ஏப்ரல் 18ஆம் நாளன்று தமிழகத்தில் ஒரே விடுத்தமாக நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், திமுகவின் சார்பில் கனிமொழி கருணாநிதி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்துப் பரப்புரை செய்வதற்காக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் நேற்று காயல்பட்டினம் வந்தார். அவருடன், அதன் மாநில பொதுச் செயலாளரும் சட்டமன்றக் கட்சித் தலைவருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ ஆகியோர் இணைந்து வந்தனர்.
காயல்பட்டினம் ரயில் நிலையத்தை வந்தடைந்த தம் தலைவரை, அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட துணைத் தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், நகரத் தலைவர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், நகரச் செயலாளர் ஏ.எல்.எஸ்.செய்யித் அபூஸாலிஹ் உள்ளிட்ட கட்சியினர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
காயல்பட்டினம் ஆஸாத் தெருவிலுள்ள ஏ.கே.மஹ்மூத் சுலைமான் இல்லத்தில், 11.30 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில், பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் கவிஞர் கனிமொழி கருணாநிதி அவர்களை ஆதரித்து, கூட்டணிக் கட்சி என்ற அடிப்படையில் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் - காயல்பட்டினத்தில் இன்று மாலை மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுவதற்காக நான் இங்கே வருகை தந்துள்ளேன்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியும், அதிமுக – பாஜக கூட்டணியும் மட்டுமே களத்தில் உள்ளன. வேறு சில பெயர்களில் கட்சிகளும், கூட்டணிகளும் இருப்பதாக சிலர் பேசிக் கொண்டாலும் அவையெல்லாம் குடிமக்களால் கருத்தில் கொள்ளப்படவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.
அதிமுக – பாஜக கூட்டணி மக்கள் விரோதக் கூட்டணி என்பதை நான் சொல்லித் தெரியும் நிலையில் யாரும் இல்லை. மத்தியில் பாரதீய ஜனதா கட்சி இந்த நாட்டு மக்களுக்கு எதிராகச் செய்து வரும் அட்டூழியங்கள் எண்ணலடங்காதவை. பாஜக அரசு நிர்வாக ரீதியாக பல குறைகளைக் கொண்டுள்ளது. அதையெல்லாம் தாண்டி, நாட்டு மக்களை மத ரீதியாகப் பிரித்துத் துண்டாடி, அதில் குளிர்காய முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜக நாட்டு மக்களிடம் அளித்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை. குடிமக்களின் வங்கிக் கணக்கில் பணம் ஏற்றப்படும் என்றார்கள், நடைபெறவில்லை. நாட்டு மக்களுக்குப் பெரிய அளவில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றனர், நடவடிக்கை எதுவுமே இல்லை.
மக்களுக்கு எதுவும் செய்யத்தான் இல்லை. குறைந்தபட்சம் அவர்களை நிம்மதியாக வாழ விட்டார்களா என்றால், அதையும் செய்யவில்லை. கடந்த ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் நாட்டு மக்களை மத ரீதியாகப் பிரித்து, அவர்களிடையே ஒரேயொரு மதத்தைத் திணித்து, மதச்சார்பற்ற இந்த நாட்டின் மகத்துவத்தையே சிதைத்து, சமஸ்கிருத மொழியை வளரும் தலைமுறையினரிடம் திணித்துத் துண்டாடி வருகின்றனர்.
தேசத்தந்தை மகாத்மா காந்தி, பண்டித ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், மவ்லானா அபுல்கலாம் ஆஸாத், டாக்டர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி, மறைந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரெல்லாம் பாடுபட்டுப் பாதுகாத்து வந்த ஜனநாயக மாண்பை, இந்நாட்டின் மதச்சார்பற்ற – சமூக நல்லிணக்கப் பண்பைத் திட்டமிட்டு சிதைத்து, நாட்டு மக்களின் கோபத்தை ஒட்டுமொத்தமாகப் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். பொதுமக்களது கோபத்தின் வெளிப்பாடுதான் அண்மையில் நடைபெற்ற 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக படுதோல்வியடையக் காரணமாக இருந்தது.
மக்கள் நலனை சிறிதும் மதிக்காத, இந்நாட்டின் இறையாண்மையைப் பற்றிக் கடுகளவும் கவலைப்படாத பாஜகவோடுதான் தமிழகத்தில் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. அந்தக் கூட்டணியை எதிர்த்து, மக்கள் உணர்வுகளை மதிக்கிற மகத்தான கூட்டணியாகவே எங்கள் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி திகழ்கிறது. நவதானியங்கள் – நவகிரகங்கள் என்று சொல்வதைப் போல நவகட்சிகள் – அதாவது ஒன்பது கட்சிகளைக் கொண்ட மகத்தான கூட்டணியே எங்கள் கூட்டணி.
கடந்த 2004ஆம் ஆண்டு – புதுச்சேரி உட்பட தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், மத்தியில் நிலையான மக்களாட்சி நடைபெறவும், தரமான பிரதமர்கள் தேர்ந்தெடுக்கப்படவும் தமிழகமே வழிகாட்டியும் இருக்கிறது. அந்த வரலாறு, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் அப்படியே நிகழப் போகிறது. பாஜக மதவாத அரசின் மீது மக்கள் பெருங்கோபத்தில் உள்ளனர். எனவே, எங்கள் கூட்டணியின் வெற்றி நிச்சயமாகிவிட்டது என்பதை நாங்கள் உறுதியாகக் கூறிக்கொள்கிறோம்.
கேள்வி:
திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதைப் பற்றி உங்கள் கருத்தென்ன?
பதில்:
சாதாரண நேரங்களில் நடத்தாமல், தேர்தல் நேரத்தில் நடத்தப்படும் இதுபோன்ற சோதனைகள் உண்மையில் கண்டிக்கத்தக்கது. அதுவும், எத்தனையோ கட்சிகள் இருக்க - ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த, ஒரு குறிப்பிட்ட வேட்பாளரை மட்டும் குறிவைத்து நடத்தப்பட்டுள்ள இந்தச் சோதனை மூலம் மக்களிடையே அந்த வேட்பாளர் மீதும், அவர் சார்ந்த கட்சியின் மீதும் அவநம்பிக்கையை ஏற்படுத்தி, அவர்களது நிச்சயிக்கப்பட்ட வெற்றிவாய்ப்பை இல்லாமலாக்குவதற்காக, தேர்தலையே நிறுத்துவதற்காக நடத்தப்படும் திட்டமிட்ட சதியாகவே இதை நான் கருதுகிறேன்.
கேள்வி:
இந்தச் சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் பிடிபட்டுள்ளதைக் கண்டித்து, தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருக்கிறாரே?
பதில்:
கண்டெய்னர் கண்டெய்னராகப் பணம் பதுக்கியதாக பரிசோதனையில் கண்டறியப்பட்ட ராஜேந்திர பாலாஜிக்கு, இந்த சோதனை குறித்துப் பேச எந்தத் தகுதியும் இல்லை.
ஒன்றை மட்டும் நான் உறுதியாகச் சொல்வேன். இதுபோல எத்தனை சோதனைகளை நடத்தினாலும், 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி பெறப்போகும் மகத்தான வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்திட இயலாது. அதை உணர்ந்துள்ளதால்தான் – தேர்தலையே நிறுத்திடும் நோக்கத்தில் இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுகின்றன.
கேள்வி:
ஒரு மதத்தின் தெய்வ நம்பிக்கையை இழிவுபடுத்தி திராவிடக் கட்சி ஒன்றின் தலைவர் பேசியிருப்பது குறித்த உங்கள் கருத்தென்ன?
பதில்:
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பல்லாண்டு காலமாகத் தோழமை கொண்டுள்ள இயக்கம்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக். எங்கள் கட்சியிலிருந்து யாரும் எந்த மதத்தையோ – மதத்தினரையோ – அவர்களது மத நம்பிக்கைகளையோ ஒருபோதும் குறைத்துப் பேசியதில்லை. அவரவர் வழி அவரவருக்கு என்பது திருக்குர்ஆன் எங்களுக்குக் காட்டும் வழி. அதைப் பின்பற்றும் நாங்கள் எல்லோரையும் அரவணைத்தே பயணிப்போம்.
இன்று பாரதீய ஜனதா கட்சியை நாங்கள் எதிர்க்கக் காரணமே – அடுத்தவர் மத நம்பிக்கையில் தலையிடுவதால்தான் என்றிருக்கும்போது, எங்கள் எதிர்ப்பு அர்த்தமுள்ள எதிர்ப்பாக இருக்க வேண்டும். முதலில் நாம் மனிதர்கள். பிறகுதான் நான் முஸ்லிம், நீங்கள் இந்து, அவர் கிறிஸ்துவர் என்பதெல்லாம்.
நாங்கள் தோழமை கொண்டுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை முழக்கமே – “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பதுதான். இது, அக்கட்சியை நிறுவிய பேரறிஞர் அண்ணா வகுத்தளித்த வழி.
கடவுள் மறுப்பு குறித்து பேரறிஞர் அண்ணாவிடம் கேள்வி கேட்கப்பட்டபோது, “கடவுள் இல்லை என்று சொல்லும் ஈனன் நானல்ல!” என்று அழுத்தமாகக் கூறியவர் அவர். அவரது கொள்கையின்படி செயல்படும் திமுகவோடுதான் எங்கள் தோழமை அமைந்துள்ளது. அடுத்தவர் மத நம்பிக்கையை நிந்தித்து, திராவிடக் கட்சியொன்றின் தலைவர் பேசியிருப்பதாக நீங்கள் கூறியிருக்கும் தகவல் எனக்கு இப்போதுதான் கிடைக்கிறது. யார் செய்தாலும் அது கண்டிக்கத்தக்கதே.
‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதைப் பாரம்பரியமாகக் கடைப்பிடித்து வரும் இந்த நாட்டில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புடனும், பாதுகாப்பு அரணாகவும் திகழ்ந்து வருகிறோம். எனக்குச் சிலை வணக்கம் பிடிக்காது. என் கையில் சிலைகளைத் தந்தால் அதை நான் வழிபடப்போவதில்லை. அதே நேரத்தில், அதை மதித்து வணங்கும் ஒருவரது வழிபாட்டைக் கெடுக்கவோ, அவரது வழிபாட்டுத் தலத்தைச் சிதைக்கவோ யாராவது முற்பட்டால், அவரை எதிர்த்துப் போராடுவது என் கடமை என இஸ்லாம் சொல்கிறது. ஒரு கோயிலைச் சிதைக்க யாராவது முனைந்தால் அதைத் தடுக்கப் போராடுவது எனது கடமை. அதுபோல, ஒரு மசூதிக்குப் பாதிப்பு வருகிறதென்றால் மற்றவர்கள் ஓடோடி வந்து தடுக்க வேண்டும். அப்படித்தான் இந்தத் தமிழகத்தில் இத்தனை காலமும் மக்கள் இருந்து வருகின்றனர். இந்த இணக்கமான சூழலைக் கெடுத்துக் குளிர் காய்வதற்குத்தான் பாஜக முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அதிமுக அதற்கு ஊதுகுழலாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
கேள்வி:
ராமநாதபுரத்தில் உங்கள் கட்சி வேட்பாளரின் வெற்றிவாய்ப்பு எப்படி உள்ளது?
பதில்:
நான் முன்னரே கூறியிருப்பது போல, ராமநாதபுரம் மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழகத்திலும் 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணியே மகத்தான வெற்றி பெறும்.
“நாங்கள் வெற்றி பெறுவோம்” என தேர்தலின்போது எல்லோரும் சொல்வார்கள்தான். ஆனால் அதற்கு ஒரு பொருள் இருக்க வேண்டும். ஒட்டுமொத்த நாட்டு மக்களின் மொத்தக் கோபத்திற்கும், சாபத்திற்கும் ஆளாகியிருக்கும் நிலையில் “நாங்கள்தான் வெல்வோம்” என்று எதிர்கூட்டணியினர் சொல்வதற்கும், மக்களோடு மக்களாக இருந்து, ஜனநாயக மரபுகளைக் காக்கும் வகையில் மக்களாட்சியை நடத்தும் எண்ணம் கொண்ட நாங்கள் சொல்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகைப் பொருத்த வரை, திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது போல – ராகுல் காந்திதான் அடுத்த பிரதமராக வர வேண்டும் என ஆசைப்படுகிறோம். கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்துள்ளது. பெருவாரியான வாக்குகள் வேறுபாட்டில் அவர் வென்று பிரதமரானால், தென்னிந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட ஒருவர் பிரதமரானதாக வரலாறு அமையும். காங்கிரஸ் கட்சியால் இத்தனை காலம் கண்டுகொள்ளப்படாமல் இருந்து வரும் – தென்னிந்திய மக்களின் பல்லாண்டு காலக் கோரிக்கையான மாநில சுயாட்சி என்பது நடைமுறைக்கு வரும். அதைப் புரிந்துகொள்ளும் மனநிலையில்தான் காங்கிரஸ் கட்சியும் தற்போது இருந்து வருகிறது என்பது வெளிப்படையான உண்மை.
கேள்வி:
கம்யூனிஸ்ட் கட்சி ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளதே? தேர்தல் லாபத்திற்காக கொள்கையை விட்டுக்கொடுப்பதாக இதை எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?
பதில்:
அரசியல் கட்சிகளின் பொதுவான கொள்கை நிலைப்பாடுகள் என்பது வேறு. தேர்தல் நேர நிலைப்பாடுகள் என்பது வேறு. மற்ற காலங்களில் பொதுவான கொள்கைகளை முன்னிறுத்தியே அரசியல் கட்சிகள் இயங்கும். அதே நேரத்தில் தேர்தல் என்று வந்துவிட்டால், குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் பல கட்சிகள் கருத்து ஒருமித்து, பொது எதிரியை வீழ்த்திடக் கூட்டணி அமைக்கும். அதைத்தான் கம்யூனிஸ்ட் கட்சியும் செய்திருக்கிறது.
விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ அடிப்படையில் இந்த நாட்டின் தேர்தல் முறை அமைந்தால், ஒவ்வொரு கட்சியும் தனித்தன்மையுடன் திகழும். அவரவருக்கான பிரதிநிதித்துவம் யாராலும் பறிக்கப்படாமல் பாதுகாக்கப்படும்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்து 1 தொகுதியிலும், கேரள மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் மூலம் 2 தொகுதிகளிலும், ஆந்திர மாநிலத்தில் சுயேட்சையாக 3 தொகுதிகளிலும், 13 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறோம்.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கூறினார். அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் – சட்டமன்றக் கட்சித் தலைவருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட துணைத் தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், நகர தலைவர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், நகர நிர்வாகிகளான பெத்தப்பா சுல்தான், ஜெ.உமர், எம்.இசட்.சித்தீக் உட்பட பலர் இதன்போது உடனிருந்தனர்.
|