நிகழும் கோடை காலத்தில், பொதுமக்கள் கருப்பு உடைகளை அணிய வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். கோடை காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். தற்போது பருவமழை பொய்த்து விட்ட காரணத்தினாலும் ஆறு மற்றும் குளங்களில் தண்ணீர் இல்லாத காரணத்தினாலும் பொதுவாக வறண்ட வானிலை நிலவுகிறது. இதனால் வெப்பத்தின் அளவு இயல்பை விட அதிகமாக உள்ளது.
இந்த கோடை வெப்பத்தினால் பச்சிளம் குழந்தைகள், சிறு வயது குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் அதிக அளவில் பாதிப்படைய வாய்ப்புள்ளது.
கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும் பொழுது உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சீறுநீர் வெளியேற்றம், மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
இதை தவிர்க்க அதிக அளவு நீர் பருக வேண்டும். தாகம் இல்லையென்றாலும் போதிய அளவு நீர் பருக வேண்டும். சூடான பானங்கள் பருகுவதை தவிர்க்கவும். அதிக அளவில் மோர், இளநீர், எலுமிச்சை பழச்சாறு மற்றும் ORS உப்புக்கரைசல்; ஆகியவற்றை பருகவேண்டும். அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் போதிய அளவு ORS உப்புக்கரைசல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
கோடைக்காலத்தில் வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான தளர்ந்த பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். கருப்பு வண்ண ஆடைகள் அணிவதை தவிர்க்கவும். வெளியில் அதிமாக இருக்கும் நேரமான காலை 11.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் வெளியே வரும் பட்சத்தில் குடையை எடுத்து வர அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வெப்பம் அதிகமாக உள்ள திறந்த வெளியில் வேலை செய்யும் போது களைப்பு, மயக்கம், உடல் சோர்வு, தலைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவருக்கோ அல்லது ஆம்புலன்ஸ்கோ தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கூடுதல் தகவல்களுக்கு 104 என்ற எண்ணை அணுகவும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|