வாகன விபத்தில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் காலமானார். விரிவான விபரம்:-
காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர் அஜாருத்தீன் (வயது 38). அவரது மனைவி ஆயிஷா ஜுல்ஃபா (வயது 24). சித்தன் தெருவில் வாடகை வீட்டில் குடியிருக்கின்றனர். 22.05.2017. திங்கட்கிழமையன்று இரவில் இவ்விருவரும், ஆயிஷா ஜுல்ஃபாவின் தாயார், தங்கை உள்ளிட்டோரும் சென்னையிலிருந்து சொந்த வாகனத்தில் காயல்பட்டினத்திற்கு பயணித்துள்ளனர்.
நேற்று (23.05.2017. செவ்வாய்க்கிழமை) அதிகாலை 04.00 மணியளவில், தூத்துக்குடிக்கு அருகிலுள்ள எப்போதும் வென்றான் என்ற ஊரைக் கடந்து செல்கையில், வாகனம் தடுமாற்றம் கண்டு, அருகிலுள்ள சுவரின் மீது பலமாக மோதி நின்றுள்ளது. இதில், வாகனத்தின் முன்பகுதி இடப்புறத்தில் அமர்ந்திருந்த கர்ப்பிணிப் பெண்ணான ஆயிஷா ஜுல்ஃபா நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
விபத்து நடந்துவிட்டதைக் கண்ணுற்ற அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், பொதுநல அமைப்பினரும் – வாகனத்திலிருந்த அனைவரையும் மீட்டு, தூத்துக்குடியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்ததையடுத்து, அவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உயிரிழந்த ஆயிஷா ஜுல்ஃபாவின் உடல், காயல்பட்டினம் ஆறாம்பள்ளி மையவாடியில், 23.05.2017. செவ்வாய்க்கிழமையன்று 22.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
|