தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவை விரிவாக்கத் திட்டத்தில் காயல்பட்டினத்தையும் இணைத்திடுமாறு, தமிழக அரசிடம் – காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
தூத்துக்குடி மாவட்டத்தில் 15க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் செயல்பாட்டில் உள்ளன. இருப்பினும் மாவட்டத்தின் மூன்றாவது பெரிய நகரான காயல்பட்டினத்தில் இச்சேவை இதுவரை அறிமுகம் செய்யப்படவில்லை.
இது தொடர்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகிகள், கடந்த பிப்ரவரி மாதம் சென்னை சென்று - தொடர்புடைய அனைத்து அதிகாரிகளையும் சந்தித்து, இக்கோரிக்கையை வலியுறுத்தினர். இச்சேவை விரிவாக்கம் செய்யப்படும்போது - காயல்பட்டினம் நகராட்சிப் பகுதிக்கு முன்னுரிமை வழங்கப்படும் என – தமிழக அரசின் சுகாதாரத் துறை திட்ட இயக்குநர் தரேஸ் அஹ்மத் IAS – “நடப்பது என்ன?” குழுமத்திற்கு எழுத்துப் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்திருந்தார்.
தற்போது, மாநிலத்தில் கூடுதலாக 50க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவைகள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியானதையொட்டி, தமிழக அரசின் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் IAS இடம் – “நடப்பது என்ன?” குழுமம், தற்போது மீண்டும் நினைவூட்டல் கடிதத்தை வழங்கியுள்ளது.
இது நியாயமான கோரிக்கை என கருத்து தெரிவித்த சுகாதாரத் துறை செயலாளர், இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அப்போது தெரிவித்தார்.
இக்கோரிக்கை குறித்த நினைவூட்டல் கடிதம் தமிழக அரசின் சுகாதார துறையின் திட்ட இயக்குநர் தரேஸ் அஹமத் IAS இடமும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: மே 17, 2017; 12:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|