திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமி, உடல் நலக்குறைவால், சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இன்று காலையில் காலமானார். அவருக்கு வயது 78.
அவரது உடலுக்கு திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின், மு.கருணாநிதியின் துணைவி ராசாத்தி அம்மாள், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்களும், காயல்பட்டினத்தைச் சேர்ந்த – திமுக மாநில பொதுக்குழு முன்னாள் உறுப்பினர் எஸ்.ஐ.காதர், மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.எம்.ஷாஹுல் ஹமீத் ஆகியோரும், காயல்பட்டினம் நகர திமுக நிர்வாகிகளும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல், அவரது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
திமுகவின் தூத்துக்குடி மாவட்ட செயலாளரக கடந்த 30 ஆண்டுகளாக பொறுப்பில் இருந்த என்.பெரியசாமி, கருணாநிதியால் 'முரட்டு பக்தர்' என்று செல்லமாக அழைக்கப்பட்டவர். இவர் மிசா சட்டத்தின் கீழ் சிறையில் இருந்தார்.
ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டம் தனியாகப் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1986ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட திமுக செயலராக நியமிக்கப்பட்டார் என். பெரியசாமி. இதையடுத்து, அப்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி நகர்மன்றத் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1989இல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராகக் களமிறங்கிய அவர், அப்போது அதிமுகவில் ஜெயலலிதா அணி, ஜானகி அணி என இரு பிரிவுகள் இருந்ததால், எளிதில் வெற்றி பெற்றார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் (1991) நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, அதிமுக வேட்பாளர் வி.பீ.ஆர்.ரமேஷ் இடம் வெற்றிவாய்ப்பை இழந்தார்.
1996இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், திமுக வேட்பாளராகக் களமிறங்கி, 56 ஆயிரம் வாக்குகள் வேறுபாட்டில் வெற்றிபெற்றார்.
அக்காலகட்டத்தில், தனது மகளான கீதா ஜீவனை கட்சிக்கு அறிமுகப்படுத்திய என். பெரியசாமி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பதவியை மகளுக்குப் பெற்றுக் கொடுத்தார். 2001 பேரவைத் தேர்தலில் நான்காவது முறையாக களமிறங்கிய என். பெரியசாமி, அப்போதையை அதிமுக வேட்பாளரான ராஜம்மாள் சாம்ராஜிடம் தோல்வியைத் தழுவினார்.
அதே ஆண்டு நடைபெற்ற நகர்மன்றத் தலைவர் பதவிக்கான தேர்தலில் களம் கண்ட அவர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டேனியல்ராஜிடம் தோல்வியைத் தழுவினார். ஊராட்சிக் குழுத் தலைவராக இருந்த கீதா ஜீவன் உறுப்பினராக வெற்றி பெற்றபோதிலும் போதிய ஆதரவு இல்லாததால் மீண்டும் தலைவராக முடியவில்லை.
இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, 2006 பேரவைத் தேர்தலில் பெரியசாமி போட்டியிட தலைமை வாய்ப்பு வழங்க மறுத்தது. எனினும், அந்தத் தேர்தலில் மகள் கீதா ஜீவனை வேட்பாளராக்குவதில் வெற்றி பெற்றார் பெரியசாமி. அந்தத் தேர்தலில் கீதா ஜீவன், அதிமுக வேட்பாளர் டேனியல்ராஜை விட 15,323 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று முதல் முறையாக சட்டசபைக்கு சென்றார். அமைச்சரான மகள் கீதா ஜீவனுக்கு, சமூகநலத் துறை அமைச்சர் பதவியும் கிடைத்தது. 5 ஆண்டுகளாக அமைச்சராக இருந்தபோதிலும் தொகுதிக்கு பெரிதாக எதையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததால், 2011 ஆம் தேர்தலில் இரண்டாவது முறையாக களமிறங்கிய கீதா ஜீவன் 26,193 வாக்குகள் வித்தியாசத்தில் தற்போதைய சட்டசபை உறுப்பினரான சி.த. செல்லப்பாண்டியனிடம் தோல்வியைத் தழுவினார். இருப்பினும் 2016இல் மீண்டும் போட்டியின்று வென்றார்.
இதற்கிடையே, கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளராகும் வாய்ப்பை தனது மகன் என்.பி. ஜெகனுக்கு வாங்கிக் கொடுத்தார் என். பெரியசாமி. திமுக அந்த லோக்சபா தேர்தலில் ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை என்பதால் ஜெகனும் தோல்வியடைந்தார். ஆனால் 1986ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற சட்டசபை தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், லோக்சபா தேர்தல் என எந்தத் தேர்தலாக இருந்தாலும் பெரியசாமி குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே மாறி மாறி வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அவரை எதிர்த்து திமுகவில் யாரும் அரசியல் செய்ய முடியாத நிலைதான் இருந்தது. இந்த சாணக்கியத்தனத்தை அவரது வாரிசுகள் முன்னெடுத்து செல்வார்களா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
நன்றி:
http://tamil.oneindia.com
|