ஸ்மார்ட் கார்ட் குடும்ப அட்டை பெற கைபேசி எண்ணை சரியான முறையில் பதிவு செய்திருப்பது அவசியம் என்றும், இதுவரை தமது கைபேசி எண்ணை வழங்காதவர்களும், தவறான எண்களை வழங்கியவர்களும், வேறு எண்ணுக்கு மாறி – பழைய எண்ணைக் கைவிட்டவர்களும், தமது தற்போதைய எண்ணை வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்று பதிவு செய்தால் மட்டுமே ஸ்மார்ட் கார்ட் குடும்ப அட்டை பெற இயலும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்த தகவலறிக்கை:-
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த 1ஆம் தேதி முதல் ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் (மின்னனு குடும்ப அட்டைகள்) வழங்கப்பட்டு வருகிறது.
மின்னனு அட்டை அச்சடித்து வரப்பெற்ற பின், நியாய விலைக்கடைகளில் இருந்து மின்னனு குடும்ப அட்டைகளை பெற்றுக்கொள்வதற்கான குறுஞ்செய்தி குடும்ப அட்டைகளுடன் இணைக்கப் பெற்ற கைபேசி எண்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இச்செய்தியில் உள்ள 8 இலக்க கடவுச்சொல்லை நியாய விலைக்கடையில் உள்ள விற்பனை முனைய இயந்திரத்தில் பதிவு செய்தால் மட்டுமே புதிய மின்னனு குடும்ப அட்டையை செயல்பாட்டிற்கு கொண்டு வர இயலும்.
எனவே, இதுவரை குடும்ப அட்டையில் கைபேசி எண்ணை பதிவு செய்யாமல் உள்ளவர்கள், கைபேசி எண்ணை தவறுதலாக பதிவு செய்தவர்கள் மற்றும் பழைய கைபேசி எண்ணை மாற்றம் செய்தவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களுக்குச் சென்று, வட்ட வழங்கல் பிரிவில் சரியான - தற்போது இயக்க நிலையில் உள்ள தங்களது கைபேசி எண் குறித்த விபரத்தை பதிவு செய்து கொள்க!
இவ்வாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
|