காயல்பட்டினம் கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள குருசடிக்கு மின்னிணைப்பு வழங்கிய விஷயத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மின் வாரியம் அவமதித்துள்ளதற்கு, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
புது டில்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் 2006ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் (SLP No.8519/2006) வழங்கப்பட்ட ஆணைகள்படி - தமிழகம் உட்பட நாட்டின் அனைத்து மாநிலங்களும் - அரசு புறம்போக்கு நிலங்களில் வழிபாட்டுத்தலங்கள் அமைக்கப்படுவதற்கு எதிராக - பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
புறம்போக்கு நிலங்களில் வழிப்பாட்டுத்தலங்கள் அமைப்பது குறித்து தமிழக அரசு, 13.09.2010. தேதியிட்ட அரசாணை எண் 437 (வருவாய்த் துறை) வெளியிட்டுள்ளது.
புறம்போக்கு நிலங்களில் அமைந்துள்ள வழிபாட்டுதலங்களுக்கு மின்னிணைப்பு வழங்குவதற்கு முன்பு மாவட்ட ஆட்சியரின் தடையில்லா சான்றிதழ் (NO OBJECTION CERTIFICATE) பெறப்படவேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் - தமது அதிகாரிகளுக்கு தேதியிட்ட சுற்றறிக்கை (Memorandum No.CE/Comml/EE3/AEE1/ F.Instruction/D.530/2010, (Techl.Br), dated 12.10.2010) வெளியிட்டுள்ளது.
விதிமுறைகள் இவ்வாறிருக்க - CRZ விதிமுறைகளை மீறி, காயல்பட்டினம் கடற்கரை மணற்பரப்பில், பொது மக்கள் அமரும் பகுதிக்கு அருகே, அரசு புறம்போக்கு நிலத்தில் - குருசடி ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த குருசடிக்கு - 19.10.2012 அன்று, சட்டத்திற்கு புறம்பாக, காயல்பட்டினம் மின்வாரியத்தால், மின்னிணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு எண்: 364-002-925.
சட்டத்திற்கு புறம்பாக வழங்கப்பட்டுள்ள மின்னிணைப்பை துண்டிக்கக்கோரி - மின்வாரியத்துறையின் பல்வேறு அதிகாரிகளுக்கு, மார்ச் மாதம் - நடப்பது என்ன? குழுமம் மூலமாக புகார் மனுக்கள் வழங்கப்பட்டன. மேலும் - தூத்துக்குடி மாவட்டத்தின் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றத்திலும் (Consumer Grievance Redressal Forum), இது சம்பந்தமான புகார் பதிவு செய்யப்பட்டது. புகார் எண்: 290317141352 (29/3/2017). மேலும் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக - இம்மின்னிணைப்பு, 19.10.2012 அன்று வழங்கப்பட்டுள்ளது என்ற தகவலை, நடப்பது என்ன? குழுமம் பெற்றது.
(இக்கட்டுமானத்தை அப்புறப்படுத்தக்கோரி, தனியாக - மத்திய மற்றும் மாநில அரசுகளின் 16 துறைகளுக்கு, “நடப்பது என்ன?” குழுமம் மனு வழங்கியுள்ளது).
“நடப்பது என்ன?” குழுமம் சார்பாக புகார் பதிவு செய்யப்பட பிறகு - காயல்பட்டினம் மின்நிலையத்தின் துணை பொறியாளர் திரு முருகன் வழங்கிய பதிலில், குருசடிக்கு மின் இணைப்பு பெற்றவர்களிடம் - 15 தினங்களுக்குள் மாவட்ட ஆட்சியரின் தடையில்லா சான்றிதழ் (NO OBJECTION CERTIFICATE) சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
சட்டத்திற்கு புறம்பான இம்மின்னிணைப்பை உடனடியாக துண்டிக்காமல், கால அவகாசம் வழங்கிய காயல்பட்டினம் மின்நிலையத்தின் துணை பொறியாளரின் இக்கடிதத்தை கண்டித்து - வழக்கறிஞர் மூலமாக அவருக்கு நோடீஸ் அனுப்பப்பட்டது.
மே 11 அன்று, தூத்துக்குடி மாவட்டத்தின் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றத்தில் - இது சம்பந்தமான புகார் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின் போது - சில அதிர்ச்சிக்கரமான தகவல்கள் தெரியவந்துள்ளது.
(1) குருசடிக்கான மின்னிணைப்பு - 19.10.2012 அன்று, காயல்பட்டினம் மின்நிலையத்தில் ஒரு நாளுக்கு மட்டும் பொறுப்பில் இருந்த - துணை பொறியாளரால் வழங்கப்பட்டது என்றும், அந்த பொறியாளர், அவரின் உயர் அதிகாரி ஆகியோர் ஓய்வு பெற்றுவிட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
(2) குருசடிக்கு மின்னிணைப்பு பெற்றவர்களுக்கு - நடப்பது என்ன? குழுமத்தின் புகாரினை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் தடையில்லா சான்றிதழ் பெற - மூன்று முறை கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது - விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
(3) மூன்று முறை வழங்கப்பட்ட கால அவகாசம் நீட்டிப்பை பயன்படுத்தி - ஏப்ரல் 27 அன்று, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் (WP[MD] 8300/2017), குருசடிக்கு மின்னிணைப்பு பெற்றவர்கள், மின் இணைப்பை துண்டிக்க - இடைக்கால தடை பெற்றுள்ளதாக, விசாரணையின் போது - தெரிவிக்கப்பட்டது.
இந்த விசாரணையின்போது - உடனடியாக மின்னிணைப்பை துண்டிக்காமல், கால அவகாசம் நீட்டிப்பு வழங்கி - நீதிமன்றத்தின் இடைக்கால தடை பெற - முறையற்ற வகையில் மின்வாரிய அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளார்கள் என்பது எழுத்துப்பூர்வமாக - நடப்பது என்ன? குழுமம் சார்பாக பதிவு செய்யப்பட்டது.
மேலும் - இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதும் - எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது.
உச்சநீதிமன்ற தீர்ப்பையும், தமிழக அரசின் ஆணையையும், மின்வாரியத்துறையின் சுற்றறிக்கையும் அவமதித்து செயல்புரிந்த - தூத்துக்குடி மாவட்ட மின்வாரியத்துறையின் அனைத்து அதிகாரிகள் மீதும் சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க நடப்பது என்ன? குழுமம் முடிவு செய்துள்ளது.
மேலும் - சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தொடரப்பட்டுள்ள வழக்கில், தன்னையும் ஒரு வாதியாக இணைத்து கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: மே 19, 2017; 9:30 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|