சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 120-வது செயற்குழு கூட்டம் ஷரஃபிய்யாவில் சகோ.பாளையம் செய்யிது முஹ்யித்தீன் இல்லத்தில் சென்ற 21/06/2019 வெள்ளி மாலை 07:30 மணிக்கு நடந்தேறியது.
மன்றத்தலைவர் சகோ.பிரபு எஸ்.ஜெ.நூர்தீன் நெய்னா தலைமையேற்ற இச்செயற்குழுவிற்கு சகோ.எம்.எஸ்.எல்.முஹம்மது ஆதம் இறைமறை ஓதி கூட்டத்தை துவக்கினார். சகோ.ஜி.எம்.முஹம்மது சுலைமான் வரவேற்புரை நல்கினார்.
கூட்டப்பொருள்:
புதிய செயற்குழு உறுப்பினர்கள் இணைப்பு குறித்தும், இலவச சீருடை குறித்தும், இக்ரஃ கல்வி சங்கத்தின் சந்தாக்களை புதுப்பித்தல் மற்றும் அதற்கான புதிய சந்தாதாரர்களை சேர்த்தல் குறித்தும், மேலும் அன்று விவாதிக்கப்படவேண்டிய இதர கூட்டப்பொருளையும் வாசித்தார் மன்றச்செயலர் சகோ.எம்.டபிள்யு.ஹாமீது ரிஃபாய்.
ஆண்டுதோறும் நமதூர் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் பணியை இவ்வாண்டும் இக்ரஃ மூலம் முன்னெடுக்கப்பட்டது. அதன்படி இவ்வாண்டும் நம் மன்றத்தின் மூலம் அதிகமான மாணவக்கண்மணிகளுக்கு சீருடைகள் வழங்க உதவி செய்யப்பட்டது.
தலைமையுரை:
சென்ற செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், அதன் நிமித்தம் நடந்தேறிய மன்றப்பணிகள், முக்கியமாக ரமலானில் இறை இல்லப்பணியாளர்களுக்காக நாம் வழங்கிய உதவிகளை கோடிட்ட அவர், கடந்த பத்து வருடமாக தொய்வின்றி செய்துவரும் இவ்வுயரிய பணியில் நம் மன்றத்தின் அளப்பரிய பங்களிப்பு நம்மை மகிழச்செய்கிறது என்றும், அப்பணியாளர்களுக்கு இன்னும் நிறைவாக வழங்க இறைவன் துணை புரிய வேண்டுமென்றும் கூறினார்.
உலக காயல் நல மன்றங்களின் மருத்துவ கூட்டமைப்பான ஷிஃபா முயற்சியில் நமதூர் KMT மருத்துவமனையில் அமையவிருக்கும் டயாலிசிஸ் மருத்துவம் குறித்த விபரங்களையும் நகர் சார்ந்த ஏனைய செய்திகளையும் தலைமையுரையாக தந்தார் சகோ.பிரபு எஸ்.ஜெ.நூர்தீன் நெய்னா.
நிதி நிலை:
மன்றத்தின் பொது இருப்பு, சிறப்பு திட்டங்களுக்கான ஒதுக்கீடு மற்றும் கடந்த கூட்டத்தில் வழங்கப்பட்ட உதவிகள் பற்றிய நிதி விபரங்களை விரிவாக சமர்ப்பித்தார் மன்ற துணைப்பொருளர் சகோ.எம்.எம்.முஹம்மது முஹ்யித்தீன்.
கருத்துரை:
மன்ற இணைச்செயலர் சகோ.செய்யிது அஹ்மது மற்றும் மன்ற ஆலோசகர் சகோ.எம்.ஏ.செய்யிது இப்ராஹீம் ஆகியோர் முறையே சந்தாக்களின் முக்கியத்துவம் குறித்தும், நாம் செய்துவரும் நிறைவான பணிகளுக்கு உறுப்பினர்கள் மனமுவந்தளிக்கும் சந்தாக்களே காரணமென்றும், அந்த சந்தாக்கள் தாமதமின்றி வழங்கப்படவேண்டுமென்றும், மேலும், இறை இல்லப்பணியாளர்களுக்கான உதவிகளை சற்று அதிகமாக்க முயற்சிகள் மேற்கொள்ளவேண்டுமென்றும் கூறி அமர்ந்தனர்.
கலந்தாய்வு:
வழமையான உறுப்பினர்களின் ஆரோக்கியமான கலந்தாலோசனை மற்றும் கருத்துக்கூறல் சிறப்பாக இருந்தது. இறை இல்லப்பணியாளர்களுக்கான உதவிகள் குறித்த நம் மன்றத்தின் குரலையே அனைவரும் ஒலித்தனர்.
இக்ரஃ:
உலக காயல் நல மன்றங்களின் கல்விக் கூட்டமைப்பான “இக்ரஃ” வின் கல்வி உதவிகள் மற்றும் இதர பணிகள் பற்றியும், நமதூரிலிருந்து IAS மேற்படிப்பிற்கு செல்ல முயற்சிக்கும் ஆர்வமுள்ள மாணவர்கள் குறித்த விபரங்கள் அதற்கான உதவிகள் குறித்தும் விளக்கியதோடு, ஜூலை மாதத்தில் நமதூரில் நடைபெறவிருக்கும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி (Educational Guidance Prog.) பற்றியும் கூறினார் நம் மன்றத்தின் இக்ரஃ பொறுப்பாளர் சகோ.ஒய்.எம்.முஹம்மது ஸாலிஹ்.
மருத்துவம்:
ஷிஃபா மூலம் பெறப்பட்ட மனுக்கள் வாசிக்கப்பட்டது. அதனைப் பரிசீலித்து கர்ப்பப்பை, விபத்து, கண் சிகிச்சை, வாதம், சர்க்கரை நோய், ஹிரணியா, சிறுநீரக நோய் என பதினோரு மருத்துவ தேவையுடையோருக்கு அதற்கான உதவிகள் அறிவித்து அவர்கள் பரிபூரண நலம் பெற ஏகனிடம் பிரார்த்திக்கப்பட்டது.
அடுத்த செயற்குழு கூட்ட தேதி பின்னர் தெரியப்படுத்தப்படுமென்று அறிவிக்கப்பட்டது.
இரவு உணவு பரிமாறப்பட்டு, சகோ. ரிழ்வான் அஹ்மது நன்றி கூற, சகோ.முஹம்மது லெப்பை இறைவேண்டலுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.
செய்தி - படங்கள்:
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
21.06.2019.
|