தனியார் பள்ளிகளில் அலவச கல்விக்கு விண்ணப்பிக்க. 26.05.2017. வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள தகவலை, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் பொதுமக்கள் நலன் கருதி வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
சிறாருக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (The Right of Children to Free and Compulsory Education (RTE) Act, 2009) - மத்திய அரசால் 2009ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு, 2010ஆம் ஆண்டு ஏப்ரல் 01 முதல் நடைமுறைக்கு வந்தது. இதுகுறித்த சட்ட விதிமுறைகளை (TAMIL NADU RIGHT OF CHILDREN TO FREE AND COMPULSORY EDUCATION RULES, 2011) - 2011ஆம் ஆண்டு, தமிழக அரசு வெளியிட்டிருந்தது.
இதன்படி - 6 வயது முதல் 14 வயது வரை உள்ள சிறாருக்கு, அரசு உதவி பெறும் / அரசு உதவி பெறாத தனியார் பள்ளிக்கூடங்களில் (சிறுபான்மை அந்தஸ்து பெற்ற பள்ளிக்கூடங்களைத் தவிர்த்து) [(Private Aided/Unaided, Non-Minority)] - 25 சதவீத இடம், எளிய குடும்பங்களை சார்ந்த மாணவர்களுக்கு - ஒதுக்கப்பட வேண்டும்.
இந்த ஒதுக்கீடு, அப்பள்ளியின் ஆரம்ப வகுப்புகளில் இருந்து துவங்கும் (LKG அல்லது 01ஆம் வகுப்பு). அவ்வாறு சேர்க்கப்படும் மாணவர்களிடம் இருந்து எந்த கட்டணமும் - பள்ளிக்கூடம் வாங்கக்கூடாது. அந்த மாணவர்களுக்கான கட்டணத்தை - அரசு, நேரடியாக - பள்ளிக்கூடங்களுக்கு வழங்கும்.
அரசு விதிமுறைகள்படி LKG முதல் இலவச கல்விபெற - காயல்பட்டினத்தில் 7 பள்ளிக்கூடங்களில் 92 இடங்கள் உள்ளன.
(1) அல்அமீன் மழலையர் & துவக்கப் பள்ளி (தேங்காபண்டக சாலை)
இலவச கல்விக்காக ஒதுக்கப்படவேண்டிய இடங்கள்: 8
(2) காட் நீதன் மழலையர் & துவக்கப் பள்ளி (திருவள்ளுவர் தெரு)
இலவச கல்விக்காக ஒதுக்கப்படவேண்டிய இடங்கள்: 8
(3) ஸ்ரீ சத்யா சாய் மழலையர் & துவக்கப் பள்ளி (லட்சுமிபுரம்)
இலவச கல்விக்காக ஒதுக்கப்படவேண்டிய இடங்கள்: 8
(4) சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி
இலவச கல்விக்காக ஒதுக்கப்படவேண்டிய இடங்கள்: 15
(5) முஹைதீன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி
இலவச கல்விக்காக ஒதுக்கப்படவேண்டிய இடங்கள்: 15
(6) எல்.கே. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி
இலவச கல்விக்காக ஒதுக்கப்படவேண்டிய இடங்கள்: 30
(7) ரஹ்மானியா நர்சரி மற்றும் துவக்கப்பள்ளி
இலவச கல்விக்காக ஒதுக்கப்படவேண்டிய இடங்கள்: 8
கடந்த பல ஆண்டுகளாக இத்திட்டம் நடைமுறையில் இருந்தாலும், இதுகுறித்த விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. மேலும் - பள்ளிக்கூடங்களும், இத்திட்டத்தின் கீழ் மாணவர்களை இணைப்பதில் - மெத்தனம் காட்டிவந்தனர்.
இதனைக் கருத்திற்கொண்டு - இவ்வாண்டு முதல், இப்பள்ளிக்கூடங்களில் இணைய விரும்பும் மாணவர்கள் - http://tnmatricschools.com/rte/rteapp.aspx?c=QfY$!z)A என்ற அரசு இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பிக்கலாம் என்ற தகவல் தெரிவிக்கப்படுகிறது.
விண்ணப்பம் செய்ய இறுதி நாள் மே 18 என அரசு அறிவித்திருந்தது. தற்போது அது மே 26 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009, சட்டப் பிரிவு 12 (1) (சி) ன் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25% இட ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சேர்க்க செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன்பொருட்டு அரசால் ஏற்கனவே வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு 2013-2014ம் கல்வியாண்டு முதல் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
சட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் வகையிலும், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன்பெறும் வகையிலும், வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் பொருட்டும் 2017-2018ம் கல்வியாண்டு முதல் 25% ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க அரசால் ஆணையிடப்பட்டது. இதற்கான வசதி www.dge.tn.gov.in(http://tnmatricschools.com/rte/rtehome.aspx என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 40000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இச்சேர்க்கைக்கு இணைய வழியாகவிண்ணப்பிக்க 20.04.2017 முதல் 18.05.2017 வரைகால அவகாசம் வழங்கப்பட்டது. வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன் பெறவேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு இவ்வகைச் சேர்க்கைக்கு இணைய வழியாக விண்ணப்பிப்பதற்கான காலவரையறை 26.05.2017 வரை நீட்டிக்கப்படுகிறது.
ஏற்கனவே தெரிவிக்கப்பட்டவாறு முதன்மைக் கல்வி அலுவலர் / மாவட்டக் கல்வி அலுவலர்/மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஆய்வாளர்/மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்/உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்/வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆகியோரது அலுவலகங்களில் எவ்விதக் கட்டணமும் இல்லாமல் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம். மேலும் மாநிலம் முழுவதும் உள்ள 10,000க்கும் மேற்பட்ட அரசு இ-சேவை மையங்களைப் பதிவேற்றம் செய்வதற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
மேற்காணும் வழிகாட்டுதலின்படி சமுதாயத்தில் நலிவடைந்த, வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்புப் பிரிவினரின் குழந்தைகள் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் சேரும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: மே 18, 2017; 2:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|