ஏப்ரல் 18ஆம் நாளன்று தமிழகத்தில் ஒரே விடுத்தமாக நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், திமுகவின் சார்பில் கனிமொழி கருணாநிதி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்துப் பரப்புரை செய்வதற்காக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் நேற்று (02.04.2019. செவ்வாய்க்கிழமையன்று) காயல்பட்டினம் வந்தார். அவருடன், அதன் மாநில பொதுச் செயலாளரும் சட்டமன்றக் கட்சித் தலைவருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ ஆகியோர் இணைந்து வந்தனர்.
அன்று 19.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பீ.மீராசா மரைக்காயா தலைமை தாங்க, திமுக கூட்டணிக் கட்சியினர் முன்னிலை வகிக்க, மாவட்ட துணைத் தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.
அரபி ஷாஹுல் ஹமீத் கிராஅத் ஓதினார். மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் வரவேற்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழினியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அதன் தொழிற்சங்க மாவட்ட பொதுச் செயலாளர் கிருஷ்ணராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் ப்ரகாஷ், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதன் மாவட்ட துணைச் செயலாளர் முஹம்மத் நஜீப், திமுக நகர செயலாளர் கே.எஸ்.முத்து முஹம்மத், அதன் வழக்குரைஞர் பிரிவைச் சேர்ந்த சாத்ராக், திமுக மாநில பேச்சாளர் தனபால், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.ஷாஜஹான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் எஸ்.ஆஸாத், மதிமுக சார்பில் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும், அதன் சட்டமன்றக் கட்சித் தலைவருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
அவர்களது உரை விபரம்:-
கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் உரை:
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...
நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் – தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக மூலம் போட்டியிடும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது மகளார் கவிஞர் கனிமொழி கருணாநிதி அவர்களை ஆதரித்து இந்த மாபெரும் பொதுக்கூட்டம் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
எனக்கு முன் இங்கு பேசியவர்களெல்லாம் – மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஏன் வரும் தேர்தலில் ஆதரவளிக்க வேண்டும் என்பது குறித்து பல கோணங்களில் எடுத்துரைத்துள்ளனர். எத்தனையோ தேர்தல்கள் போல இதை எடுத்துவிடாமல், சிறுபான்மையினர் உட்பட அனைத்து சமுதாய மக்களின் வாக்குகளையும் ஒருங்கிணைத்து, ஒட்டுமொத்தமாக சகோதரி கனிமொழி அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட்ட மோடி எண்ணற்ற வாக்குறுதிகளைக் கொடுத்து, இன்று பதவிக்காலம் நிறைவடையும் இந்த நிமிடம் வரையில் அவற்றுள் எதையும் நிறைவேற்றவில்லை. மக்களது வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்றார்... வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகக் கூறினார்... வெளிநாடுகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள சுமார் 80 லட்சம் கோடி கருப்புப் பணத்தை மீட்பதாகச் சொன்னார்... ஸ்மார்ட் சிட்டிகள் உருவாக்கப்படும் என்றார்... இன்னும் ஏராளமான வாக்குறுதிகள். எதையுமே நிறைவேற்றாதது மட்டுமல்ல; தனது எதேச்சாதிகாரப் போக்கின் மூலம் நாட்டின் அடிமட்டக் குடிமக்களது வாழ்வாதாரத்தையெல்லாம் ஒன்றுமில்லாமலாக்கி, அவர்கள் சிட்டுக் குருவி போல சிறுகச் சிறுகச் சேர்த்த பொருளாதாரத்தைச் சட்டத்தின் துணையுடன் கபளீகரம் செய்து, தனது பணமுதலை நண்பர்களிடையே அதைப் பகிர்ந்துகொண்டார்.
இந்த பாஜகவினர் மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிரானவர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சரி, இந்துக்களுக்காவது ஆதரவானவர்களா என்றால் இல்லை. எந்த கடைமட்ட இந்து மக்களுக்காவது அவரது அரசு எதையாவது செய்துள்ளதா என்றால் இல்லை. ஒரே மதம், ஒரே மொழி என்பதெல்லாம் இந்திய யூனியன் என்ற கூட்டாட்சித் தத்துவ அடிப்படையில் கட்டமையப்பெற்றுள்ள இந்த நாட்டில் செல்லுபடியாகாது. இன்று ஒரு மதத்தில் இருப்பவர் நாளை இன்னொரு மதத்திற்குச் செல்லலாம். அது அவரவர் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையிலானது. அவரது உரிமையைத் தட்டிப் பறித்து, தனது விருப்பத்தைத் திணிக்கும் செயலை பாஜக அரசு செய்துகொண்டிருக்கிறது.
மாட்டிறைச்சி சாப்பிட்டதாகக் கூறி, ஓர் அப்பாவி முஸ்லிம் மாணவனை அடித்தே கொன்ற கயவர்களைக் கண்டிக்க வக்கில்லாத பிரதமர் மோடி, இப்பிரச்சினை நாட்டளவில் பெரிதாகப் பேசப்பட்டபோது நல்லவர் போல நாடகமாடிப் பேசினார்.
இந்த நாட்டின் தேசிய கொடி காவி, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று நிறங்களைக் கொண்டது. இந்துக்களின் நிறம் காவி. கிறிஸ்துவர்களின் நிறம் வெள்ளை. முஸ்லிம்களின் அடையாள நிறம் பச்சை. இம்மூன்று சமூகமும் இணைந்ததுதான் இந்தியா என்பதை அதன் தேசியக் கொடி உணர்த்திக் கொண்டிருக்க, ஒரே வர்ணமாக காவியை மட்டும் நிலைக்கச் செய்து, மற்ற வண்ணங்களை அடையாளம் தெரியாமல் மாற்றிட மோடியின் பாசிச அரசு முயன்றுகொண்டிருக்கிறது.
இந்த நாட்டில் சட்டமன்றம், பாராளுமன்றம் என மக்கள் மன்றங்கள் உள்ளன. அவற்றுக்கென ஜனநாயக மாண்புகள், மரபுகள் உள்ளன. ஆனால், இந்த மோடி எந்த மரபையும் பேணவில்லை. இந்த ஐந்தாண்டு காலத்தில் மோடி கலந்துகொண்ட நாடாளுமன்றக் கூட்டங்களின் எண்ணிக்கை வெறும் 19 மட்டும். ஆனால், அவர் சுற்றுப்பயணம் செய்த வெளிநாடுகளின் எண்ணிக்கையோ 89.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை முன்வைத்திருக்கிறார். அவையனைத்தும் செயல்வடிவம் பெற்றால் இந்த நாட்டு மக்களின் வாழ்வாதாரம் சிறக்கும். அவர்களது வணிகத் தரம் உயரும். ஆனால் மறுமுனையில் பாஜக – அதிமுக அரசுகளோ தாம் சேர்த்து வைத்த சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக, மக்களால் வழங்கப்பட்ட அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.
மத்தியில் பாஜக ஆட்சியிலும், மாநிலத்தில் அதிமுக ஆட்சியிலும் மக்கள் நலனுக்காக என்ன செய்யப்பட்டுள்ளன என்று யாராவது பட்டியலிட முடியுமா? அவர்களது கேவலமான நடவடிக்கையைப் பட்டியலிட்டு, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் ஒரு புத்தகமே வெளியிட்டார். ஆனால், அவற்றையெல்லாம் மறந்துவிட்டு, எந்தக் கொள்கைக் கோட்பாடும் இல்லாமல் – தான் விமர்சித்த அதிமுகவுடனேயே கூட்டணி சேர்ந்துள்ளார்.
இந்த நாடு சுபிட்சமாக இருக்க வேண்டுமென்றால், எங்கள் கூட்டணியின் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்மொழிந்தது போல - ராகுல் காந்தி பிரதமராக வேண்டும். அதன் மூலம் இந்நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களின் ஒற்றுமை என்றும் போல் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். இன்று கொஞ்சங்கொஞ்சமாகச் சிதைக்கப்பட்டு வரும் இந்நாட்டின் இறையாண்மை, இந்திய அரசியல் சாசன சட்டம் மீண்டும் பழைய பாரம்பரியப்படி பாதுகாக்கப்பட வேண்டும். கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி பிரதமரானால், தென்னகத்திலிருந்து ஒரு பிரதமர் பதவியேற்றார் என்ற வரலாற்றை நம் தென்மாநிலங்கள் பெறும்.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், ராமநாதபுரம் நாடாளுமன்றத் தேர்தலில் சகோதரர் நவாஸ் கனி அவர்கள் போட்டியிடுகிறார்கள். அவரை ஆதரித்து தளபதி மு.க.ஸ்டாலின் நேரில் வந்து பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பேசிச் சென்றதை நன்றியுடன் நினைவுகூர்கிறோம்.
இந்தத் தொகுதியின் வேட்பாளரான கவிஞர் கனிமொழி கருணாநிதி அவர்கள் பல்வேறு தனித்திறமைகளைக் கொண்டவர். நமது தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியை அவர் தன்னார்வத்துடன் தேர்ந்தெடுத்துப் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் அவர் போட்டியிடுவதாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே ஏராளமான நலத்திட்ட உதவிகளையும் செய்திருக்கிறார். அதற்கு நம் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் மிகப்பெரிய முயற்சியை எடுத்துள்ளதை நாம் யாரும் மறந்து விடக் கூடாது.
இந்தத் தேர்தலில் தோல்வி பயத்தால், மக்களைத் திசை திருப்ப, துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. யாருக்கு மிரட்டல் விடப்படுகிறது? இதுவரை நடைபெற்ற பல்வேறு சோதனைகளில் அதிமுகவினரிடமிருந்து பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் கைப்பற்றப்பட்டனவே? அவை என்னாயிற்று??
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் நவாஸ் கனியை எதிர்த்து, பாஜக வேட்பாளருக்கு ஆதரவாகப் பேசிச் செல்லும் அக்கட்சியின் தலைவர்கள், “முஸ்லிம்கள் முஸ்லிம்களுக்கு வாக்களித்துவிட்டுப் போகட்டும்! இந்துக்கள் இந்துக்களுக்கு வாக்களியுங்கள்” என்று மிகக் கேவலமான பரப்புரையைச் செய்து சென்றிருக்கின்றனர்.
இந்தத் தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. நமது தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது மகள் நம் வேட்பாளராகவும், பாஜக தமிழக தலைவர் எதிர்முனையிலும் போட்டியிடுகின்றனர். இந்த நாட்டின் பாதுகாப்பை மனதிற்கொண்டு, கனிமொழி அவர்களைப் மிகப் பெருவாரியான வாக்குகள் வேறுபாட்டில் வெற்றிபெறச் செய்ய வேண்டி எனதுரையை நிறைவு செய்கிறேன், நன்றி.
இவ்வாறு அவர் பேசினார்.
அனிதா ராதாகிருஷ்ணன் உரை:
நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் – தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக மூலம் போட்டியிடும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது மகளார் கவிஞர் கனிமொழி கருணாநிதி அவர்களை ஆதரித்து இந்த மாபெரும் பொதுக்கூட்டம் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
சகோதரி கனிமொழி அவர்களைப் பெருவாரியான வாக்குகள் வேறுபாட்டில் வெற்றிபெறச் செய்ய வேண்டிய பொறுப்பு நம் தொகுதி மக்களுக்கு இருக்கிறது என்பதை மனதிற்கொள்வோம். செய்யாத குற்றத்திற்காக சிறை சென்றவர் சகோதரி கனிமொழி அவர்கள். நம் தொகுதி மீது ஒப்பற்ற பாசத்தையும், பற்றையும் அவர் கொண்டிருப்பதால்தான் ஏராளமான நலத்திட்டங்களைத் தொடர்ந்து வழங்கி வந்தார்.
எதிர்த்துப் போட்டியிடும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசும் இடங்களிலெல்லாம், “நான் இந்த மண்ணுக்குச் சொந்தக்காரி” என்று வாய்கிழியப் பேசிக் கொண்டிருக்கிறார். அதற்குத் தகுதியாக இந்தத் தொகுதிக்கு நீங்கள் செய்ததென்ன? தூத்துக்குடி துறைமுக மேம்பாட்டுக்கு ஏதாவது செய்தீர்களா? இங்குள்ள வணிகம் சிறக்க ஏதாவது செய்துள்ளீர்களா? திருச்செந்தூர் கோயில் சுற்றுப் பிரகாரத்தைப் பாதுகாக்க ஏதாவது செய்துள்ளீர்களா?
வாய்க்கு வந்தபடியெல்லாம் நீங்கள் விமர்சித்துக் கொண்டிருக்கும் வேளையிலும், எங்கள் வேட்பாளர் கனிமொழி அவர்கள் மிகவும் நிதானமாகவும், கண்ணியமாகவும் பேசி வருகிறார். மதம், மொழி, ஜாதியின் பெயரால் இந்த நாட்டைத் துண்டாடத் துணிந்துள்ள இந்தக் கூட்டம் இருந்த இடம் தெரியாமல் தோற்கடிக்கப்பட வேண்டும். இந்துக்களின் வாக்கு இந்துக்களுக்கு என்று முழங்குகின்றனர். அப்படியென்றால், நாங்களெல்லாம் யார் என்பதைக் கேட்க விரும்புகிறேன்.
பல்வேறு வாக்குறுதிகளை நாட்டு மக்களிடம் தந்த மோடி, அவற்றுள் எதையாவது செய்திருக்கிறாரா என்றால் இல்லை. மோடியையும், அமித்ஷாவையும் தொலைக்காட்சியில் பார்க்கும் நம் வீட்டுக் குழந்தைகள் பயந்து நடுங்குகின்றன. இந்நாட்டின் சாதாரண மக்களைச் சீரழித்து ஒன்றுமில்லாமலாக்கும் வேலையை மோடி அரசு செய்துகொண்டிருக்கிறது. அதிலிருந்து நம் நாட்டை, நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டுமானால், நாம் இந்தத் தேர்தலில் மிகத் தெளிவாகச் செயல்பட வேண்டும். கவனம் பிசகி விடக் கூடாது.
டி.டி.வி. தினகரனை ஏதோ மிகப்பெரிய சமூக சேவகர் போல சித்தரித்துக் கொண்டிருக்கின்றனர் சிலர். நம் நாட்டின் துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றபோது, எந்த நிர்ப்பந்தமும் இல்லாத நிலையிலும் பாஜகவை ஆதரித்தவர், இன்று மாற்று அணியில் இருப்பதாகக் கூறிக்கொள்கிறார். இன்னொரு பக்கம் சீமான் இலக்கில்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார்.
ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். இந்தத் தேர்தல் இரண்டாவது சுதந்திரப் போர். இதில் இந்நாட்டு மக்கள் வெற்றிபெற்றே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்கள் ஒட்டுமொத்தமாக தமிழகத்திலிருந்து மிகப்பெரும் சக்தியாக நாடாளுமன்றத்திற்குச் சென்று நம் வலிமையைப் பறைசாற்ற வேண்டும்.
தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன் தூத்துக்குடிக்கு வந்த சகோதரி கனிமொழி அவர்களிடம் இந்த காயல்பட்டினத்தைச் சேர்ந்த பெரியவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சொந்தக் கட்டிடம் அமைக்க நிதி கோரியபோது, மனமுவந்து ஒதுக்கித் தந்தார். இந்தத் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகளைச் செய்திருக்கிறார். அவரைப் பெருவாரியான வாக்குகள் வேறுபாட்டில் வெற்றிபெறச் செய்திட உங்களை நான் உளமார வேண்டி விடைபெறுகிறேன், நன்றி.
இவ்வாறு அவர் பேசினார்.
பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் உரை:
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...
நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் – தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக மூலம் போட்டியிடும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது மகளார் கவிஞர் கனிமொழி கருணாநிதி அவர்களை ஆதரித்து இந்த மாபெரும் பொதுக்கூட்டம் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்று, மிகப்பெரும் சக்தியாக நாடாளுமன்றத்தில் திகழ்ந்தது. அதன் பயனாக, 286 நலத்திட்டங்க் அந்த ஐந்தாண்டு காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. அன்று போடப்பட்ட திட்டங்கள்தான் இன்றளவும் செயல்வடிவம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. அதன் பிறகு ஜெயலலிதா அவர்களது கூட்டணியின் சார்பில் 52 பேர் தமிழகத்திலிருந்து டில்லி சென்றபோதிலும், அவர்களால் நம் மாநிலத்திற்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை.
இந்தத் தொகுதியின் வேட்பாளர் கனிமொழி குறித்து நான் அதிகமாகச் சொல்ல வேண்டியதில்லை. கலைஞரின் மகள் என்பதே மிகப்பெரிய தகுதி என்றிருக்க, 6 மாதங்களுக்கு முன்பு – சிறந்த பாராளுமன்றவாதி என்ற பாராட்டைப் பெற்றவர் அவர். நமது இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மறைந்த தலைவர் ஜி.எம்.பனாத்வாலா சாஹிப் பெற்றது போன்ற பாராட்டு அது. பெண்ணுரிமைக்காக வீராங்கனை போல நின்று போரிடுவார். சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர். முத்தலாக் பிரச்சினை வந்தபோது, கடுமையாக எதிர்த்தவர். காரணம், இச்சட்டம் பெண்களைப் பாதுகாப்பதல்ல, அவர்களைச் சீரழிப்பது என்று ஆணித்தரமாகக் கூறினார். அப்படிப்பட்ட சகோதரி இந்தத் தொகுதியில் போட்டியிடுவது இந்தத் தொகுதி மக்கள் பெற்ற பெரும் பேறு. இவர் கனிமொழி மட்டுமல்ல; மணிமொழி. அவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழகத்தின் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொள்ளும் நாள் வரத்தான் போகிறது.
கடந்த ஐந்தாண்டுகளில், மோடி தலைமையிலான அரசு இந்தியாவைக் கொஞ்சங்கொஞ்சமாகச் சீரழித்திருக்கிறது. இந்த நாடு ஏதோ சில காலத்தில் உருவாக்கப்பட்டதல்ல. ஆயிரம் ஆண்டுகளாக சிறுகச் சிறுகக் கட்டமைக்கப்பட்டது இந்த நாடு. இந்நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் என தனிச்சிறப்பு மிக்க பல்வேறு வரலாறுகள் உள்ளன. இந்த காயல்பட்டினத்தின் சிறப்பைக் கூற வேண்டுமானால், எனக்குத் தரப்பட்ட நேரம் போதாது. அதுபோல, இந்த ஒட்டுமொத்த தூத்துக்குடி தொகுதியே பல்வேறு வகையில் இந்த இந்தியத் திருநாட்டின் அடையாளமாகத் திகழ்கிறது.
இந்நாட்டில் வசிக்கும் மக்கள் அனைவரும் மதத்தால், மொழியால், இனத்தால், பிராந்தியத்தால் வேறுபட்டிருந்தாலும் அனைவரும் ஒருதாய் மக்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. நாம் அனைவரும் இந்தியாவின் அடையாளங்கள். தேசத் தந்தை மகாத்மா காந்தி, பண்டித ஜவஹர்லால் நேரு, மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் போன்றவர்களெல்லாம் இந்த நாட்டின் அடையாளங்கள்.
இந்தத் தமிழ்நாட்டிலிருந்து கடந்த நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்த ஜெயலலிதா அம்மையார், “இந்த லேடியா அந்த மோடியா?” என்று கேட்டதும், சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்திய வாழ்வுரிமை மாநாட்டில், “நான் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்ததற்காக வெட்கப்படுகிறேன், அவர்களை நானே தோற்கடித்தேன்... இனி அவர்களுடன் கூட்டணி என்ற அந்தத் தவறைச் செய்யவே மாட்டேன்” என்று கூறியவர்தானே? அந்தக் கட்சி சார்பில் இன்று பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது சந்தர்ப்பவாதம் என்பதைத் தவிர வேறென்ன?
காந்தி இல்லாத இந்தியா, காங்கிரஸ் இல்லாத இந்தியாவைப் படைப்போம் என்று பாஜக சொன்னது. அதன் உண்மைப் பொருள் இஸ்லாம் / முஸ்லிம்கள் இல்லாத இந்தியாவைப் படைப்பது என்பதுதான். காரணம், இஸ்லாம் / முஸ்லிம் என்ற பெயரே அவர்களுக்கு ஆகாது.
உத்தரப் பிரதேசத்தில் ஆளுங்கட்சி பாஜக. 4 கோடி பேரைக் கொண்ட ஒரு மாநிலத்தில் ஆளும் பாஜக சார்பில் அதிகளவில் முஸ்லிம்கள் இருக்க, 403 சட்டமன்றத் தொகுதிகள், 80 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றில் கூட முஸ்லிமை வேட்பாளராக நிறுத்தவில்லை. வட மாநிலங்களில் எங்குமே அது முஸ்லிமை வேட்பாளராக நிறுத்தியது. காரணம், பாஜக இந்துக்களின் கட்சி என்று அது கூறிக்கொண்டிருக்கிறது.
இந்தியா முழுக்க 4,636 சமூகங்கள் உள்ளன. அவரவருக்கென தனித்தனி மொழி, கலாச்சாரங்கள் உள்ளன. வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் இந்த நாட்டின் மகத்துவம். இங்கு வந்து, ஒரே மொழி! ஒரே கலாச்சாரம்! என்று கூறி, ஹிந்தி மொழியைச் சொல்வது போல சமஸ்கிருதத்தைத் திணித்தது. முன்பெல்லாம் மத்திய அரசின் சார்பில் நாளிதழில் வெளியிடப்படும் அரசு விளம்பரங்கள் ஹிந்தி மொழியில் இருக்கும். அது அனைவருக்கும் புரியும். ஆனால், இன்று சமஸ்கிருதத்தில் விளம்பர வாசகம் உள்ளது.
கவ்ரக்ஷா - பசு பாதுகாவலர்கள் எனும் பெயரில் கவ்ராக்ஷஷா – ராட்சதர்களாக செயல்பட்டு, 234 அப்பாவி முஸ்லிம் மக்களை – மாட்டிறைச்சி தின்றார் என குற்றஞ்சாட்டி கொன்று குவித்தனர். அதை இந்த மோடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
இந்தியாவுக்கு வேண்டியவர் இந்திப் பிரதமர் அல்ல. மாறாக, இந்தியப் பிரதமர்தான். அவர் ராகுல் காந்திதான். தமிழகத்திலிருந்து அறிவிக்கப்படுபவர் பிரதமரானது வரலாறு. தற்போதும் அது நடக்கத்தான் போகிறது. அவர் அற்புதமான தலைவர். அவருடன் நாடாளுமன்றத்தில் 5 ஆண்டுகள் ஒன்றாகப் பயணித்திருக்கிறேன். இப்போது அவரைப் பார்க்கும்போது, நேருவே மறுபிறவி எடுத்து வந்தது போல இருக்கிறது. மிகச் சிறந்த தேர்தல் அறிக்கையை அவர் வெளியிட்டிருக்கிறார். இந்நாட்டிலிருந்து வறுமையை படிப்படியாக ஒழிக்க மிகச் சிறந்த செயல்திட்டம் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் அவர் பேசியது அப்படியே தேர்தல் அறிக்கையில் வந்துள்ளது. மாநில சுயாட்சி, நீட் தேர்வு குறித்தெல்லாம் தனது தேர்தல் அறிக்கையில் பேசி, இந்தத் தென்மாநில மண்ணின் குரல்களைப் புரிந்தவராகக் காட்டியிருக்கிறார்.
1200க்கு 1140 மதிப்பெண்கள் பெற்ற திருச்சியைச் சேர்ந்த அனிதா என்ற மாணவிக்கு நீட் தேர்வு என்ற பெயரில் அவரது மருத்துவப் படிப்பு நுழைவைத் தடுத்ததால், அந்த மாணவி தன் உயிரையே மாய்த்துக் கொண்டார். அப்படிப்பட்ட நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்வோம் என்று கூறியிருக்கிறார்.
இந்த ஊர் மக்கள் வணிகத் துறையில் சிறந்தோங்குபவர்கள். தொழில் துவங்கி முன்னுக்கு வர நாடும் இந்நாட்டு மக்கள் தம் தலைக்கு மேலும், கண்களிலும் வைத்து ஒத்தியெடுக்கத்தக்க தேர்தல் அறிக்கை காங்கிரஸ் வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கை. தொழில் தொடங்க இதுநாள் வரை இருந்து வரும் ஏராளமான சிரமமான நடைமுறைகளையெல்லாம் மாற்றி, நினைத்த மாத்திரத்திலேயே தொழில் தொடங்க வாய்ப்பு அளிக்கப்படும் என காங்கிரஸின் தேர்தல் அறிக்கை தெரிவிக்கிறது. அப்படி நடந்தால், Made in India என்பது போல, Made in Tamilnadu என்று குறிப்பிட்டு உற்பத்திப் பொருட்களை உருவாக்கும் காலமும் வரத்தான் போகிறது.
மொத்தத்தில் காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையும், அதற்குச் சற்றும் குறையாத அளவில் தமிழகத்தில் திமுக தலைமையில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையும், இந்த நாட்டு மக்களின் பல்லாண்டு கால ஏக்கங்களையும், எதிர்பார்ப்புகளையும் தாயுள்ளத்துடன் நிறைவேற்றித் தரவல்லவையாக உள்ளன. சொன்னதைச் செய்பவர்கள், செய்வதையே சொல்லக் கூடியவர்கள். அப்படிப்பட்டவர்கள் இணைந்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில் போட்டியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கூட்டணியின் சார்பில், உங்கள் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடும் கனிமொழி அவர்களைப் பெருவாரியான வாக்குகள் வேறுபாட்டில் வெற்றிபெறச் செய்து, இந்த நாட்டிலேயே மிக அதிக வாக்குகள் வேறுபாட்டில் வென்ற நாடாளுமன்ற உறுப்பினர் எனும் வரலாற்றை இந்தத் தொகுதி மக்கள் படைக்க வேண்டும் என வேண்டி விரும்பிக் கேட்டு, எனதுரையை நிறைவு செய்கிறேன், நன்றி.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ் நன்றி கூற, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அதன் கூட்டணிக் கட்சியினர், நகர பொதுமக்கள் இக்கூட்டத்தில் திரளாகக் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை செய்திருந்தது.
|