மே 26 வெள்ளிக்கிழமையன்று – ஹிஜ்ரீ 1438ஆம் ஆண்டின் ரமழான் முதல் நாள் என ஹிஜ்ரீ கமிட்டி அறிவித்துள்ளது. இதுகுறித்த அவ்வமைப்பின் செய்தியறிக்கை:-
"நாளை 26-05-2017 வெள்ளிக்கிழமை அன்று புனித ரமழான் மாதத்தின் முதல் நாள் ஆகும்"
ரமழான் மாதத்தைச் சரியாகத் துவங்குவதற்காக, அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் ஷஃபானுடைய பிறைகளை மனனம் செய்வார்கள். அந்த அளவுக்கு துல்லியமாகக் கவனித்து வருவார்கள்.
அபூதாவூது ஹதீஸ் கிரந்தத்தில் பதியப்பட்டுள்ள நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல் வழிமுறையைப் பேணியும், 2:189 அல்குர்ஆன் வசனத்தின் படியும் இவ்வாண்டின் ஷஃஅபான் மாதப்பிறைகள் அனைத்தையும் மிக கவனமாகப் பார்த்து வந்தோம். - அல்ஹம்துலில்லாஹ்.
இதன் அடிப்படையில் நேற்று 24-05-2017 புதன்கிழமை ஷஃபான் பிறை 28 ஆகும். அல்குர்ஆன் 36:39-வது வசனம் கூறும் 'உர்ஜூஃனில் கதீம்' பிறையை நேற்று புதன்கிழமை ஃபஜ்ர் நேரத்தில் பார்த்தோம்.
இன்று 25-05-2017 வியாழக்கிழமை ஷஃபான் பிறை 29, ஷஃபான் மாதத்தின் இறுதிநாள் ஆகும். இன்றுதான் புவிமையசங்கம (அமாவாசை) நாள். இன்று புறக்கண்களுக்கு பிறை எங்கும் தென்படவில்லை. உங்களுக்கு மறைக்கப்படும்போது மாதத்தை பூர்த்தியாக்குங்கள், கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் நமக்கு தெளிவாக விளக்கிய 'கும்ம'வுடைய நாளாகும்.
இவ்வாறு குர்ஆன், ஹதீஸ் போதனைகளின் படி அனைத்து பிறைகளையும் துல்லியமாகக் கவனித்தும், கணக்கிட்டும் வந்ததின் அடிப்படையில், இன்று 25-05-2017 வியாழக்கிழமையுடன் ஷஃபான் மாதம் பூர்த்தியாகிறது.
நாளை 26-05-2017 வெள்ளிக்கிழமை புனித ரமழான் மாதத்தின் முதல் நாள் ஆகும். வெள்ளிக்கிழமை அன்று நாம் அனைவரும் ரமழானின் முதல் நோன்பை நோற்றிருக்க வேண்டும்.
வல்ல அல்லாஹ் நம் யாவரையும் நேரான பாதையில் செலுத்தி, இந்த ரமழானுடைய பயன்களை முழுமையாக அடையும் பாக்கியவான்களாக ஆக்குவானாக.
சந்திர கணக்கீட்டை வலியுறுத்தும் அல்குர்ஆனின் சில வசனங்கள் : 2:189, 10:5, 55:5, 17:12, 9:36,37, 36:39,40, 6:96.
இப்படிக்கு
ஹிஜ்ரி கமிட்டி
99626 22000, 99524 14885.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
M.N.அஹ்மத் ஸாஹிப்
|