காயல்பட்டினம் பப்பரப்பள்ளி பகுதியில் குப்பைகள் எரிக்கப்படுவதைத் தவிர்க்க காவலாளிகள் நியமிக்கப்படுவதாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் காவல்துறை புகாரைத் தொடர்ந்து காயல்பட்டினம் நகராட்சி வாக்குறுதியளித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பப்பரப்பள்ளி பகுதியில் பல ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு கொட்டப்படும் குப்பைகள் அண்மைக் காலமாக சமூக விரோதிகளால் எரிக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் மாசு மற்றும் உடல்நலக் கேடு குறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பாக - கடந்த பல மாதங்களாக - தொடர்புடைய அனைத்துத் துறைகளிடமும் தொடர்ந்து புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
குப்பைகளுக்குத் தீ வைப்பவர்கள் மீது காவல்நிலையத்தில் FIR பதிவு செய்ய - மாசு கட்டுப்பாட்டு வாரியம், கடந்த அக்டோபர் மாதம் - நகராட்சிக்கு அறிவுறுத்தியது. ஆனால், அதன்பிறகும் அவ்வப்போது தீ வைக்கப்படும் நிகழ்வுகள் தொடர்ந்தன; இருப்பினும் நகராட்சி தரப்பில் எந்த புகாரும், காவல் நிலையத்தில் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த மாதம், மூன்றாம் நாள் (ஏப்ரல் 03) முதல் தொடர்ந்து - தினமும் பப்பரப்பள்ளி குப்பைக் கிடங்கில் தீ வைக்கப்பட்டதையடுத்து, இணையதளம் வழியாகவும், காவல் நிலையத்திலும் – “நடப்பது என்ன?” குழுமம் சார்பாக புகார்கள் பதிவு செய்யப்பட்டன. மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஆறுமுகநேரி காவல்நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வதாக உறுதியளித்தனர். மேலும் - இணையவழி புகாரும், நேரடியாக வழங்கப்பட்ட புகாரும் ஒன்றென்பதால், இணையவழி புகார் திரும்பப் பெறப்பட்டது.
இவ்வாறிருக்க, ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் சிவலிங்கம் ஏற்பாட்டில் – “நடப்பது என்ன?” குழுமம் அங்கத்தினர், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் பொன்னம்பலம் உள்ளிட்ட அதிகாரிகளை, சில நாட்களுக்கு முன் சந்தித்தனர். ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் முன்பு நடந்த இச்சந்திப்பின்போது, குப்பைகள் இனி எரிக்கப்படாத வண்ணம் - பாதுகாவலர்கள் இரவு, பகலும் நியமனம் செய்யப்படுவர் - என காயல்பட்டினம் நகராட்சி தரப்பில் உறுதிமொழி வழங்கப்பட்டது.
இந்த வாக்குறுதியை, மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன?” குழுமம் வழங்கிய புகாருக்குக் கொடுக்கப்பட்டுள்ள பதிலில், காயல்பட்டினம் நகராட்சி உறுதியும் செய்துள்ளது. அதில்,
நகராட்சிக்கு உட்பட்ட பப்பரப்பள்ளியில் உரக்கிடங்கு அடிக்கடி தீப்பற்றி எரிகிறது. அது சமயம், தீயணைப்பு வண்டி மற்றும் நகராட்சியின் குடிநீர் வண்டி மூலம் அணைக்கப்பட்டு வருகிறது. தற்சமயம் தினமும் பாதுகாப்பு பணிக்கென தனியாக ஒரு நபர் பகல் மற்றும் இரவில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் அடிக்கடி, காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார் என்ற விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது
என பதில் வழங்கப்பட்டுள்ளது.
தனது ஆயுட்காலத்தைj; தாண்டி பயன்பாட்டில் உள்ள பப்பரப்பள்ளி குப்பைக் கிடங்கை மூடவேண்டும் என்ற கோரிக்கை, ‘நடப்பது என்ன?” குழுமம் சார்பாக வைக்கப்பட்டது. மேலும் விதிமுறைகள் தெரிவிப்பது போல், பப்பரப்பள்ளி கிடங்கை மூடுவதற்கான அறிவியல் பூர்வ (SCIENTIFIC CLOSURE) நடவடிக்கைகளைத் துவக்க - நகராட்சியிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது.
மேலும், தற்போது குப்பை கொட்டப்படும் இடத்தைச் சுற்றி சுற்றுச்சுவரை எழுப்பி, குப்பைக் கிடங்கு மூடப்பட்ட பிறகும் - சுற்றுச்சூழலில் அதன் தாக்கத்தை அடுத்த 15 ஆண்டுகளுக்குக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு நகராட்சிக்கு உண்டு என்பதும், ஆணையரிடம் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|