காயல்பட்டினம் கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள குருசடிக்கு அணுகுசாலை அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்திட – தொடர்புடைய அதிகாரிகளுக்கு “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் மனு அளித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் கடற்கரையோரம் - பல்வேறு சட்டங்கள், அரசாணைகள், நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராக - குருசடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான பிரச்சனை நிலுவையில் இருக்கும்போதே சட்டத்திற்குப் புறம்பாக, அரசு நிலத்தில் குருசடிக்கு அணுகுசாலை அமைக்கப்பட்டு வருகிறது. சட்டவிரோதமாக நடைபெறும் இப்பணிகளை - “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகிகள் – 24.05.2017. புதன்கிழமையன்று அதிகாலையில் நேரில் கண்டனர். இச்சாலைக்கு எந்தத் துறை அனுமதி வழங்கியது என்ற தெளிவு இல்லை.
CRZ விதிமுறைகளை மீறி அமைக்கப்படும் இந்த சாலைப்பணிகளை தடுத்து நிறுத்த கோரி, நடப்பது என்ன? குழுமம் சார்பாக -
மத்திய சுற்றுச்சூழல் துறை செயலர், தமிழக அரசின் தலைமை செயலர், மாநில சுற்றுச்சூழல் துறை அரசு செயலர், மாநில கடலோரப்பகுதிகளின் மேலாணமை அமைப்பின் செயலர், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர், அதன் தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு மனு வழங்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை நேரடியாக பெற்றுக்கொண்ட காயல்பட்டினம் நநகராட்சியின் ஆணையர், இது தொடர்பான அறிக்கையை - நகராட்சியின் பணிமேற்பார்வையாளர் மூலம் பெற்று, உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்
இவண்,
நிர்வாகிகள்,
*நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.*
[பதிவு: மே 24, 2017; 4:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |