ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கருங்குளம் என்ற ஊருக்கருகில், இன்று அதிகாலையில் அரசுப் பேருந்தும், ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதியதில், காரில் பயணித்த காயல்பட்டினத்தைச் சேர்ந்த கணவர் – மனைவி இருவரும் படுகாயமுற்றனர். சிகிச்சை பலனின்றி கணவர் காலமானார். விரிவான விபரம்:-
காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சேர்ந்தவர் புகாரி என்பவரது மகன் எஸ்.எம்.பி.முஹம்மத் அப்துல் காதிர் (வயது 35). இவர், தனது மனைவி ஃபாத்திமுத்து ஜஹ்ரா (வயது 32) உடன் - திருநெல்வேலியிலுள்ள உறவினர் வீட்டுக்கு ஆம்னி காரில் சென்று கொண்டிருந்தனர். கருங்குளம் அருகே கார் பயணித்தபோது, எதிர்திசையில் - திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்குச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தும், ஆம்னி காரும் நேருக்கு நேர் மோதின.
ஆம்னி கார் அப்பளம் போல நொறுங்கியதில், அதில் பயணித்த கணவர் – மனைவி இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், எஸ்.எம்.பி.முஹம்மத் அப்துல் காதிர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஃபாத்திமுத்து ஜஹ்ரா பலத்த காயத்துடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து அதிகாலையில் நடந்தபோதிலும், சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் தேங்கி நின்றன. இந்த அரசுப் பேருந்தை அம்பாசமுத்திரம் அருகே உள்ள அகஸ்தியர் பட்டி சுப்பையா மகன் முருகேசன் (48) ஓட்டி வந்தார். பஸ்ஸில் 48 பயணிகள் இருந்தனர்.
செய்துங்கநல்லூர் காவல் உதவி ஆய்வாளர்களான சதீஷ், பெஞ்சமின், கோபால் ஆகியோர் நிகழ்விடம் சென்று போக்குவரத்தைச் சரி செய்தனர். இவ்விபத்து குறித்து செய்துங்கநல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தகவல்:
நோனா உவைஸ்
நன்றி:
Srivaikundam Today News
[கூடுதல் படம் இணைக்கப்பட்டது @ 18:25 / 24.06.2018.] |