ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள – காயல்பட்டினத்தின் முதல் சட்டமன்ற உறுப்பினர் (கடையநல்லூர் தொகுதி) கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கருக்கு, துபை காயல் நல மன்றம் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அவ்வமைப்பின் செயலாளர் டீ.எஸ்.ஏ.யஹ்யா முஹ்யித்தீன் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
ஐக்கிய அரபு அமீரகங்களின் தலைநகர் அபுதாபியில், சென்ற 19/05/2017 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற, அமீரக காயிதெமில்லத் பேரவையின் வெள்ளிவிழா நிகழ்ச்சிக்கு, தாயகத்திலிருந்து சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு, அமீரகங்களின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்புரையாற்றிய நமதூரின் முதல் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ் நாடு இந்திய யூனியன் முஸ்லீம் லீகின் பொதுச்செயலாளருமான அல்ஹாஜ் KAM முஹம்மது அபூபக்கர் B Sc MLA வுக்கு, துபாய் காயல் நலமன்றம் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தியது.
இந்நிகழ்ச்சி, சென்ற 22/05/2017 திங்கள் கிழமை பின்னேரம் 8 மணியளவில் மன்றத்தின் தலைவர் அல்ஹாஜ் JSA புஹாரி இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மன்ற தலைவர் தலைமை தாங்கினார். முஹம்மது ஈஸா கிராஅத் ஓதினார். தலைமை உரைக்குப் பின்னர், தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள மன்றத்தின் தாயக பிரதிநிதி அல்ஹாஜ் ராவன்னா அபுல்ஹசன் சிறிது நேரம் உரையாற்றினார்.
தொடர்ந்து, வந்திருந்தவர்களின் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன. உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் முறையான பதில்களை அளித்தபின்னர், MLA ஏற்புரை நிகழ்த்தினார். தமது உரையில், இந்த நாட்டில் நம் ஊர் மக்களை பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சி அடைவதாகவும், தம்மை தேர்ந்தெடுத்த கடையநல்லூர் தொகுதி மக்களுக்கும், நமதூருக்கும் தம்மால் இயன்ற பணிகளை செய்துவருவதாகவும், இன்னும் அதிகம் செய்ய இருப்பதாகவும், தம்முடைய பதவி காலங்களில் தம்மை நன்முறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறும் வேண்டிக்கொண்டார்.
ஜனநாயக நாட்டில், தமது பணிகள் மதநல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்காது அமைந்து வருவதை ஒரு சில நிகழ்வுகளைக்கொண்டு மேற்கோள் காட்டினார்.
இக்கூட்டத்திற்கு மன்ற உறுப்பினர்கள் சுமார் 25 பேர் கலந்து சிறப்பித்தனர். அமீரகத்தின் வேலைநாளாக இருப்பதால், பலபேர் நிகழ்ச்சியில் பங்கு பெறமுடியாததை தெரிவித்தனர்.
சிறப்பு விருந்தினருக்கு மன்றத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தியும், நினைவுப்பரிசு வழங்கியும் மன்ற நிர்வாகிகள் கவுரவித்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|