காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் தெரு நாய்களின் தொல்லை தொடர்பாக 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திடம், மருத்துவத் துறை இணை இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் அரசு மருத்துவமனை வளாகத்தில் - அதிகளவில் காணப்படும் நாய்கள் நடமாட்டத்தால், பொது மக்கள் மத்தியில் - பல மாதங்களாக அச்சம் நிலவுகிறது.
இது சம்பந்தமாக - நடப்பது என்ன? குழுமம் சார்பாக பல்வேறு தருணங்களில் புகார் மனுக்கள் வழங்கப்பட்டும், இதற்கான நிரந்தர தீர்வு இது வரை காணப்படவில்லை.
ஏப்ரல் 4 அன்று நடப்பது என்ன? குழும ஏற்பாட்டில் நடைபெற்ற இரத்த தான முகாமில், சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட - தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவத்துறை இணை இயக்குனர் டாக்டர் பரிதா ஸீரீன் அவர்களிடம் இது சம்பந்தமாக எடுத்துரைக்கப்பட்டது.
இது சம்பந்தமான விரிவான தகவலை எழுத்துப்பூர்வமாக வழங்கும் நோக்கில், இன்று (ஏப்ரல் 10) - தூத்துக்குடியில் உள்ள மருத்துவத்துறை அலுவலகத்தில் - இணை இயக்குனர் அவர்களை நேரடியாக சந்தித்து - புகைப்படங்களுடனான மனு - நடப்பது என்ன? குழுமம் சார்பாக - வழங்கப்பட்டது.
நேற்று (ஏப்ரல் 9) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் இது சம்பந்தமாக தான் பேசியதாகவும், கூட்டத்தில் கலந்துக்கொண்ட நகராட்சி தரப்பு அதிகாரிகள் சார்பில் - இது குறித்து சிறப்பு நடவடிக்கை, அடுத்த 15 தினங்களுக்குள் எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும், தான் இது சம்பந்தமாக தொடர்ந்து கண்காணிப்பதாகவும் இணை இயக்குனர் உறுதியளித்தார்.
மருத்துவமனை நுழைவு வாயிலில் - இரும்பு கம்பிகளால் வேகத்தடை அமைத்தால், நாய்கள் உள்ளே நுழையாத வகையில் பாதுகாக்கலாம் என்றும் இணை இயக்குனரிடம் வழங்கப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்தும் பரிசீலனை செய்வதாக, இணை இயக்குனர் உறுதியளித்தார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஏப்ரல் 10, 2018; 6:30 pm]
[#NEPR/2018041001]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|