சஊதி அரபிய்யா – தம்மாம் காயல் நல மன்றத்தின் 82-வது பொதுக்குழுக் கூட்டம், பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் & பல்சுவை நிகழ்ச்சிகளுடன் - குடும்ப சங்கம நிகழ்வாக அண்மையில் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து, அம்மன்றத்தின் நிர்வாகக் குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை கிழே:
காயல் நற்பணி மன்றம் – தம்மாம் (KNM-D) அமைப்பின் 82-வது பொதுக்குழுக் கூட்டம் & 3-வது குடும்ப சங்கம நிகழ்வு, 30.03.2018 வெள்ளிக்கிழமையன்று, இறையருளால் வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை 09:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை நடந்தேறிய இந்நிகழ்வில், சுமார் 200 பேர் (காயலர்கள் & ஆதரவாளர்கள்) கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பொதுக்குழுக் கூட்டம்
மன்றத்தின் 82-வது பொதுக்குழுக் கூட்டம், நிகழ்வு தினத்தன்று மஃரிப் தொழுக்கைக்கு பின்னர் துவங்கியது. நிகழ்ச்சிக்கு, மன்றத் தலைவர் ஜனாப் முஹம்மது ரஃபீக் தலைமை வகித்து, அறிமுகவுரை வழங்கினார். துணைத் தலைவர் ஜனாப் செய்யத் ஜியாவுதீன் வரவேற்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, செயலாளர் ஜனாப் செய்யத் இஸ்மாயீல் மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த (சஊதி அரபிய்யாவின் தகவல் அமைச்சகத்தில் பணிபுரியும்) இலங்கையை சார்ந்த மவ்லவி முஹம்மது மக்கீன் நளீமி, சென்னையைச் சார்ந்த கட்டிடவியல் நிபுணர் ஜனாப் ஜக்கரிய்யா, ரியாத் காயல் நல மன்ற நிர்வாகக் குழு உறுப்பினர் ஜனாப் முஹ்ஸின் & ஜனாப் நூஹு ஆலிம் ஆகியோர் தத்தம் சிறப்புரைகளை சுருக்கமாக வழங்கினர்.
இவர்களின் சொற்பொழிவுகளில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:
--> இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்புற செயல்படும் மன்றம்
--> பல்வேறு தளங்களில் பாராட்டத்தக்க நலத் திட்டங்கள்
--> இப்பணிகள் தொடர்ந்து செம்மையாக நடைபெற ஆவணச் செய்தல்
--> பொருளாதார பங்களிப்பை மிகுதியாக்குதல்
--> இறைவழியில் அறப்பணி செய்வதன் அவசியம்
--> உறுப்பினர்களுக்கிடையே நிலவும் 'போற்றத்தக்க’ ஒற்றுமை
--> மன்றம் திறம்பட செயல்படுவதற்கு, உறுப்பினர்களின் சிறப்பான ஒத்துழைப்பு
--> மன்றப் பணிகளில் இளையவர்களும் பங்கேற்ப்பதின் அவசியம்
--> உறுப்பினர்களின் சிற்சிறு பங்களிப்பும் கூட, மன்றப் பணிகளுக்கு பெரியளவில் வலுசேர்க்கும் என்னும் புரிதல்
--> இறைவன் நமக்கு வழங்கிய அருட்கொடைகளுக்கு (பொருளாதாரம், உடல் நிலை & தனிப்பட்ட திறமைகள்) நன்றி செலுத்துதல் & அதனை சரியான பாதையில் பயன்படுத்துதல்
--> மகிழ்ச்சி நிறைந்த கேளிக்கை விளையாட்டுகளைத் தாண்டி, நம் மக்களை ஒன்றிணைப்பதும், சமூகப் பணிகளை இன்னும் விரிவுபடுத்தவதுமே இந்நிகழ்வின் மையக்கரு எனபதை உணர்த்துதல்
--> மார்க்கப் பற்றோடு இணைந்திருக்க வேண்டிய ஊர்ப் பற்றின் முக்கியத்துவம்
--> சஊதி அரபிய்யாவில் தற்போது ஏற்பட்டுள்ள நிலையற்ற வேலைவாய்ப்புச் சூழல், அதனால் உண்டாகும் பொருளாதார பாதிப்பு & ஊர் திரும்பும் இக்கட்டான நிலையை சமாளித்தல்
--> நம் கட்டுப்பாட்டை மீரிய அத்தகைய அனைத்து பொருளாதரம்-சார்ந்த சறுக்கல்களை, இறைவனின் சித்தமாக கருதும் மனப்பாங்கை உருவாக்கல்
--> நகரின் நலனுக்காக பாடுபடும் பல்வேறு நல மன்றங்களில் செயல்பாடுகள் குறித்த பொதுவான தகவல்கள் &
--> இம்மன்றங்கள் முறையாக செயல்பட தேவையான பொருளதவி குறித்த விழிப்புணர்வு
சிறப்பான போதனைகளைக் கொண்ட இந்த குறு உரைகள், நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வண்ணம் அமைந்திருந்தது.
அதனைத் தொடர்ந்து, புதிய உறுப்பினர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
குழந்தைகளுக்கு கொசுவுசட்டை (T-Shirt)
முன்னதாக, காலை வேளையில் பெரியவர்கள் & சிறார்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. மன மகிழ்வை ஏற்படுத்திய இவற்றுள், வெளிப்புற விளையாட்டுகள், உள்ளரங்க நிகழ்வுகள் & நீச்சல் குளப் போட்டிகள் எனப் பிரிக்கப்பட்டு - ஆடவர், பெண்டிர் & சிறார்களுக்காக தனித்தனியே நிகழ்த்தப்பட்டன.
இவ்விளையாட்டுகளில் பங்கேற்ற இளவல்களுக்கு, மன்றத்தின் முத்திரை பதிக்கப்பட்ட கொசுவுசட்டை (T-Shirt) அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
வெளிப்புற விளையாட்டுகள்
கால்பந்து உதைத்தல் (penalty shootout), சணற்பை ஓட்டப் பந்தயம் (gunny sack race), கையிறிழுக்கும் போட்டி (tug of war) & இசைப் பந்து (Passing the ball) ஆகியன ஆண்களுக்கும்; ஊதற்பை வெடித்தல் (balloon bursting), எலுமிச்சை & கரண்டி (lemon with spoon), & சணற்பை ஓட்டப் பந்தயம் ஆகியன இளவல்களுக்கும் (இரு பாலர்) வெளிப்புற விளையாட்டுகளாக நடத்தப்பட்டன.
ஊதற்பை வெடித்தல் & நீருள்ள கோப்பையை தலை மீது வைத்தபடியே நடத்தல் (walking with water cup on head) ஆகியவை பெண்களுக்கான வெளிப்புற விளையாட்டுகளாக நடத்தப்பட்டன.
உள்ளரங்க நிகழ்ச்சிகள்
உள்ளரங்க நிகழ்வுகளாக, வர்ணம் தீட்டுதல் (coloring) & அருள்மறை மனனப் போட்டி (Al-Quran hifz competition) ஆகியன குழந்தைகளுக்கும்; நாணயங்களை எழுதுகோலின் மீது அடுக்குதல் (coin layering on a pencil), காயல் வார்த்தை விளையாட்டு & வினாடி வினா (quiz) ஆகியவை ஆடவர்களுக்கும்; மெளன மொழி (silent language), வினாடி வினா, உறிஞ்சு குழாய் மூலம் விதைகளை நகர்த்துதல் (picking seeds using straws), கோப்பைகளை அடுக்குதல் (cup layering), (தலைகீழாக) வரிசையாக வைக்கப்பட்ட கோப்பைகளின் மீது பந்தை உருட்டுதல் (glass road trucker) & நாணயங்களை அடுக்குதல் ஆகியவை பெண்டிருக்கும் தனித்தனியாக நடத்தப்பட்டன.
வினாடி வினா போட்டியானது, அல்-குர்ஆன், நபிமார்கள், இஸ்லாமிய வரலாறு, இந்தியாவின் முஸ்லிம்கள், மொழியாக்கம் ஆகியச் சுற்றுகளை கொண்டிருந்தது.
பெண்களுக்கான நிகழ்வுகளை, மகளிர் ஒருங்கிணைப்புக் குழு செவ்வனே செய்திருந்தது.
நீச்சல் குளப் போட்டிகள்
பெரியவர்கள் & இளையவர்கள் என இருவேறு பிரிவுகளில் நடைபெற்ற ஆண்களுக்கான நீச்சல் குளப் போட்டிகளில், ஆர்வமுள்ள பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்விடத்தில், பெண்களுக்கான தனி நீச்சல் குள வசதி இருந்தது குறிப்பிடத்தக்கது.
சிறுவர் கதைநூல் அறிமுகம்
நிகழ்வின் ஒரு பகுதியாக, மன்ற செயற்குழு உறுப்பினர் அ.ர.ஹபீப் இப்றாஹீம் எழுதி, புக்ஸ் ஃபார் சில்ரன் (பாரதி புத்தகாலயத்தின் குழந்தைகளுக்கான பிரிவு) மூலம் வெளியாக இருக்கும் 'ஊஞ்சல் தாத்தா’ எனும் சிறுவர் கதைநூல் குறித்த அறிமுகம் வழங்கப்பட்டது.
சிறப்பான உணவு
நிகழ்ச்சிக்கு வருகைத் தந்த அனைவருக்கும், சுவையான சிற்றுண்டி (இட்லி & உளுந்து வடை), தேநீர் & குளிர்பானம் ஆகியன காலை வேளையிலும்; நெய்ச்சோறு, களரிக் கறி & குளிர்களி (ice cream) ஆகியன மதிய வேளையிலும்; மற்றும் தேநீர் & வெங்காய வடை ஆகியன மாலை வேளையிலும் வழங்கப்பட்டது.
இதற்கான பணிகளை, உணவு ஏற்பாட்டுக் குழுவினர் செவ்வனே செய்திருந்தனர்.
பரிசளிப்பு விழா
பல்வேறு உள்ளரங்க & வெளிப்புற விளையாட்டுகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கும் & குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஜும்ஆ தொழுகை
புல்வெளி மைதானம், நீச்சல் குளம், உள்ளரங்கு, சமையலறை & உணவுக்கூடம் என பல்வேறு அம்சங்களை தன்னகத்தே கொண்ட “இஸ்திராஹா அல்-கல்ஆ” (Castle Recreation Center) நிகழ்விடமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. சென்ற ஆண்டின் நிகழ்வும், இதே இடத்தில்தான் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்விடத்துக்கு அருகில் இருந்த மஸ்ஜித் அல்-உரைஃப்பியில், நிகழ்ச்சியில் பங்கேற்றோர் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றினர்.
நிகழ்ச்சி ஏற்பாடு
முன்னதாக, நிகழ்ச்சி குறித்த அறிவிப்பினை மன்ற உறுப்பினர்களுக்கும் & சஊதி அரபிய்யாவின் கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் அனைத்து காயலர்களுக்கும் & ஆதரவாளர்களுக்கும், மன்றத்தின் வாட்ச்-ஆப் குழுமத்தின் மூலமாகவும் & இணையதள ஊடக செய்தியாகவும், மன்ற நிர்வாகக் குழுவின் சார்பில் அழைப்பறிக்கை வெளியிடப்பட்டது.
அதற்கு பின்னர் நடைபெற்ற சிறப்புக் கூட்டங்களில், நிகழ்வினை செம்மையாக நடத்திடும் பொருட்டு, பல்வேறு உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு - நிகழ்விற்கான ஆயத்தப் பணிகளில் அக்குழுக்களின் உறுப்பினர்கள் மும்முரமாக ஈடுபடலானர்.
நிதி திரட்டுதல்: ஜனாப் நூர்தீன் & குழுவினர்
உணவு ஏற்பாடு: ஜனாப் செய்யத் ஜியாவுதீன் & குழுவினர்
பொது சேவைகள்: ஜனாப் இம்தியாஸ் & குழுவினர்
வரவேற்பு & பெயர் பதிவு: ஜனாப் மஹ்மூது சுல்தான் & குழுவினர்
மேடை & அரங்க ஏற்பாடு: ஜனாப் புஹாரி & குழுவினர்
ஒலி & ஒளி: ஜனாப் ஸஃப்ஆன் & குழுவினர்
பரிசுப் பொருட்கள்: ஜனாப் நவ்ஃபல் & குழுவினர்
உள்ளரங்க நிகழ்ச்சிகள்: ஜனாப் இஸ்மாயீல் & குழுவினர்
வெளிப்புற விளையாட்டுகள்: ஜனாப் அப்துல் அஜீஸ் & குழுவினர்
போக்குவரத்து & பாதுகாப்பு: ஜனாப் காசிம் & குழுவினர்
மகளிர் ஒருங்கிணைப்பு: சகோதரி சகீலா இம்தியாஸ் & குழுவினர்
தம்மாம்-91 புறநகர் பகுதியிலுள்ள நிகழ்விடத்தை இலகுவாக வந்தடையும் வண்ணம், துறைமுகப் பகுதியில் இருந்து, நகரின் மையப் பகுதி (சந்தைப் பகுதி - Al Souq) வழியாக, ஊர்தி ஏற்பாடு (ஊர்தி வசதி இல்லாதவர்களுக்காக) செய்யப்பட்டிருந்தது.
நன்றி நவில்தல்
நிகழ்ச்சியின் இறுதியில், மன்ற நிர்வாகக்குழு உறுப்பினர்களுள் ஒருவரான ஜனாப் இம்தியாஸ் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்விற்காக தம்மாம், அல்-ஃகொபர், ஜுபைல், ரஹிமா, அல்-ஹஸ்ஸா & ரியாத் என பல்வேறு பகுதிகளிலிருந்து வருகைத்தந்த அன்பர்கள் அனைவருக்கும் மன்றத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்தார்.
குடும்பத்தோடு மழலைகளையும் அழைத்து வந்தோருக்கும் & ஏனைய சிறப்பு விருந்தினர்களும் நன்றிக் கூறியதோடு, இந்நிகழ்ச்சிக்காக பொருளுதவி புரிந்த பெருமக்களுக்கும், அன்பளிப்புகளை வழங்கிய நல்லுள்ளங்களுக்கும் & நிகழ்விற்காக உழைத்த அனைத்து நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவினருக்கும் [குறிப்பாக ‘உணவு ஏற்பாட்டுக் குழு’ அங்கத்தினருக்கு] மனமார்ந்த நன்றியினை உரித்தாக்கினார்.
இறுதியாக, துஆ கஃப்பாராவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
ஒளிப்பட செருகேடு (Photo Album)
நிகழ்வு தினத்தன்று எடுக்கப்பட்ட அனைத்து ஒளிப்படங்களையும், தனி உயர்தெளிவான படங்களாக (high-resolution images) பதிவிறக்கம் செய்திட, கீழுள்ள வலைப்பக்கத்தை சொடுக்கவும்:
https://www.irista.com/gallery/rhhwvuhslav0
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாக்கம் & ஒளிப்படங்கள்:
அ.ர.ஹபீப் இப்றாஹீம்
செயற்குழு உறுப்பினர்
|