காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் எழுத்து மேடை பகுதி ஆசிரியர் அ.ர.ஹபீப் இப்றாஹீம் எழுத்தில், “ஊஞ்சல் தாத்தா” எனும் தலைப்பிலான சிறுவர் கதை நூலை, பாரதி புத்தகாலயத்தின் ‘புக்ஸ் ஃபார் சில்ரன்’ (Books For Children) பிரிவு, 10.04.2018. செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்டுள்ளது. இது குறித்த விபர அறிக்கை:-
எழுத்து மேடை கட்டுரையாளர்
காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் எழுத்து மேடை கட்டுரைப் பகுதி ஆசிரியர் அ.ர.ஹபீப் இப்றாஹீம் எழுதிய சிறுவர் கதைநூலை, 'பாரதி புத்தகாலயம்' பதிப்பகத்தின் குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவாக இயங்கும் 'புக்ஸ் ஃபார் சில்ரன்' (Books For Children), 10.04.2018 செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்டுள்ளது.
காயல்பட்டினம் அப்பா பள்ளித் தெருவைச் சார்ந்த இவர், காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் செய்தியாளர்களுள் ஒருவராகவும், எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் & காயல் நற்பணி மன்றம் – தம்மாம் அமைப்பின் செயற்குழு உறுப்பினராகவும் விளங்குகிறார்.
நூலின் முதல் படியினை, பாரதி புத்தகாலயத்தின் உரிமையாளர் திரு நாகராஜன் வெளியிட, நூலாசிரியரின் தந்தை (ஜனாப் அப்துல் ரஸாக்) பெற்றுக்கொண்டார்.
முதலாவது சிறுவர் கதைநூல்
"ஊஞ்சல் தாத்தா" இவரது முதல் சிறுவர் கதைநூல். ஒரு பெரிய பாலைவனப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரேயொரு பூங்காதான் கதைகளமாக அமைகிறது. அந்த பூங்காவில் ஓடியாடித் திரியும் மழலைகளைச் சுற்றியே கதை நகர்கிறது.
அன்பு, அறம், பரிவு, பிரிவு, பிறர் நலம், பகிர்ந்து உண்ணுதல், குழந்தைமை ஆகிய அனைத்தையும் ஒன்றிணைத்து – இக்கதை சுவைப்பட வழங்கப்பட்டுள்ளது.
இந்நூலில், 12 சிறார்கள் வழங்கிய (கதைக் குறித்த) குட்டி குட்டி அணிந்துரைகளும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சென்ற 30.03.2018 அன்று நடைபெற்ற காயல் நற்பணி மன்றம் – தம்மாம் அமைப்பின் 82-வது பொதுக்குழுக் கூட்டம் & 3-வது குடும்ப சங்கம நிகழ்வில், இந்நூல் குறித்த அறிமுகம் வழங்கப்பட்டது.
பாரதி புத்தகாலயம்
'உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளை' எனும் இலாப நோக்கற்ற அமைப்பின் வெளியீட்டகம் இது. மக்கள் அறிவியல், இலக்கியம், இலக்கிய தத்துவங்கள், சமூக அறிவியல், தத்துவம் மற்றும் கவின் கலை உள்ளிட்ட துறைகளில் ஆயிரத்திற்கும் மிகுதியான தலைப்புகளில் புத்தகங்களை வெளியிட்டுள்ளது.
குழந்தைகளுக்கான புத்தகங்களை, 'புக்ஸ் ஃபார் சில்ரன்' (Books For Children) என்ற பெயரில் சிறப்புப் பிரிவாக வெளியிட்டு வருகிறது. குழந்தைகளுக்கான புனைவு இலக்கியங்கள், பாடல்கள், மக்களுக்கான அறிவியல், வரலாறு என பல தலைப்புகளிலும், திட்டமிட்ட கல்விக்கான புத்தகங்களை வெளியிடுகிறது.
தமிழ் சிறார் இலக்கியத்தின் முன்னோடியாக உள்ள 'புக்ஸ் ஃபார் சில்ரன்' பிரிவின் வெளியீடாகவே, இந்த ஊஞ்சல் தாத்தா நூல் அமைகிறது.
கதைக்கான ஓவியங்களை திரு வாசன் தீட்ட, நூல் வடிவமைப்பு பணியினை திரு குணசேகரன் செய்துள்ளார்.
நூலைப் பெற...
32 பக்கங்களைக் கொண்ட இந்த சிறு நூலின் விலை ரூ 30 மட்டும். பாரதி புத்தகாலயத்தின் 30-க்கும் மேற்பட்ட கிளைகளில், இந்நூல் விற்பனைக்கு வருகிறது.
சென்னையில், கீழுள்ள முகவரியில் நூலினைப் பெறலாம்:
எண் 7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 600018
தொலைபேசி: 044-24332424
மின்னஞ்சல்: thamizhbooks@gmail.com
இணையம்: https://thamizhbooks.com
கூகுள் வரைபட முகவரி: https://goo.gl/maps/uAZVWEayxL92 |