக்கொண்டிருந்தனர்.
எல்லோர் மனதிலும் ஒருவித மகிழ்ச்சி. அது நீண்ட நாள் கழித்து சந்திக்கும் தங்கள் நண்பர்களினாலா... காயல் செல்வங்களை ஒரே இடத்தில் கண்டதினாலா... அந்த மகிழ்ச்சி முகத்தில் பிரதிபலித்தது. மலர்ந்த முகங்களும், அடர்ந்த அன்புகளும் கலந்தன.
கடந்த 31.03.2017 வெள்ளிக்கிழமை துபை ஸஃபா பூங்கா இப்படி களை கட்டியது. ஆம்! 40வது காயலர் சங்கமமல்லவா... களை கட்டாமல் என்ன செய்யும்?
மகிழ்ச்சிப் பரிமாற்றங்களின் இடையில் அவர்கள் பரஸ்பரம் ஜும்ஆ தொழுகைக்கு நேரம் ஆகிவிட்டது என்று நினைவூட்டவும் தவறவில்லை.
ஜும்ஆ தொழுகை முடிந்ததும் நிழல் தரும் மரங்களின் கீழ் நிகழ்ச்சி ஆரம்பமானது. நிகழ்ச்சிக்கு துபை காயல் நல மன்றத் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரீ தலைமை தாங்கினார். மன்றச் செயலாளர் யஹ்யா முஹ்யித்தீனின் அன்புப் புதல்வன் ஸுல்தான் ஸித்தீக் இறைமறை வசனங்களை ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். பின்னர் செயற்குழு உறுப்பினர் எம்.எஸ். அப்துல் ஹமீத் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தாயகத்திலிருந்து வருகை புரிந்த எல்கே மாமா மருமகன் ஹாஜி ஷம்சுத்தீன் அவர்களும், ஜனாப் செய்யது முஹம்மது அவர்களும், விளக்கு முஹம்மது முஹைதீன் அவர்களும் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள்.
மன்றத் தலைவரின் தலைமையுரையுடன் நிகழ்ச்சி சூடு பிடித்தது. அவர் தனது உரையில் கூறியதாவது:
இதில் நம்மை ஒன்றுகூட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். உறுப்பினர்கள், நண்பர்கள், வெகு நாட்களாக சந்திக்காத நண்பர்கள், விசிட்டிங்கில் வேலை தேடி வந்திருப்பவர்கள் இங்கே வந்து சந்தித்துக்கொள்வதில் மகிழ்ச்சி. இந்தக் கூட்டத்திற்காக அனைத்து உறுப்பினர்களுக்கும் வாட்ஸ்அப், மின்னஞ்சல், இணையதளம் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டது. தகவல் கிடைக்கப் பெறாமல் சிரமங்கள் ஏற்பட்டிருந்தால் தயைகூர்ந்து பொறுத்தருள வேண்டுகிறேன்.
வருடத்தில் நவம்பரிலும், மார்ச்சிலும் என்று இரண்டு பொதுக்கூட்டங்கள் நடத்துகிறோம். நவம்பர் மாதக் கூட்டத்தின் செலவுகளை மன்றம் பொறுப்பேற்றுக்கொள்கிறது. மார்ச் மாதக் கூட்டத்தின் செலவுகளை மன்ற உறுப்பினர்களின் பங்களிப்பிலிருந்து நடத்தி வருகிறோம். உறுப்பினர் சந்தாத் தொகையை நமதூர் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்துகிறோம்.
இவ்வாறு அவர் தனது தலைமையுரையில் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியை நிறைவு வரை நெறிப்படுத்தினார் மன்றச் செயலாளர் யஹ்யா முஹ்யித்தீன். இடையிடையே தனது இயல்பிலுள்ள நகைச்சுவைப் பாணியையும் வெளிப்படுத்தினார். பரிசுகளுக்கு அனுசரனை வழங்கிய நல்லுள்ளங்களை கூட்டத்தில் அறிமுகப்படுத்தி அவர்களுக்கு நன்றி நவின்றார்.
அனுசரனை வழங்கியோர்:
தங்க நாணயங்கள்:
1. ஜமீல் ஜுவல்லர்ஸ் (ஏ.ஜே. முஹம்மது அய்யூப்)
2. அரிஸ்டோ ஸ்டார் (ஜே.எஸ்.ஏ. புகாரீ)
3. ஹலி மேனேஜ்மென்ட் கன்சல்டன்ட்ஸ் (சாளை சலீம்)
4. முத்து தங்க மாளிகை (விளக்கு தாவூத் ஹாஜி)
பரிசுப் பொருட்கள்:
1. டோஷிபா எலிவேட்டர்ஸ் - 1000 திர்ஹம் (விஎஸ்எம் அபூபக்கர்)
2. காழி அலாவுத்தீன்
3. ரியாஸ்
4. எம்.யூ. ஷேக்
5. எஸ்.எல். காஜா
6. அப்துல் ஷுக்கூர்
7. தீபி
பின்னர் புதிய உறுப்பினர் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. ஊரிலிருந்து புதிதாக அமீரகத்தில் பணி புரிய வந்தவர்கள், விசிட் விசாவில் வந்து வேலை தேடிக்கொண்டிருப்பவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர்.
அத்தோடு சென்ற கூட்டத்தில் வேலை தேடி வந்து தற்பொழுது பணியில் அமர்ந்த சகோதரர்கள் முன்வந்து தங்களுக்கு வேலை கிடைத்த விவரத்தை அறிவித்தனர்.
பின்னர் மதிய விருந்து நடைபெற்றது. கமகமவென்று மணந்த பிரியாணியை மனநிறைவுடன் உண்டார்கள் காயலர்கள். கூடவே நாவைத் தித்திக்க வைக்கும் இனிப்பு வேறு.
பின்னர் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாயின. ‘குயிஸ் மாஸ்டர்’ எம்.யூ. ஷேக் அவர்கள் வினாடி வினா போட்டியை பல ரவுண்டுகள் ரவுண்டு கட்டி நடத்தினார்.
10 குழுக்கள் பிரிக்கப்பட்டு பரஸ்பரம் மோத விடப்பட்டன. இந்தக் கேள்விகளில் மார்க்க வினாக்களும் அடங்கியிருந்தது வினாடி வினா போட்டிக்கு சிறப்பு சேர்த்தது.
அஸ்ர் தொழுகை இடைவேளை. சூடான பருப்பு வடையும், சுவையான தேநீரும் மாலை மங்கிய வேளையில் இலேசாக மயங்கிய காயலர்களுக்கு அடுத்த ஓட்டத்திற்கான உத்வேகத்தை அளித்தன.
பின்னர் சாக்குப் போட்டி நடைபெற்றது. சாக்குப் போட்டியில் வெல்வது ஒரு புறம் இருக்கட்டும். தொபுகடீர் என்று கீழே விழுந்தவர்களைப் பார்த்து பரிதாப்படுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. நல்லவேளை... புல்தரையாதலால் மண்டை உடையவில்லை.
பெரிசுகளுக்கும், சிறுசுகளுக்குமான கயிறு இழுக்கும் போட்டியும் கனகச்சிதமாக நடைபெற்றது. அதாவது 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 40 வயதுக்குக் கீழே உள்ளவர்களுக்குமான போட்டி. இதில் விசேஷம் என்னவென்றால் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் சுற்றில் வென்றதுதான். வயதானாலும் வலு குறையவில்லை என்பதை இது பறை சாற்றிற்று.
இதற்கிடையில் குழந்தைகளுக்கான விதவிதமான வேடிக்கை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இவற்றை துணி உமர் அன்சாரீ அழகுற நடத்தித் தந்தார்.
பெண்கள் பகுதியில் பெண்களுக்கான வினாடி வினா போட்டியும், இன்னும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன. இனி அவரை ‘கேம் அங்கிள்’ என்று அழைக்கலாம்.
பெண்களுக்கு முத்தாய்ப்பாக நடந்தது ஒரு நிகழ்வு. “குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பது எப்படி?” என்ற தலைப்பில் ஓர் அருமையான உரை நிகழ்த்தப்பட்டு, அது குறித்து கலந்துரையாடலும் நடத்தப்பட்டது. நம் அருமைக் குழந்தைச் செல்வங்களை தாய்மார்கள் இனி நல்ல வார்த்தைகள் கூறி தவறுகளைத் திருத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் நிறைவுற்ற பின் பரிசு வழங்கல் ஆரம்பமாயிற்று. சென்ற வாரம் இதே துபையில் அடித்த மழையைப் பொய்ப்பித்தது அங்கே நடந்த பரிசு மழை. ஆம்! அது பரிசு மழைதான். எத்தனை பரிசுகள்!
குழந்தைகளுக்கான விதவிதமான பரிசுகள், பெரியவர்களுக்கான பலப்பல பரிசுகள் வழங்கப்பட்ட பின் அடுத்த மழை ஆரம்பமாயிற்று. அதுதான் தங்க மழை!
காலை 11 மணிக்கு வந்தவர்களுக்கு ஒரு தங்க நாணயமும், ஜும்ஆவுக்கு முன் வந்தவர்களுக்கு ஒரு தங்க நாணயமும், பின்னர் மொத்தமாக குலுக்கி ஒரு தங்க நாணயமும் என்று மூன்று குலுக்கல்கள் நடைபெற்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மூன்று தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன.
பின்னர் பெண்களுக்கென மொத்தமாக ஒரு குலுக்கல் நடைபெற்று தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு ஒரு தங்க நாணயம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் இறுதியாக நிகழ்ச்சி நெறியாளர் யஹ்யா முஹ்யித்தீன் நன்றியுரை நவின்றார். கூட்ட நிகழ்விடத்திற்கான ஏற்பாடுகளை எந்தக் குறையும் இல்லாமல் செய்து தந்தவர்கள், விருந்து உணவு ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகச் செய்தவர்கள், இந்தக் கூட்டத்தை நடத்துவதற்காக வாராவாரம் கூடிய செயற்குழு உறுப்பினர்கள், இங்கே சுழன்று சுழன்று பணியாற்றிய தன்னார்வத் தொண்டர்கள், இந்தக் கூட்டத்தை சிறப்பாக நடத்துவதற்கு அனுமதி தந்த ஸஃபா பூங்கா நிர்வாகத்தினர், வாகனங்களை மேற்பார்வை செய்த ஈசா, எங்கள் அழைப்பை ஏற்று அகமகிழ்ச்சியுடன் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அபூதாபி சகோதரர்கள், நிகழ்வுகள் அனைத்தையும் நீக்கமற நிழற்படங்கள் எடுத்து நீங்கா நினைவுகளை நிலைப்படுத்திய ஸுப்ஹான், கூட்டம் நடத்துவதற்கு பாய்கள், இன்னபிற பொருட்கள் தந்து உதவிய ஈடிஏ ‘டி’ பிளாக் நிர்வாகத்தினர், உறுப்பினர் சந்தா வசூல் செய்து தரும் முத்து ஃபரீத், முனவ்வர் மற்றும் முஸர்ரிஃப், உறுப்பினர்களின் பெயர்களைப் பதிவு செய்து, அவர்களது தொடர்புகளைப் புதுப்பித்த வரவேற்புக் குழுவைச் சார்ந்த சகோதரர்கள், அன்பளிப்புகளுக்கு அனுசரனை வழங்கியவர்கள் ஆகியோருக்கு அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
வழமை போன்று யாரையும் எதனையும் எதிர்பார்க்காமல் நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் முறைப்படுத்தி, பொறுப்பாளிகளை Follow up செய்து மொத்த நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கடுமையாக உழைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உறவுகள் பிரியும்பொழுது உள்ளபடியே கவலை வரும். சொந்தங்கள் பிரியும்பொழுது துக்கம் தொண்டையை அடைக்கும். அதே போன்று நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்து அந்தி சாயும் நேரத்தில் அனைவரும் பிரிய மனமின்றி பிரியா விடை பெற்று பிரிந்து சென்றனர்.
அனைத்து நிழற்படங்களையும் காண கீழே உள்ள இணைப்புகளைப் பார்வையிடவும்:
[பாகம் 1] [பாகம் 2]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & செய்தியாக்கம்:
M.S.அப்துல் ஹமீத்
படங்கள்:
சுப்ஹான் N.M.பீர் முஹம்மத்
|