கோடை விடுமுறை நாட்களில் 10, 12ஆம் வகுப்புகளின் மாணவ-மாணவியருக்கு சிறப்பு வகுப்புகள் (Special classes) நடத்த வேண்டாம் என, காயல்பட்டினம் நகர பள்ளிக்கூடங்களுக்கு “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வேண்டுகோள் வைத்துள்ளது. இதுகுறித்த அவ்வமைப்பின் செய்தியறிக்கை:-
தமிழகத்தில் பள்ளிக்கூடங்களுக்கு - ஏப்ரல் 21 முதல் விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பக் காற்று வீசுவதால், ஏப்ரல் 30 முதல் கோடை விடுமுறை என இருந்த அறிவிப்பை மாற்றி, புதிய தேதியை தமிழக அரசு நேற்று அறிவித்தது.
கோடை விடுமுறையின் பெருவாரியான நாட்களில் - 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொது தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு - சிறப்பு வகுப்புகள் நடத்துவது - மாநிலம் முழுவதும் - பல்வேறு பள்ளிக்கூடங்களில் வழமையாக உள்ளது. காயல்பட்டினம் பள்ளிக்கூடங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
பொதுத் தேர்வுகளில் தேர்ச்சியைக் கருத்திற்கொண்டு நடத்தப்படும் இதுபோன்ற சிறப்பு வகுப்புகளுக்கு - சில பெற்றோரிடம் வரவேற்பு இருந்தாலும், சில பெற்றோர்கள் மத்தியில் - இதற்கு ஆதரவு இல்லை.
தட்பவெப்பம், ஓய்வில்லாத படிப்பு போன்றவற்றால் மாணவர்களின் உடல் ரீதியாக ஏற்பட வாய்ப்புள்ள பாதிப்புகளை கருத்திற்கொண்டு, எதிர்வரும் கோடை விடுமுறை நாட்களில், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டாம் என, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் - நகர பள்ளிக்கூடங்களுக்கு வேண்டுகோள் வைக்கிறது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஏப்ரல் 19, 2017; 1:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |