சஊதி அரபிய்யா தம்மாம் காயல் நல மன்றம் & எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்புகள் இணைந்து, 06 முதல் 08ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவியருக்கான கைவினைப் பொருட்கள் உருவாக்கல் & கதை சொல்லல் பயிற்சி முகாம், 09.05.2017. அன்று நடத்தப்பட்டுள்ளது. இதில், காயல்பட்டினத்தின் அனைத்துப் பள்ளிகளைச் சேர்ந்த 46 மாணவியரும், குழந்தைகள் பலரும் பங்கேற்றனர். இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினரால் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-
காயல் நற்பணி மன்றம் – தம்மாம் & எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு இணைவில் பள்ளி மாணவியருக்கான கைவினைப் பொருட்கள் உருவாக்குதல் & கதைசொல்லல் முகாம், 09.05.2017 செவ்வாய்க்கிழமையன்று முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி வளாகத்தில், காலை 10:00 முதல் மாலை 05:15 வரை இறையருளால் சிறப்புற நடைபெற்றது.
காயல் நற்பணி மன்றம் – தம்மாம்
ஷிஃபா அறக்கட்டளை மூலம் மருத்துவ உதவிகள், இக்ராஃ கல்வி சங்கத்தின் ஒருங்கிணைப்பில் கல்விப் பணிகள் & உலக காயல் நல மன்றங்களின் இணைவில் மக்கள் மருந்தகம் என பல வகைகளிலும் நகர மக்களின் நல்வாழ்விற்கு பெரும் பங்காற்றி வருகிறது காயல் நற்பணி மன்றம் - தம்மாம்.
அவ்வகையில், முதன்முறையாக எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்புடன் கைக்கோர்த்து, இயற்கைக் கல்விப் பாதையில் மேற்கொண்ட ஒரு புதிய முயற்சியாகவே இந்நிகழ்வு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு
சமூகத்தின் பல்வேறு தளங்ளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் முனைப்போடு – நூலாய்வு, திரையிடல் & விவாத அரங்குகள் போன்ற நிகழ்வுகளின் மூலம், நம் மக்களிடம் புதிய, மாற்று சிந்தனையை கொண்டு செல்லும் முன்னோடி தளமாக எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு விளங்குகிறது.
பெரிதாக அறியப்படாத சிந்தனையாளர்கள் & ஆளுமைகளை அறிமுகம் செய்வதையும், ஆக்கப்பூர்வமான பல சமூக முன்னேற்ற முயற்சிகளை முன்னெடுத்து செல்லும் நோக்கோடும் செயல்பட்டு வரும் இம்மையத்தின் 17-வது நிகழ்வாக இந்த சிறப்பு முகாம் அமைந்தது.
நிகழ்ச்சி அறிவிப்பு
காயல்பட்டினம் அரசு மகளிர் மேனிலைப் பள்ளி, சுபைதா மகளிர் மேனிலைப் பள்ளி, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி, எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி & முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி ஆகிய கல்வி நிலையங்களில் 06 முதல் 08-ஆம் வகுப்பு வரை பயிலும் ஆர்வமுள்ள மாணவிகளை இனங்கண்டு - ஒரு பள்ளிக்கு தலா 10 மாணவிகள் வீதம் முகாமில் பங்கேற்கச் செய்யுமாறு, இப்பள்ளிகளின் நிர்வாகங்களுக்கு – நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் சார்பாக முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது.
அவ்வழைப்பை ஏற்று, ஐந்து பள்ளிகளிலிருந்தும் (இன்னும் இரண்டு தனியார் பள்ளிகளிருந்தும்), 46 மாணவிகள் நிகழ்வில் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர். காலை சுமார் 08:30 மணியளவில், மாணவியரின் பெயர் பதிவு தொடங்கியது.
நிகழ்விடம்
காயல்பட்டினத்தின் முன்னணி கல்வி நிலையங்களுள் ஒன்றான முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி வளாகத்தை நிகழ்விடமாக தேர்ந்தெடுத்து, நிகழ்ச்சிக்கான ஆயத்த பணிகளை துரிதமாக செய்தனர் முகாம் ஏற்பாட்டு குழுவினர்.
திரு. சன் அப்புவின் கைவண்ணத்தில், கோணிப் பைகளில் வடிவமைத்த இரு பதாகைகளும் நிகழ்விடத்தை அலங்கரித்தது.
நம்மிடம் வழமையாகிவிட்ட டிஜிட்டல் ஃபிளக்ஸ் / வினைல் பதாகைகளுக்கு பகரமாக பயன்பட்ட அவை, முகாமின் கருவோடு பொருந்தும் வகையில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.
நிகழ்முறை
நிகழ்ச்சியின் துவக்கமாக, எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பில் பயிலும் செல்வி. ஃபாத்திமா நிஸ்மா கிராஅத் ஓதிட, நிகழ்ச்சிக்கு வருகைதந்த அனைவரையும் எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஜனாப் சாளை பஷீர் ஆரிஃப் வரவேற்று உரையாற்றினார்.
இம்முகாமின் சிறப்பு பயிற்சியாளர்களாக பங்கேற்ற கேரள மாநிலத்தை சார்ந்த கைவினைப் பொருட்கள் கலைஞர் திரு சுபித், சென்னையை சார்ந்த கதைசொல்லி திரு சதீஷ் குமார் & காயல்பட்டினத்தை சார்ந்த ஆசிரியை அஜ்ஹரா ஆலிமா ஆகியோரை அவர் அறிமுகம் செய்துவைத்து, நிகழ்ச்சியின் நோக்கத்தையும் & பேண வேண்டிய நெறிமுறைகளையும் விளக்கினார்.
அதன் பின்னர், காயல் நற்பணி மன்றம் – தம்மாம் அமைப்பின் தலைவர் ஜனாப் ரஃபீக், அம்மன்றத்தின் செயல்பாடுகள் குறித்தும் இம்முகாமின் அவசியம் குறித்தும் சிற்றுரையாற்றினார்.
கைவினைப் பொருட்கள் உருவாக்குதல்
பயன்படாத பொருட்களை தூர வீசும் பண்பாடு கூடுதலாகி, அளவில்லா நுகர்வு மாயையில் சிக்கியிருக்கிறது இன்றைய நவீன சமூகம். கழிக்கப்பட்ட பொருட்களிலிருந்து பொம்மைகள் & விளையாட்டுப் பொருட்களை உண்டாக்கி மகிழ்வது, வீண் விரயத்தை மாத்திரம் தடுத்திடாமல் - குழந்தைகளுக்கு உன்னதமான படைப்புத் திறனையும் தருகிறது.
குழந்தைகளின் கற்றல் திறனை அறிந்து அதற்கேற்ப ஊக்குவிப்பதில்தான் ஒரு சிறந்த ஆசிரியர் உருவாகிறார். கற்றலை இலகுவான முறையில் குழந்தைகளிடம் சேர்க்கும் நுட்பமான பணியை கைவினைப்படுத்தல் செய்கின்றது.
இந்த எளிமையான கலையினால் குழந்தைகள் அடையும் நன்மைகள் ஏராளம். எதிர்கால கற்றலுக்கான ஒரு நிலையான அடித்தளத்தை கைவினைப்படுத்தல் வழங்குகிறது. நம்மால் ஒரு பொருளை உருவாக்கிட இயலும் என்பதை குழந்தைகளை உணர்வது, அவர்களுக்கு தன் மதிப்பையும் தன்னம்பிக்கையையும் கூடுதலாக்கச் செய்கிறது.
பயிற்சியாளர் திரு கே.எஸ். சுபித் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள வளாஞ்சேரியை சார்ந்தவர். புது தில்லியிலுள்ள இந்திய தொழில் நுட்பக் கழகத்தில் (Indian Institute of Technology – New Delhi) குடிசார் பொறியியல் / பொருள் வடிவமைப்பு (civil engineering / product designing) பயின்ற இவர், நம்மில் பெரும்பாலானோருக்கு பழகிவிட்ட - பொருளீட்ட மட்டுமே உதவும் - ஒரு இறுக்கமான அலுப்புத்தட்டும் வாழ்கை முறையை உதறி விட்டு, குழந்தைகளிடம் அன்பையும் அறத்தையும் வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
தமிழகம் & கேரளத்தில் பல நூறு பள்ளி மாணவர்களை இதுவரையிலும் சந்தித்து விட்ட திரு சுபித், பிரபல குழந்தை அறிவியலாளர் திரு அரவிந்த குப்தாவின் (www.arvindguptatoys.com) சீடர். குப்பைகளிலிருந்து பொம்மைகள் உண்டாக்கும் இப்பணியை, அஹிம்சா டாய்ஸ் (Ahimsa Toys; https://www.facebook.com/AhimsaToys/) எனும் பெயரில் முழு நேரப் பணியாக ஆறு வருடங்களாக செயலாற்றுகின்றார்.
இந்த நிகழ்ச்சியின் போது, பழைய குறு வட்டு (compact disc), காகிதம், பனிக் கூழ் கலன் (ice cream ball ), நாட்காட்டி, பந்துமுனை பேனா (ball point pen), கோலிக்காய், குப்பி மூடி, உடைந்த ஊதற்பை (balloon), நூல், ஈர்க்குச்சி & தென்னங்குரும்பை போன்றவற்றிலிருந்து பம்பரம், ஊதல், நடனமாடும் பொம்மை, கவட்டை, சீறும் பாம்பு, மீன், சுழல் துண்டு & மந்திர விசிறி என விதவிதமாக மாணவிகளுக்கு செய்து காட்டி, அவர்களையும் செய்ய வைத்தார் திரு சுபித்.
அத்துடன் நெகிழி பயன்பாட்டை குறைப்பது பற்றியும், நெகிழியினால் செய்த பொருட்களை பயன்படுத்தி விட்டு எறிவதில் - பூமிக்கும் நமக்கும் கேடு உண்டாவதையும் & பழைய நெகிழி பொருட்களை மறு சுழற்சி முறையில் பயன்படுத்தி பொம்மைகள் உள்ளிட்ட பொருட்களை செய்வது இந்த கேட்டைக்குறைக்கும் என்றும் வலியுறுத்தினார் திரு சுபித்.
உள்ளூர் கலைஞரின் கண்காட்சி
ஜுஹைஃபா அணிகலன் ஆயத்த பயிலகம் (Juhaifa Jewel Making Institute) என்ற பெயரில் காயல்பட்டினம் தைக்காத் தெருவைச் சார்ந்த சகோதரி சித்தி ஹாஜரா முஹம்மது ஸுல்தான் கடந்த எட்டு வருடங்களாக கைவினைத்துறையில் ஈடுபட்டு வருகின்றார்.
படிகம், நூல் & காகிதம் போன்ற மூலப்பொருட்களில் பொருட்கள் உண்டுபண்ணுதல்; துணி அச்சு; நகை ஆயத்தம் & சுடுமண் அணிகலன் போன்றவற்றை அரசு, தனியார் துறைகளுக்கும் & கல்வி நிறுவனங்களுக்கும் சென்று கற்பிக்கின்றார். நமது ஒரு நாள் முகாமில், அவர் தனது ஆயத்த அணிகலன்களை காட்சிப்படுத்தியிருந்தார்.
கதைசொல்லல்
மொழி, மதம், இனம் & பாலினம் என அனைத்தையும் கடந்து - குழந்தைகளிடம் கதைகளுக்கு என்றுமே ஒரு உள்ளார்ந்த ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. அவர்களின் சிறிய உலகில் கதைகள் அதிசயத்தை உருவாக்குகின்றன. அவை வாழ்க்கையைப் பற்றியும், சக மனிதர்களைப் பற்றியும் & பிற உயிரினங்களைப் பற்றியும் அவர்களுக்கு கற்பிக்கின்றன. கற்பனை, மதிப்பு & பொறுத்தல் ஆகியவற்றை சிறார்கள் வளர்த்துக் கொள்வதற்கான ஒரு எளிதான கருவிகளாய் அவை விளங்குகின்றன.
மனப்பாடம் எனும் குறுகிய வட்டத்திற்குள் இன்று கல்வி சுருங்கிவிட்டது. குழந்தைகளின் அறிவுத் தேடலுக்கு தீனிப் போடுவதை விடுத்து, வெறுமனே தகவல்கள் மட்டுமே திணிக்கப்படுகின்றன.
உள்ளார்ந்த புரிதலுக்கு இடமளிக்காத இன்றைய கல்வி சூழலில், பொறுத்திருந்து கவனிக்கக் கற்றுத் தருவதுதான் கதைசொல்லுதல் எனும் அற்புதக் கலை. அதனை உள்வாங்கும் பொழுது, பிற விஷயங்களையும் சிரமமின்றி குழந்தைகள் உணரத் தொடங்குவர்.
பயிற்சியாளர் திரு சதீஷ் குமாரின் பிறந்தகம் திருப்பூர் ஆகும். ஒரு முழு நேர கதை சொல்லி & நாடக நடிகரான இவர், தற்சமயம் சென்னையில் வசித்து வருகிறார். குழந்தைகளுக்கான நாடகப் பயிற்சியாளராக பல வருடங்களாக செயல்பட்டு வருகின்றார்.
மலைவாசிகள், பழங்குடியினர், நரிக் குறவர்கள் & பூம் பூம் மாட்டுக்காரர்களின் குழந்தைகளிடம் சிறப்புற பணியாற்றி வரும் ’களிமண் விரல்கள்’ எனும் சேவை தளத்திலும், தனது பங்களிப்பை ஆற்றி வருகின்றார்.
இந்த முகாமின்போது, திரு சதீஷ் இரு வேறு கதைகளை மாணவிகளுக்கு கூறினார். கோமாளியைப் போன்று வேடமிட்டு, குழந்தைகளை அவர் அணுகிய விதம் சுவையாக இருந்தது.
முதியவர்களின் மீதான அன்பு & மதிப்பு, வாழையடி வாழையாக கொண்டு செல்ல வேண்டிய அவர்களின் பட்டறிவு & வறுமையின்போதும் பிறருக்கும் பகிர்ந்து உண்ணுதல் ஆகியவற்றை அழகுற கூறும் ’டோராவும் பாட்டியும்’ தான் அவரின் இரு கதைகளுள் ஒன்றாகும்.
அவர் சொன்ன மற்றொரு கதையோ, உழைத்து வாழ்தலின் அருமை & பிறரை ஏமாற்றி பிழைக்காதிருத்தல் ஆகிய போதனைகளை உள்ளடக்கிய ’விட்டல பட்டர்’ ஆகும்.
கதைகளோடு நின்றுவிடாமல், செய்தித்தாள்களை பயன்படுத்தி எட்டு விதமான தொப்பிகளை உண்டாக்கும் பயிற்சியை மாணவியருக்கு வழங்கினார். கூடவே, பல்வேறு வேடிக்கை விளையாட்டுகளையும் நடத்தி பங்கேற்பாளர்களை மகிழ்ச்சியில் திளைக்கச்செய்தார்.
இஸ்லாமிய கதைசொல்லல்
பண்பாடுகளை ஒன்றிணைக்கவும் & பண்பாட்டு இடைவெளியை கடந்து பாலம் அமைக்கவும் கதைகள் வழிகளை திறக்கின்றன. ஒரே கதையாக இருந்தாலும், ஒவ்வொரு பண்பாட்டிற்கு ஏற்றவாறு அதனை வடிவமைத்துச் சொல்வதே மக்களின் இயல்பு. ஒவ்வொரு பண்பாடும் தனித்தன்மை கொண்டவை. அதிலும் காயலர்களின் நாகரீகமோ, தமிழ் & அரபிய்ய பண்பாடுகளின் அழகிய கலவையாக விளங்குகிறது.
இம்முகாமின் கதைசொல்லல் நிகழ்வின் ஒரு அங்கமாக, இஸ்லாமிய கதைசொல்லல் நிகழ்வு இடம்பெற்றது. இஸ்லாமிய கதைகளம் & முஸ்லிம் கதாப்பாத்திரங்களின் மூலம், உலகப் புகழ் பெற்ற சிண்டெரெல்லா (Cinderella) கதையை சிறார்களின் கண் முன்னே கொண்டு வந்தார் ஆசிரியை அஜ்ஹரா ஆலிமா.
’நூர் – ஒரு முஸ்லிம் சிண்டெரெல்லா’ (Noor – A Muslim Cinderella) என்பதே அவர் சொன்ன புனைவின் தலைப்பு. உஸ்பெகிஸ்தான் நாட்டின் பண்டைய சமர்கந்து நகரே கதைகளம். இறையச்சம், பிறரிடத்தில் அன்பு செலுத்துதல், பிரார்த்தனையின் வலிமை, இறைவனின் அருள், துன்ப நேரங்களில் பொறுமையாக இருத்தல் & இயற்கையை சுவைத்தல் என பல நற்போதனைகளை அவர் சொன்ன கதை வழங்கிற்று.
காயல்பட்டினம் மொகுதூம் தெருவை சார்ந்த ஆசிரியை அஜ்ஹரா ஒரு சிறந்த பேச்சாளர். சென்னை பல்கலைக்கழகத்தில் அஃப்ஸலுல் உலமா பட்டயம் பெற்றுள்ள இவர், சுமார் 20 ஆண்டுகளாக ஆயிஷா சித்தீக்கா மதரஸாவில் ஆசிரியையாக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதிய உணவு & சிறுகுடி / கடி
காலை வேளையில் மோர் & சுண்டல், மாலை நேரத்தில் கருப்பட்டி காப்பி & வேர்க்கடலை ஆகிய இயற்கையான உணவு வகைகள் சிறுகுடி/கடி-யாக நிகழ்வின்போது வழங்கப்பட்டது.
எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுள் ஒருவரான ஜனாப் ஃபழ்ல் இஸ்மாயீல் அவர்களின் வீட்டிலேயே சுண்டல், கருப்பட்டி காப்பி & வேர்க்கடலையை உண்டாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மதிய / தொழுகை இடைவேளையின்போது, திருச்செந்தூர் மணி அய்யர் உணவகத்திலிருந்து தருவிக்கப்பட்ட மரக்கறி உணவு மாணவியருக்கு பரிமாறப்பட்டது. கோடை வெப்பத்திற்கு குளிர்ச்சியாக இருந்த அந்த சாப்பாட்டில், முட்டைக்கோஸ் பொரியல், சுரைக்காய் கூட்டு, கீரை கடைசல், சாம்பார், வத்தக்குழம்பு, ரசம், மோர், பாயாசம், அப்பளம் & ஊறுகாய் ஆகியன இடம்பெற்றன.
நெகிழி தட்டுகளுக்கு பகரமாக, பாக்கு மட்டைகளில் பரிமாறப்பட்ட அந்த சுவையான உணவினை – அனைவரும் விரும்பி உட்கொண்டனர்.
பரிசளிப்பு விழா
நிறைவு நிகழ்ச்சிகளில் துவக்கமாக, எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விளக்கிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஜனாப் சாளை பஷீர் ஆரிஃப், இவ்வமைப்பு குழந்தைகளுக்காக நடத்தும் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
நல்ல புத்தகங்களை விட குழந்தைகளுக்கு சிறந்த பரிசுகள் வேறென்ன இருக்க முடியும்? சாகித்ய அகெடமி, தேசிய புத்தக கழகம் & பாரதி புத்தகலாயம் ஆகிய நிறுவனங்களிலிருந்து, நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினரால் வாங்கப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு நூல்கள் - முகாமில் பங்கேற்றவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது.
அவற்றுள், திரு எஸ் சுஜாதாவின் ’விலங்குகளின் விசித்திர உலகம்’, திரு இரா. நடராஜனின் ’ஆயிஷா ’, திரு தோப்பில் முஹம்மது மீரானின் ’ஹுஸ்னுல் ஜமால்’, திருமதி டி.சுஜாதா தேவியின் ’சிறகடிக்க ஆசை (சிறுவர் கதைகள்) ’ & திருமதி டெட்சுகோ குரோயாநாகியின் ’டோட்டோ-சான் (ஜன்னலில் ஒரு சிறுமி)’ ஆகியன இடம்பெற்றிருந்தன.
கோடை விடுமுறையாக இருந்தபோதிலும், நிகழ்ச்சியில் ஆர்வமாக பங்கேற்ற மாணவியருக்கு, புத்தகங்களோடு நற்சான்றிதழும் வழங்கப்பட்டது. முகாமின் கருவோடு பொருந்தும் வகையில், இப்பரிசுகளை துணிப் பைகளில் வழங்கியது அதன் சிறப்பம்சங்களில் ஒன்றாக அமைந்தது.
பரிசுகளை பயிற்சியாளர்கள் திரு சுபித் & திரு சதீஷ் குமார்; காயல் நற்பணி மன்றம் – தம்மாம் அமைப்பின் துணைத்தலைவர் ஜனாப் ஜியாவுதீன், எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஜனாப் சாளை பஷீர் ஆரிஃப், ஜனாப் ஃபழ்ல் இஸ்மாயீல் & ஜனாப் எஸ்.கே. ஸாலிஹ்; & தன்னார்வலர் இயற்கை விவசாயி (48) இப்றாஹீம் ஆகியோர் வழங்கினர்.
நன்றி நவிலல் & கருத்துக் கேட்பு
எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஜனாப் எஸ்.கே. ஸாலிஹ் நன்றியுரையாற்றினார்.
இம்முகாம் வெற்றிகரமாக நடைபெற்றிட அருள் புரிந்த எல்லாம் வல்ல இறைவனுக்கும், இந்நிகழ்விற்காக உழைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும், நிகழ்விடம் தந்து உதவிய முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி நிர்வாகிகளுக்கும், ஆர்வத்தோடு பங்கேற்ற மாணவிகளுக்கும், அவர்களை அனுப்பிய பள்ளிகளின் நிர்வாகிகளுக்கும் & பெற்றோர்களுக்கும், தன்னார்வலர்களாக பங்கேற்று மாணவிகளை ஒழுங்குப்படுத்திய அனைத்து பள்ளி ஆசிரியைகளுக்கும் (துளிர் சிறப்பு பள்ளி உட்பட) & நிகழ்ச்சியை சிறப்பித்து வைத்த மூன்று பயிற்சியாளர்களுக்கும் இரு அமைப்புகளின் சார்பாக இதயப்பூர்வ நன்றியினை உரித்தாக்கினார்.
இறுதியாக, துஆ கஃப்பாராவுடன் முகாம் இனிதே நிறைவுற்றது.
ஐந்து எளிய கேள்விகளைக் கொண்ட ஒரு படிவம் மாணவியரிடம் கொடுக்கப்பட்டு, நிகழ்ச்சி குறித்த கருத்துகள் கேட்கப்பட்டது. அதில் உடன்பாடான பதிவுகளே இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முகாமின் வெற்றிக் கேடயம்
அழைப்பிதழ் சடங்குகளுக்குள் அகப்படாத சில விருந்தாளிகள் வந்திருந்தனர். அவர்கள்தான் முகாமிற்கு வந்த பெற்றோருடன் ஒட்டிக் கொண்டிருந்த சின்னஞ்சிறு பார்வையாளர்கள். அவர்களுக்கு எந்த தளைகளுமில்லை. நிகழ்ச்சி முடியும் வரை பயிற்சியாளர்களை சுற்றி வளையமைத்து அந்த சிறிசுகள் மொய்த்துக் கொண்டிருந்த காட்சிதான் முகாமின் வெற்றிக்கேடயம்.
தேனீக்களாலும் புள்ளினங்களாலும் உறிஞ்சப்படுவதற்காக காத்திருக்கும் மலரின் தேன் துளிகள் போல, முகாமின் மைய இலக்கை அனிச்சையாக மனிதப்பிஞ்சுகள் கண்டடைந்த அந்த மகத்தான பெருங்காலத்துளிகள்தான் - மொத்த முகாமின் நேரத்திலும் மிக பெறுமதியானவை.
“உலகமே நீ குழந்தையாகி விடு” என்ற மந்திரக்கோல் அசைவிற்கு பின்னாலுள்ள ஆற்றல் மிகுந்த சொற்கணங்கள் அவை.
முகாமில் பங்கேற்ற சிறுமியர் பலரும், முகாம் முடிந்து சில நாட்களான பின்பும் - இன்றளவும் அதனை அசைபோட்டு வருகின்றனர் எனும் பெற்றோர்களின் பின்னூட்டங்கள்தான், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கிடைத்த மகத்தான சன்மானம்.
இதுபோன்று பல்வேறு இயற்கை கல்வி சார்ந்த முகாம்களை, இவ்விரு அமைப்புகளின் இணைவில் வருங்காலங்களிலும் நம் நகரில் சிறப்புற நடத்திட பிரபஞ்சங்களின் நாதன் மகா இயக்குனனான அந்த வல்லோன் முதல்வோன் உதவிபுரிவானாக. ! ஆமீன்!!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒளிப்படங்கள்:
எஸ்.கே. ஸாலிஹ், ஃபழ்ல் இஸ்மாயீல், சாளை ஜியாவுத்தீன் & சாளை பஷீர் ஆரிஃப்
செய்தியாக்கம்:
அ.ர.ஹபீப் இப்றாஹீம் & சாளை பஷீர் ஆரிஃப்
|