இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெற்றுள்ள சஊதி அரபிய்யா – ரியாத் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில், உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டுள்ளனர். இதுகுறித்த செய்தியறிக்கை:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையினால் எமது RKWA-ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் 56-வது பொதுக்குழுக் கூட்டம் 01/06/2018 வெள்ளிக்கிழமையன்று புனித ரமழான் மாதத்தில் இஃப்தார் நிகழ்ச்சியுடன் ஃபத்ஹா Shifa Al Jaseera Polyclinic Party Hall-ல் நடைபெற்றது.
இஃப்தார் நிகழ்ச்சியில், சுவை மிகுந்த கறி கஞ்சி, பருப்பு வடை, சமூசா, Custard, Ice Cream மற்றும் தேநீர் பரிமாறப்பட்டன.
அதன் பின்னர் மஃரிப் தொழுகைக்குப் பிறகு சரியாக 7:15 மணியளவில் மன்ற பொது குழு கூட்டம் ஆரம்பமானது.
இந்நிகழ்ச்சியை மன்ற செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் P.S.J. ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் அழகான முறையில் தொகுத்து வழங்கினார்கள்.
சகோதரர் ஹாபிழ் தாவூத் ஷாதுலி இறை வசனம் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைக்க, அடுத்து மன்ற உறுப்பினர் இன்னிசைத்தென்றல் சகோதரர். ஷேக் அப்துல் காதர் அவர்கள் இனிமையான இஸ்லாமிய பாடல் ஒன்றைப் பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.
மன்ற செயல்பாடுகள் மற்றும் தலைமை உரை:
மன்றத்தின் தலைவர் சகோதரர் P.M.S. முஹம்மது லெப்பை அவர்கள் நம் மன்றம் இதுவரை மருத்துவம், கல்வி, சிறு தொழில் மற்றும் பிற சேவைகளுக்காக உதவி அளித்ததை முறையாகப் பட்டியலிட்டார். மருத்துவம் சார்ந்த உதவிகள், நகரில் ஷிஃபா அமைப்புமூலம் வழங்கப்பட்டு வருகின்றது எனவும், கல்வி சார்ந்த உதவியினை இஃக்ரா அமைப்பு மூலம் செய்து வருகின்றது எனவும், சிறுதொழில் சார்ந்த உதவிகள், மன்றத்தில் நேரடியாகப் பெறப்பட்டு, அதனைப் பரிசளித்த பின் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது எனவும் கூறினார்.
தொடர்ந்து, மேலும் புனித ரமழான் மாதத்தில் ஏழை எளியவர்களுக்கு கிட்டத்தட்ட 303 குடும்பங்களுக்கு ஒரு மாத உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டதையும், கடந்த நான்காண்டுகளாக ஆதரவற்ற முதியோர்கள், விதவைகள், மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வரும் பல குடும்பங்களுக்கு மாதந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டமும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது என்றும் கூறினார். இது போன்ற அனைத்து நன்மையான காரியங்களை நமது மன்ற உள்ளூர் பிரதிநிதி சகோதரர் தர்வேஸ் அவர்களுடன் சிறப்பாக செய்து வருவதோடு, அவர்களுக்கும் நமது RKWA-வின் சார்பாக நன்றியையும் தெரிவிக்கப்பட்டது. உதவித்திட்டங்களை செயல்படுத்தப் பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களின் பங்களிப்பாக மாத சந்தாவை முறையாகச் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
எமது மன்றத்தின் செயல்பாடுகளில் பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களின் பங்களிப்பை வழங்கவேண்டிய முக்கியத்துவம் பற்றி பேசிய சகோதரர் ஹைதர் அலி அவர்கள், புதிதாகப் பதவியேற்றுக்கொண்ட செயற்குழு உறுப்பினர்களை, அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்கள். எமது மன்ற செயல்பாடுகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தங்களின் பங்களிப்பினை வழங்கும் அனைவருக்கும் துஆ செய்து, வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சகோதரர் கூஸ் அபுபக்கர் அவர்கள் தர்மம் செய்வதின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் மிகவும் அழகான முறையில் பேசினார்.
நாம் சம்பாதிக்கும் பொருளாதாரத்தினை அல்லாஹ்வின்பாதையில் செலவிட வேண்டும் என்றும், துன்பத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகள் கூறுவதும் ஒரு தர்மம் என்று கூறினார். தேவை உடையோரை நாம் தேடி சென்று தர்மம் செய்ய வேண்டும். நம்மை நாடி வருபவர்களுக்கு நாம் அவர்களின் தேவை அறிந்து நிரப்பமாக உதவிகள் செய்வதின் மூலம் உதவி வேண்டி வருபவரின் கண்ணியம் பேணப்படுகின்றது. இதன் மூலம் நம் கண்ணுக்கு புலப்படாத பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்துவைக்க வல்ல இறைவன் துணைபுரிவான் என்றும் அதற்காக RKWA செயல்படுவதாகவும் கூறினார். தர்மங்கள் அனைத்தும் இறை பொருத்தம் நாடியே செய்யவேண்டும் என்று கூறி தனது உரையை நிறைவுசெய்தார்.
சகோதரர் ஜெய்னுல் ஆபிதீன் நன்றியுரையை தொடர்ந்து துஆவுக்கு பின் வந்த அனைத்துச் சகோதரர்களும் ஒருங்கிணைந்து குழுப்படம் எடுக்கப்பட்டு கூட்டம் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
56-வது பொதுக்குழு கூட்ட புகைப்படத் தொகுப்பு:
https://drive.google.com/open?id=1L3xrI5uak_kpeXHd0CLYndxTsknbXeR4
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாக்கம்:
தைக்கா ஸாஹிப்
ஊடகக் குழு, RKWA.
|