தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (19.4.2017) தலைமைச் செயலகத்தில், தகவல் தொழில்நுட்பவியல் துறையின் சார்பில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் உருவாக்கியுள்ள கேபிள் டிவி சந்தாத் தொகை செலுத்துவதற்கான செல்பேசி செயலியினை (MOBILE APPLICATION) துவக்கி வைத்தார்.
இச்செயலியைப் பயன்படுத்தி தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய மாத சந்தாத் தொகையான ரூ.70/-ஐ சந்தாதாரர்கள் தங்களது செல்பேசியிலிருந்தே நேரடியாக இந்நிறுவனத்திற்கு செலுத்திவிடலாம். இதில் ரூ.20/-ஐ தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கணக்கில் வரவு வைத்துக்கொண்டு, மீதமுள்ள ரூ.50/-ஐ கேபிள் டிவி ஆபரேட்டரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
சந்தாதாரர்கள் இச்செயலியைப் பயன்படுத்தி பிரதி மாதம் 1-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை சந்தாத் தொகையை செலுத்தலாம். சந்தாத் தொகை செலுத்தியவர்களுக்கு, சந்தாத் தொகை பெறப்பட்டுவிட்டது என்ற தகவல் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். கேபிள் டிவி ஆபரேட்டர்கள், சந்தாதாரர்களிடம் விவரம் கோரினால், இக்குறுஞ்செய்தியை அவர்களிடம் காண்பிக்கலாம். 10-ஆம் தேதிக்கு மேல் சந்தாத் தொகையினை செலுத்த விரும்புவோர் கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் செலுத்த வேண்டும்.
இந்தச் செயலி ஆண்ட்ராய்டில் (ANDROID) இயங்கும் செல்பேசிகளில் செயல்படும். இந்த செல்பேசி செயலியைப் பொதுமக்கள் கூகுல் ப்ளே ஸ்டோரிலிருந்து (GOOGLE PLAY STORE) இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்த பிறகு சந்தாதாரர்கள் தங்களது சுய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். ஆதார் அட்டை உள்ள சந்தாதாரர்கள், ஆதார் அட்டை ணுசு கோடை ஸ்கேன் செய்ய வேண்டும்.
ஸ்கேன் செய்தவுடன் அவர்களது விவரங்கள் தெரிவிக்கப்படும். அந்த விவரங்கள் சரியாக உள்ளது என்று உறுதி செய்தால் அவர்களது செல்பேசிக்கு ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச் சொல் எண் (ONE TIME PASSWORD) அனுப்பப்படும். அந்த எண்ணை பதிவு செய்து உறுதி செய்தால், சுய விவரங்கள் பதிவு செய்யப்படும். ஆதார் அட்டை இல்லாதவர்கள் சுய விவரங்களான, முகவரி, செல்பேசி எண், மின்னஞ்சல், பாலினம் போன்ற விவரங்களை பதிவு செய்து, அந்த விவரங்கள் சரியாக உள்ளன என்று உறுதி செய்தால், இதற்கும் அவர்களது செல்பேசிக்கு ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச் சொல் எண் அனுப்பப்படும்.
அந்த எண்ணை பதிவு செய்து உறுதி செய்தால், சுய விவரங்கள் பதிவு செய்யப்பட்டுவிடும். பதிவு முடிந்த பின் கேபிள் டிவி ஆபரேட்டரைத் தெரிவு செய்வதற்கான பகுதியில் சந்தாதாரர்கள் தங்களின் கேபிள் டிவி ஆபரேட்டரைத் தெரிவு செய்ய வேண்டும். சந்தாதாரர்களின் விவரங்கள் இந்நிறுவனத்தால் உறுதி செய்யப்பட்ட பின், அவர்களுக்கு செல்பேசி மூலம் சந்தாத் தொகை செலுத்தலாம் என்ற தகவல் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அதன்பிறகு சந்தாதாரர்கள் அவர்களின் செல்பேசி மூலம் சந்தாத் தொகையை செலுத்தலாம்.
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், இ.ஆ.ப., தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மைச் செயலாளர் திரு.தா.கி.ராமச்சந்திரன், இ.ஆ.ப., தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
தகவல்:
இயக்குநர்,
செய்தி மக்கள் தொடர்புத் துறை,
சென்னை -9.
|