காயல்பட்டினம் கடற்கரைக்கு வரும் உள்ளூர், வெளியூர்களைச் சேர்ந்த பொதுமக்கள் தம்மிடம் சேரும் குப்பைகளைப் போட கைவசம் பை கொண்டு வருமாறு “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வேண்டுகோள் வைத்துள்ளது. இதுகுறித்த அவ்வமைப்பின் செய்தியறிக்கை:-
அன்புடையீர், இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!
நம் நாட்டின் புகழ்பெற்ற பெற்ற கடற்கரைகளுள் - தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கடற்கரையும் ஒன்று. இக்கடற்கரையைத் தூய்மையாக வைத்திட - கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகள் பல்வேறு அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் - கடந்த சில மாதங்களாக, காயல்பட்டினம் கடற்கரை மணற்பரப்பில் குப்பைகளைக் கொட்டாமல், காயல்பட்டினம் நகராட்சி ஏற்பாட்டில் - கடற்கரை நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டியில் அவற்றைக் கொட்டிட விழிப்புணர்வு பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறது.
பண்டிகை நாட்களில் கடற்கரைக்கு வரும் பொதுமக்களிடம், காகிதப் பைகளை வழங்கி, அதில் குப்பைகளைக் கொட்டி - வெளியே செல்லும்போது குப்பைத் தொட்டியில் அக்குப்பைகளை கொட்டிச் செல்ல, “நடப்பது என்ன?” குழுமம் சார்பில் விழிப்புணர்வு தொடர் பரப்புரை செய்யப்பட்டு வருகிறது.
இப்பரப்புரையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கில் சில முயற்சிகளை இறைவன் நாடினால் மேற்கொள்ள – “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் திட்டமிட்டுள்ளது.
முதற்கட்டமாக, காயல்பட்டினம் கடற்கரையின் நுழைவாயிலில், கடந்த பல ஆண்டுகளாக நிறுவப்பட்டிருந்த காவல்துறை விழிப்புணர்வு அறிவிப்பு பலகை புனரமைக்கப்பட்டு, புதிய விழிப்புணர்வு பரப்புரை வாசகங்களுடன் நேற்று மாலையில் (19.04.2017. புதன்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. தகவல் பலகைக்கு அனுசரணையளித்த காயல்பட்டினம் எல்.டீ.எஸ்.கோல்ட் ஹவுஸ் நிறுவுன அதிபர் எல்.டீ.சித்தீக் முன்னிலை வகித்தார்.
“நடப்பது என்ன?” குழும நிர்வாகிகளுள் ஒருவரான எம்.என்.அஹ்மத் ஸாஹிப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். எஸ்.கே.ஸாலிஹ், காயல்பட்டினம் கடற்கரையில் நகரின் பொதுநல அமைப்புகளால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை / தூய்மை விழிப்புணர்வு பரப்புரைப் பணிகள் குறித்த தகவல்களை உள்ளடக்கி அறிமுகவுரையாற்றினார்.
அறிவிப்பு பலகையைத் திறந்து வைத்து - ஆறுமுகநேரி காவல் நிலைய துணை ஆய்வாளர் பி.ஆதிலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.
தொடர்ந்து - ஆறுமுகநேரி காவல் நிலையத்தின் துணை ஆய்வாளர் கே.சுந்தர மகாலிங்கம் வாழ்த்துரை வழங்கினார். ஹாஃபிழ் எஃப்.ஷெய்க் ஸலாஹுத்தீன் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
அதன் தொடர்ச்சியாக, கடற்கரைக்குள் காவல்துறை அதிகாரிகளை அழைத்துச் சென்ற “நடப்பது என்ன?” குழுமத்தினர், கடற்கரையில் சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவதாக சந்தேகிக்கப்படும் பகுதிகளையும், அங்கு காவல்துறையால் மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வலியுறுத்தி வேண்டுகோள் வைத்தனர்.
ஏற்கனவே காயல்பட்டினம் கடற்கரையில் இரவு நேர ரோந்துப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும், மக்கள் நலன் கருதி தேவைப்படும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் காவல்துறை கண்டிப்பாகச் செய்யும் என்றும் அப்போது காவல் உதவி ஆய்வாளர்கள் குழுமத்தினரிடம் தெரிவித்தனர்.
சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வந்து காயல்பட்டினம் கடற்கரையைப் பயன்படுத்தும் அனைத்து மக்களிடமும் – கடற்கரை தூய்மை விழிப்புணர்வுப் பரப்புரையைத் தொடர்ந்து கொண்டு செல்லும் நோக்கில், சில நடவடிக்கைகளையும் இறைவன் நாடினால் “நடப்பது என்ன?” குழுமம் மேற்கொள்ளவுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஏப்ரல் 19, 2017; 6:45 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|