ஹாங்காங்கில் காயலர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டு வரும் காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் 9ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் இம்மாதம் 13ஆம் நாளன்று ஹாங்காங் கவ்லூன் மஸ்ஜித் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அவ்வமைப்பின் சார்பில் அதன் செயலாளர் பீ.எம்.ஐ.சஊத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
காயல்பட்டினம் ஐக்கிய பேரவை - ஹாங்காங் அமைப்பின் 9ஆம் ஆண்டு பொதுக்குழுக்கூட்டம் 13-05-2017 சனிக்கிழமையன்று மஃரிப் தொழுகைக்குப் பின் ஹாங்காங் கவ்லூன் மஸ்ஜித் சமுதாயக் கூடத்தில் நடைப்பெற்றது. கூட்ட நுழைவாயிலில் உறுப்பினர்கள் பெயர் பதிவு செய்யப்பட்டனர்.
கூட்டத்திற்கு ஜனாப் எம்.என். ஷேக் சலாஹுதீன், ஜனாப் ஏ.எஸ். ஜமால், ஜனாப் பி.எம்.எஸ்.முஹ்ஸின் மற்றும் காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் தலைவர் ஹாஃபிழ் ஏ.எல். முஹம்மது இர்ஷாத் அலி ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஜனாப் தைக்கா உபைதுல்லாஹ் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளை துவக்கி வைத்தார்.
அமைப்பின் பொருளாளர் ஹாஃபிழ் பி.எஸ். அஹ்மது சாலிஹ் அனைவரையும் வரவேற்று பேசியதோடு, கூட்ட நிகழ்வுகளை நெறிப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பேரவையின் கடந்த பொதுக்குழு கூட்ட நிகழ்வுகள் மற்றும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பேரவை செயலாளர் பி.எம்.ஐ. சவூத் பேசினார்.
வரவு – செலவு கணக்கறிக்கை:
அதன் பின்னர், நடப்பு பருவத்திற்கான வரவு-செலவு கணக்கறிக்கையை பேரவை பொருளாளர் ஹாஃபிழ் பி.எஸ். அஹ்மது சாலிஹ் சமர்ப்பிக்க கூட்டம் அதற்கு ஒருமனதாக ஒப்புதளித்தது.
KUF Hong Kong Garment and Tailoring அறிக்கை:
அதனைத் தொடர்ந்து, பேரவையின் தையல் தொழில் அமைப்பு KUF HONG KONG GARMENTS & TAILORINGயின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை பேரவை முன்னாள் தலைவர் ஏ.டபிள்யூ. கிலுர் முஹம்மது ஹல்லாஜ் சமர்ப்பித்தார்.
தொடர்ந்து, வரும் காலத்தில் பேரவையின் தொழில் அமைப்பினை வெற்றிகரமான நிறுவனமாக மாற்றிடுவது குறித்து உறுப்பினர்கள் கலந்தாலோசனைகளும், கருத்து பறிமாற்றமும் செய்து கொண்டனர்.
ஆண்டறிக்கை:
பின்னர் பேரவையின் 9ஆம் ஆண்டறிக்கையை, பேரவைத் தலைவர் ஹாஃபிழ் ஏ.எல். முஹம்மது இர்ஷாத் அலி சமர்ப்பித்தார். அந்த அறிக்கையிலிருந்து சில முக்கிய அம்சங்கள்:-
>>> தொழில் செய்திட திறமையிருந்தும் பொருளாதார நலிவு காரணமாக தொழில் செய்ய இயலாத நமதூர் மக்களிடமிருந்து தொழிற்கருவிகள் உதவி கோரி பெறப்பட்ட மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களின் உண்மை நிலை குறித்து ஆய்ந்தறியப்பட்டு, 19 பயனாளிகளுக்கு மொத்தம் 1.6 லட்சம் ரூபாய் செலவில் தொழிற்கருவிகள் வழங்கப்பட்டன.
>>> ஷிஃபா மூலம் மருத்துவ உதவி கோரி வரும் விண்ணப்பங்களுக்காக நம் அமைப்பின் மூலம் கடந்த ஓராண்டு காலத்தில் ரூ50,000 உதவித் தொகை வழங்கியது. உலக காயல் நல மன்றங்களின் உதவியுடன் ஷிஃபா அறக்கட்டளை துவங்கியுள்ள GENERIC MEDICAL STORE மக்கள் மருந்தகத்திற்கு நம் மன்றத்தின் பங்களிப்பாக ரூ50,000 அணுசரனை வழங்கியது.
>>> பேரவை, கத்தார் காயல் நல மன்றம் மற்றும் ஷிஃபா அமைப்புகளுடன் சேர்ந்து புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் புற்றுநோய் பரிசோதனை 9ஆவது இலவச முகாமை, 28, 29 ஜனவரி 2017ல் நமதூர் கே.எம்.டி. மருத்துவமனை வளாகத்தில் நடத்தியது.
>>> நமதூர் மக்களுக்காக நல்லமுறையில் கல்வி பணியாற்றி வரும் இக்ராஃ கல்விச் சங்கம் வழங்கும் 2016-17 ஆண்டுக்கான கல்வி உதவித்தொகைக்கு பேரவையின் பங்களிப்பாக ரூ50,000 அணுசரனை வழங்கியது.
>>> நகர்நலப் பணிகளை அதிகளவில் செய்திடுவதற்காக தேவையான நிதியாதாரத்தைத் திரட்டிட துவங்கப்பட்டுள்ள உறுப்பினர் உண்டியல் நிதி வசூல் திட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் இனைந்து உதவிகள் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
>>> நமது பேரவையால் செய்யப்பட்டு வரும் உதவித் திட்டங்களுக்கு தோள் கொடுக்கும் முகமாக, ஹாங்காங் வாழ் தாய்மார்கள் தமது மனப்பூர்வமாக அளித்து வரும் பங்களிப்பிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
அதன் பின்னர், அமைப்பின் துணைத் தலைவர் யூ. முஹம்மது நூஹு நன்றி கூறினார். நிறைவாக கவ்லூன் மஸ்ஜித் இமாம் மவ்லவி ஹாஃபிழ் எம்.ஏ.கே. ஷூஅய்ப் நூஹ் ஆலிம் மஹ்ழரி அவர்களின் இறை வேண்டுதலோடு நிகழ்ச்சி நிறைவுற்றது.
கூட்டத்தில் பேரவையின் உறுப்பினர்கள் திரளாகக் கலந்துக் கொண்டனர். பங்கேற்ற அனைவருக்கும் சுவையான காயல் கஞ்சி மற்றும் வடை வழங்கி உபசரிக்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |