சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில், வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, ஆன்லைனில் விண்ணப்பித்து சேர்க்கை பெறலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்த தகவலறிக்கை:-
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்;வி உரிமைச் சட்டம் 2009, சட்டப்பிரிவு 12 (1) (சி)யின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சேர்க்கை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் பொருட்டு அரசால் ஏற்கனவெ வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு 2013-2014ஆம் கல்வியாண்டு முதல் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
சட்டத்தின் நோக்கம் முழுமையான நிறைவேறும் வகையிலும், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன்பெறும் வகையிலும், வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்யும் பொருட்டும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களுடன், கீழ்க் குறிப்பிடப்பட்டு வழிகாட்டுதல்களும் கூடுதலாக அரசால் வழங்கப்படுகிறது.
எதிர்வரும் 2017-2018ஆம் கல்வியாண்டிற்கு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 194 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிபள்ளிகளில் (மெட்ரிக் / மழைலையர் மற்றும் துவக்கப் பள்ளி) நுழைவு நிலை (எல்.கே.ஜி. / முதல் வகுப்பு) வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டின் கீழ் 3049 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான வசதி www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெற்றோர் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே இதற்கான விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பம் வெற்றிகரமாகப் பதிவேற்றம் செய்யப்பட்ட விபரம், பதிவு செய்யப்பட்ட பெற்றோரின் கைபேசி எண்ணிற்குக் குறுஞ்செய்தியாக அளிக்கப்படும்.
முதன்மைக் கல்வி அலுவலர் / மாவட்டக் கல்வி அலுவலர் / மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஆய்வாளர் / மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் / உதவிக் தொடக்கக் கல்வி அலுவலர் / வட்டார வள மையம் மேற்பார்வையாளர் ஆகியோரது அலுவலகங்களில் எவ்விதக் கட்டணமும் இல்லாம் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம்.
இந்த மாவட்டத்திலுள்ள அரசு இ-சேவை மையங்களைப் பதிவேற்றம் செய்வதற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்படின் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும்.
வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள ஆதரவற்றவர் / எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர் / மூன்றாம் பாலினத்தவர் / துப்புரவு தொழிலாளியின் குழந்தை / மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடமிருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்குக் குலுக்கள் நடத்துவதற்கு முன்னரே சேர்க்கை வழங்கப்படும்.
ஏப்ரல் 20ஆம் தேதி முதல் மே 18ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
மேற்காணும் வழிகாட்டுதலின்படி சமுதாயத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் சேரும் வாய்ப்பினைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|